Last Updated : 18 Oct, 2013 10:38 AM

 

Published : 18 Oct 2013 10:38 AM
Last Updated : 18 Oct 2013 10:38 AM

குழந்தைகளின் கண்வழியே

பூமி என்னும் அகண்ட நிலம் வரையறைகளுக்கு அப்பாற்பட்டு விரிந்து கிடக்கிறது. ஆனால் இந்த உலகம் இனப் பாகுபாடு, மதம் என்னும் பல கற்பிதங்களால் எல்லைகளுக்குள் சுருங்கி விட்டது. அப்படியான ஓர் இனப்பாகுபாட்டின் கொடூரத்தைக் குழந்தைகளின் கண்கள் வழியாக 'த பாய் இன் த ஸ்ட்ரைப்டு பஜாமாஸ்' படம் காட்சிப்படுத்துகிறது.

ஹிட்லருடைய ஜெர்மனியின் கொடிகள் பறந்துகொண்டிருக்கும் பெர்லின் நகரச்சாலையில் படம் தொடங்குகிறது. சிறுவன் புரூனே தன் தோழர்களுடன் தெருவில் மகிழ்ச்சியாகச் சுற்றி வீடு திரும்புகிறான். அவனுடைய வீடு ஒரு விடைபெறுதல் விருந்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ராணுவத் தளபதியான அவனுடைய தந்தைக்கு வெகுதொலைவில் நாட்டுப்புறத்துக்குப் பணியிட மாற்ற உத்தரவு வந்திருக்கிறது.

அந்தப் புதிய இடம் முழுக்க ராணுவ வீரர்கள்தாம். அவனுடைய வீட்டின் ஜன்னலில் இருந்து பார்க்கும்போது சில கட்டடங்கள் புரூனோவின் கண்களுக்குத் தெரிகின்றன. அது குறித்து விசாரிக்கிறான். அது விவசாயப் பண்ணை எனச் சொல்லப்படுகிறது. அங்கு தனக்கு விளையாட்டுத் தோழமை கிடைப்பார்களா? எனக் கேட்கிறான். மறுநாளே அந்த ஜன்னல் மூடப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் ராணுவ வீரர்களால் சூழப்பட்டுள்ளது. வண்ணமயமான குழந்தைப் பருவமுடைய புரூனோவுக்கு அந்தச் சூழல் மீது வெறுப்பு ஏற்படுகிறது.

எல்லாக் குழந்தைகளையும்போலப் புரூனோவுக்குப் புதிய விஷயங்களைக் கண்டறிவதில் ஆர்வம். நான் ஓர் ஆய்வாளன் என இதைப் பெருமை பொங்கச் சொல்கிறான் புரூனோ. தனிமையால் உந்தப்பட்டு ஒருநாள் தங்கள் வீட்டின் பின்புறம் உள்ள பழைய பொருட்கள் கிடக்கும் அறையின் சிறிய ஜன்னல் வழியாக வெளியேறுகிறான். மரங்களும், புதர்களும் மண்டிக் கிடக்கும் அந்த நிலத்தில் இரு கைகளையும் விரித்து ஒரு பறவையைப் போல பறக்க எத்தனித்து ஓடுகிறான். இடையில் குறுக்கிடும் ஒடையைத் தாண்டியதும் சட்டென்று உயர்ந்தி நிற்கும் முள்வேலி திகைப்படையச் செய்கிறது. அந்த வெளிக்குள் அவனைப் போலவே ஒரு சிறுவன். கோடுபோட்ட பைஜாமா அணிந்திருக்கிறான். அவன் பெயர் சாமூல். உள்ளே கோடுபோட்ட பைஜாமா அணிந்த பலர் குடில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். புரூனோவுக்கு இந்தக் கோடுபோட்ட பைஜாமா ஒரு விளையாட்டைப் போலத் தோன்றுகிறது. “நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” எனக் கேட்கிறான் புரூனோ. “நாங்கள் யூதர்கள்” எனப் பதிலளிக்கிறான் சாமூல்.

புரூனோவுக்கு இந்தப் புதிய தோழமை உற்சாகம் அளிக்கிறது. அவன் சாமூலுக்காகத் தினமும் சாக்லேட், திண்பண்டங்கள் கொண்டு செல்கிறான். அவர்களின் நட்பு பெரியவர்களின் கற்பிதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பரிசுத்தமானதாக இருக்கிறது. இந்த இரு சிறுவர்களின் வழியாகத்தான் துளி இரத்தமும் வன்முறையும் இன்றி இந்தக் கற்பிதங்களின் கொடூரங்கள் சித்தரிகப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் பள்ளிகள் ஏதும் இல்லாததால் புரூனோவுக்கும் அவன் அக்காவுக்கும் பாடம் கற்பிக்க ஓர் ஆசிரியர் வருகிறார். அவர் ஹிட்லரின் இனவெறியைக் கற்பிக்கிறார். சகாஸக் கதைகளில் ஈடுபாடுள்ள புரூனோவுக்கு அது பிடிக்கவில்லை. அந்த ஆசிரியர் யூதர்களைச் சாத்தான்கள் என்கிறார். புரூனோவுக்கு மிகப் பலவீனமாக இருக்கும் அவன் தோழன் சாமூல் நினைவுக்கு வருகிறான்.

இதற்கிடையில் யூதர்களுக்கான வதை முகாமின் புகைக்கூண்டில் இருந்து வரும் துர்நாற்றம் மிகுந்த புகைக்கான காரணம் புரூனோவின் அம்மாவுக்குத் தெரியவருகிறது. அவளால் இந்த இனப்படுகொலையை ஏற்க முடியவில்லை. தன் கணவனுடன் வாக்குவாதம் செய்கிறாள். தன் குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சுகிறாள். இறுதியில் தன் குடும்பத்தை அங்கிருந்து இடமாற்றம் செய்ய புரூனோவின் தந்தை தீர்மானிக்கிறார். இந்தக் காட்சிகளிலும் புரூனோவின் கண்கள் வழியாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன்பு முகாமுக்குள் தொலைந்து போய்விட்ட சாமூலின் தந்தையைக் கண்டுபிடித்துத் தர புரூனோ வாக்களிக்கிறான். அதன்படி வேலியைத் தாண்டி சாமூல் கொண்டுவரும் கோடுபோட்ட பைஜாமாவை அணிந்துகொண்டு நுழைகிறான். ஹிட்லரின் கொடியுடன் தொடங்கிய படம் மூடப்படும் கதவுகளுடன் முடிகிறது. மார்க் கெர்மன் இயக்கியுள்ள இங்கிலாந்துப் படமான இது அயர்லாந்து எழுத்தாளர் ஜான் போய்னேயின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x