

1939ஆம் ஆண்டு வரவிக்கிரயம் என்னும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அது ஒரு முக்கியமான சோகக் காட்சி. அந்தப் படத்தின் நாயகியான 13 வயது பெண்ணுக்கு அந்தச் சோகக் காட்சியில் நடிக்க இயலவில்லை. அவளுக்கு அழுகை வரவில்லை. இயக்குனர் சி.புல்லையா அந்தச் சிறு பெண்ணை நோக்கிக் கத்தி இருக்கிறார். பயந்துபோன அந்தச் சிறுமி அழுதிருக்கிறார். அந்தக் காட்சி வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.
பிறகு அந்த 13வயது சிறுமி தென்னிந்தியச் சினிமாவின் முக்கியமான ஆளுமையாக வலம் வந்தார். நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி. செம்படம்பர் 7,. 1925ஆம் ஆண்டு இன்றைய ஆந்திராவில் உள்ள தொத்தாவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பானுமதி சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன்னுடைய மகளின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை பொம்மராஜூ இலட்சியமாகக் கொண்டிருந்தார். தன் முதல் படத்திலேயே அவர் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.
பானுமதி தன் முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாலதி மாதவன், தர்மபத்தினி போன்ற பல தெலுகு படங்களில் நடித்தார். அவர் கிருஷ்ண பிரேமா (1943) படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போதுதான் அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை பானுமதி சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதன் பின்னால் பெற்றோரின் ஆசியும் கிடைத்தது.
திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடுவெடுத்திருந்தார். ஆனால் பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார்.
இச்சமயத்தில் பானுமதியும் அவர் கணவரும் இணைந்து படம் தயாரிக்க முடிவெடுத்தனர். 1947இல் வெளிவந்த ரத்னமாலா அவர்களின் தயாரிப்பில் வந்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுகு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.
பானுமதி 1966இல் பத்மஸ்ரீ, 2003இல் பத்மபூசன் ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளார். தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியற்றியுள்ளார். பானுமதி டிசம்பர் 25, 2005ஆம் ஆண்டு காலமானார். நடிப்பு மட்டுமின்றி மாசிலா உண்மைக் காதலி, பூவாகிக் காயாகிக் கனிந்த மரமொன்று போன்ற பல பாடல்களும் இன்றைக்கு பானுமதி என்னும் ஆளுமைக்கு மங்காத நினைவைப் பெற்றுத் தருபவை.
(தமிழில் ஜெரீ ஜெய்)