

காட்டில் சீதை
விஜய் டி.வியில் ‘சீதையின் ராமன்’ உருவாக்கத்தில் பல வால்மீகிகள். நந்திகிராமம் என்ற இடத்தில் ராமனின் பாதுகைகளை வைத்து பரதன் ஆட்சிசெய்ததாக அறிந்தவர்களுக்கு ஒரு செய்தி. அப்போது அயோத்தியை சத்ருக்னன் ஆட்சி செய்தான் என்கிறார்கள். ராமனின் வனவாசத்தின்போது நிலத்தில் ஆழமான பள்ளத்தை உருவாக்கிக்கொண்டு அதற்குள்தான் இரவுகளில் பரதன் தூங்கினானாம். ‘அண்ணன் ராமன் நிலத்தில் படுத்து உறங்குவார். அவரைவிடக் கீழான இடத்தில்தான் நான் உறங்க வேண்டும்’ என்கிறான் பரதன்.
சத்ருக்னன் ஆட்சியில் ஒரு வழக்கு வருகிறது. கடும் மழை காரணமாக ஓர் இளைஞன் வசிக்கும் குடிசையில் ஓர் இரவு தங்க நேர்ந்துவிடும் இளம் பெண்ணை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது வழக்கு. ‘பெண்ணே, நீ கவுரவமானவள். தவறு செய்யாதவள். எனினும் ராஜ நியதிப்படி நீ இரண்டு வருடங்கள் நாட்டை விட்டு வனத்துக்குக் கடத்தப்படுவாய்’ என்று சத்ருக்னன் தீர்ப்பளிக்க, ‘மன்னா இதற்கான பலனை உன் குடும்பமே அனுபவிக்கும்’ என்று மனதுக்குள் பொருமுகிறார் அந்தப் பெண்ணின் தந்தை. பல எபிசோடுகளுக்குப் பிறகு (ஓரிரு வருடங்கள்?) குடிமகன் ஒருவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பும் நிகழ்வுக்கான முன்னோட்டம் இது என்பது புரிகிறது. புத்திசாலித்தனமான இடைச்செருகல்கள்தான்.
அழகுத் தீவு
மொரீஷியஸ் தீவின் அழகை அங்குலம் அங்குலமாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டனர் டிராவல் எக்ஸ்.பி. சானல்காரர்கள். கடல் சூழ்ந்த அந்த நாட்டைக் காணக் காணப் பரவசம்தான். அங்குள்ள பிரம்மாண்டமான பசுமைப் புல்வெளி படர்ந்த கோல்ஃப் மைதானம் காட்டப்பட்டது. அடடா என்று அதைப் பாராட்டும்போதே இதைப் பராமரிக்க தினமும் எத்தனை தண்ணீர் செலவழிக்கப்படும் என்ற எண்ணமும் கருத்தில் தோன்றி உற்சாகத்தைக் குறைத்தது.
தலைக்கு ஆபத்து
பாலிமர் தொலைக்காட்சியில் மாத்யூ என்பவரின் தலைப் பகுதியில் ரத்தம் வடிவதைக் காட்டினார்கள். ஹெல்மெட் அணிந்து செல்லாததால் காவலர்கள் அவரை இப்படித் தாக்கினார்களாம். விஷயம் பெரிதாக, குறிப்பிட்ட காவலரின் செய்கை முதிர்ச்சியற்றது என்று கேரளத்தின் போக்குவரத்து அமைச்சர் அறிவித்தார். ‘ஹெல்மெட் போட்டுக்கலேன்னா தலைக்கு ஆபத்து!’ என்பதற்கு இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது. ஜாக்கிரதை!
அது பேஷன்!
சன் TVயின் SIIMA விருதுகள் நிகழ்ச்சி. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்தான் கேமராவுக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தனர். சிவகார்த்திகேயன் போகிற போக்கில் அனிருத்தின் உடையைக் கிண்டல் செய்தார். பாதி லுங்கி பாதி பான்ட் என்பதாகத் தோற்றமளித்த அந்த உடை ஏதோ ஒரு நாட்டின் ஃபேஷனாகத்தான் இருக்க வேண்டும். அதை அவர் இளைஞர் உலகத்துக்குத் தெரிவித்துப் புண்ணியம் சேர்த்துக்கொள்ளலாமே.
குஜராத் குழம்பு
ஜீ தமிழ் சானலில் ஒளிப்பரப்பாகிய அஞ்சறைப் பெட்டி நிகழ்ச்சியில் குஜராத்தி கடி (கிட்டத்தட்ட நம் ஊர் மோர்க்குழம்பு) செய்வதை விளக்கிக்கொண்டிருந்தார்கள் ‘சஹானா’ புகழ் அனுராதா கிருஷ்ணமூர்த்தியும் ப்ரியாவும். தெளிவாகத்தான் செயல்முறை இருந்தது. ஆனால், இருவருக்குமான அலைவரிசையில் எதுவோ மிஸ் ஆனது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் அனுராதாவின் முகத்தில் அன்று ஏனோ ‘கடுகடுப்பு’.