

பதினான்காவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று திரையிடப்பட்ட படங்களுள் கிளாஷ் (clash), உட்டோபியா (Uttopiyo) ஆகிய இரு படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் நல் வரவேற்பைப் பெற்றன. இரண்டாம் நாளான இன்று 20-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. இவற்றுள் பிரான்ஸ், கானா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, போலந்து, ஹங்கேரி, ஈரான், இத்தாலி, பின்லாந்து, வெனிசுலா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில், கிரீஸ், நார்வே உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட உள்ளன.
குடும்பத்தைத் தேடி
‘த கட்’ (The Cut) என்னும் ஜெர்மனியப் படம் இன்று திரையிடவிருக்கும் படங்களுள் விஷேசமானது. ஒட்டமன் பேரரசு ஆட்சிக் காலத்தின் நடந்த ஆர்மினிய இனப் படுகொலைகளைப் பற்றிய படம். இந்த இனப் படுகொலையிலிருந்து தப்பிக்கும் ஒருவன் இழந்த தன் குடும்பத்தைத் தேடி அலைகிறான். இந்தத் தேடுதலே படமாக பார்வையாளர்கள் முன் விரிகிறது. பல உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது இந்தப் படம்.
குற்றத்தின் ஹார்மோனியம்
கான் திரைப்பட விழாவில் நடுவர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஹார்மோனியம்’ (Harmonium) ஜப்பானியப் படமும் கவனிக் கதக்கவை. மனைவி, மகள் என அமைதியான சூழலில் வாழ்ந்து வரும் டோஷியோ என்னும் ஒரு சாமானியனின் குடும்பத்தின் கதை இது. அவன் ஒரு இரும்புப் பட்டறை வைத்திருக்கிறான். அந்தப் பட்டறைக்கு டோஷியோவுக்குத் தெரிந்த ஒருவன் உதவியாளராக வேலைக்குச் சேர்கிறான்.
கொலைக் குற்றத்துக்காகச் சிறைத்தண்டனை பெற்றுத் திரும்பியிருக்கும் அவன் டோஷியோவின் குடும்பத்தில் ஒருவன் ஆகிறான். அவனது மகள் ஹார்மோனியம் கற்க உதவுகிறான். மனைவிக்கும் இவனுக்கும் இடையிலும் ஒரு நெருக்கம் உண்டாகிறது. இதையெல்லாம் டோஷியோ கவனித்துவருகிறான். இந்தப் புதிய உறவு அவர்களது எளிய குடும்பத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது மீதிக் கதை.
வீதிக்கு வரும் வாழ்க்கை
‘மாரோஸா’ (Ma'Rosa) என்னும் பிலிப்பைன்ஸ் படம் கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட படம். மேலும் கான் திரைப்பட விழாவின் சிறந்த நடிகைக்கான விருது இந்தப் படத்தில் மாரோஸாக நடித்த ஜாக்லீன் ஜோஸூக்குக் கிடைத்தது. மனிலாவில் மாரோஸா சிறிய அளவில் கடை ஒன்றை நடத்திவருகிறார். அதிலுள்ள வருமானம் போதாதபோது அவரும் அவரது கணவரும் சேர்ந்து கடையிலேயே போதைப் பொருளையும் விற்கத் தொடங்குகிறார்கள். ஆனால் போதைப் பொருள் தடுப்புக் காவலர்கள் அதைக் கண்டுபிடித்து, தம்பதியர் இருவரையும் கைதுசெய்து விடுகிறார்கள். அவர்களை விடுவிக்க லஞ்சம் கேட்கிறார்கள். தங்களது பெற்றோரை விடுவிக்க மாரோஸாவின் நான்கு குழந்தைகள் முயல்கிறார்கள். அதற்காக எதுவும் செய்யத் துணிகிறார்கள். இதுதான் இந்தப் படத்தின் கதை.
ஈரானியப் படமான பரோல் (Parole) சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளியே வரும் சிறுவனை எப்படிச் சமூகம் நடத்துகிறது, அதனால் உருவாகும் முரண்பாடுகளால் அவன் வாழ்க்கை என்ன மாதிரி ஆகிறது என்பதைப் பேசுகிறது.
இவை அல்லாமல் ‘பிரெஞ்சு இளம் இயக்கு நர்களின் தேர்வு’ என்ற பிரிவின் கீழ் இன்று திரையிடப்படும் ‘ஏ ஸ்ட்ரோம் சம்மர்’ (A Stormy Summer) என்னும் பிரெஞ்சுப் படமும் கவனிக்கத் தக்க படமாகச் சொல்லப்படுகிறது. மொத்ததில் இன்றைக்குத் திரையிடப்படவுள்ள படங்கள் நமது வாழ்க்கையை விசாரிக்கும் தன்மை கொண்டவை எனலாம்.