

மிகச் சாதாரணமான கதையொன்றின் மூலம் ஓர் அசாதாரணத் திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ‘ஸ்கூல் ஆஃப் ராக்’(School of Rock) நல்ல எடுத்துக்காட்டு. 2003-ல் வெளியாகி வெற்றிபெற்ற காமெடிப் படம். ஒரு ராக் இசைப் பாடகன் ஆள்மாறாட்டம் செய்து பள்ளிக்கூட ஆசிரியர் ஆவதுதான் கதை. ரிச்சர்ட் லிங்க்லேட்டர் இயக்கி, ஜே பிளாக் நடித்த படம் இது.
நாயகன் ராக் இசைக் குழுவொன்றில் பாடி வருகிறான். அவன் செய்யும் அசட்டுத்தனங்களும் அதீதச் சேட்டைகளும் அவன் குழுவையோ ரசிகர்களையோ பெரிதும் ஈர்க்கவில்லை. இசையுடனும் நடனத்துடனும் அப்படி ஒரு பிணைப்புடன் வாழ்கிறான். இருந்தும் அவனைக் குழுவிலிருந்து விலக்க, அவன் தன் நடு விரலைக் கோபமாகக் காட்டிவிட்டு வீரமாக வெளியேறுகிறான்.
நண்பன் ஆதரவளித்தாலும் அவனுடைய காதலி இவனை வெறுக்கிறாள். ‘வாடகைப் பணம் கூடப் பகிராத இந்த வெட்டிப்பயலுக்கு ஏன் உதவுகிறாய்? அவனிடமிருந்து விலகு’ என்று நண்பனை நச்சரிக்கிறாள்.
நண்பன் வாயில்லாப் பூச்சி. இந்நிலையில் நண்பனுக்கு ஒரு பகுதி நேர ஆசிரியர் பணி வாய்ப்பு வருகிறது. அவசரப் பணத்தேவைக்கு நண்பன் பெயரைப் பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்து அந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்கிறான். கல்வி பற்றி எந்த அக்கறையும் இல்லாத நம் நாயகன் பள்ளியில் பொழுதைக் கழித்துவிட்டுக் கூலியை வாங்கிக்கொண்டு ஓடிவிடுவதுதான் திட்டம்.
ஆனால் அந்த மாணவர்களிடம் இசை இருப்பது தெரிந்தவுடன் எடுக்க வேண்டிய பாடத்திற்குப் பதில் ராக் இசை சொல்லித் தருகிறான். வகுப்பையே ஓர் இசைக் குழுவாக்குகிறான். அந்தக் குழுவின் அத்தனை நிர்வாகப் பொறுப்புகளுக்குமே அவர்களைத் தயார் செய்கிறான். இசைப்போட்டியில் கலந்துகொள்ளலாம் என்றும் திட்டம்.
பள்ளியோ கண்டிப்புக்குப் பெயர்போனது. இளம் முதல்வர் ஒரு கண்டிப்பான பெண்மணி. பெற்றோர்களின் எதிர்பார்ப்பிற்குப் பள்ளியை நடத்த மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். நாயகன் தன் சாமர்த்தியத்தால் அவரையும் கவர்கிறான்.
இசைப் போட்டிக்குச் செல்லும்முன் குட்டு வெளிப்பட்டுப் பள்ளியை விட்டு வெளியேற நேர்கிறது. இருந்தும் மாணவர்கள் தாமாக இவர் பின் அணி வகுத்து இசைப் போட்டிக்குச் செல்ல, பிள்ளைகளைக் கடத்தினான் என்று போலீஸை அழைத்துக்கொண்டு நிகழ்ச்சிக்குச் செல்கின்றனர் பெற்றோர்களும் ஆசிரியர்களும். தன் பழைய குழுவுடன், தன் மாணவர்களைக் கொண்டு உருவாக்கிய அணியை வைத்துக்கொண்டு போட்டி போடுகிறான். இருந்தும் பரிசு பழைய குழுவிற்கே செல்கிறது.
ஆனால் மாணவர்கள் இசைத்த பாடல் மக்கள் ஆதரவுடன் “ஒன்ஸ் மோர்” கேட்கப்பட, மீண்டும் பாடலை அரங்கேற்றித் தங்கள் திறமையை மாணவர்கள் நிலைநாட்டுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு இவ்வளவு திறமையா எனத் திகைத்துக் கை தட்டுகிறார்கள் பெற்றோர்கள்!
இவ்வளவுதான் படம்! ஆனால் நன்கு கட்டமைக்கப்பட்ட திரைக்கதை, இயல்பான நகைச்சுவை வசனங்கள், நிஜமான ராக் பாடல்கள் எனப் படம் ஒரு இனிமையான அனுபவமாகிறது.
நாயகனாக வரும் பிளாக் படம் முழுவதையும் அனாயாசமாகத் தன் தோளில் சுமக்கிறார். உற்சாகம், எள்ளல், கோபம், விரக்தி, அசட்டுத்தனம் என அனைத்தையும் தன் உடல் மொழியில் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். இசையும் நடனமும் இவர் மூலம் அவ்வளவு நம்பத்தகுந்த அளவு படமாக்கப்பட்டுள்ளன.
ராக் இசை கலகக்காரர்களின் இசை. அமைப்பின் மீது உள்ள தங்கள் கோபத்தை, அதிருப்தியை இசையாய் நடனமாய் வெளிக்காட்டும் முயற்சி அது. சமூகம் ஒரு கட்டுக்குள் நெருக்கும்பொழுது இது போன்ற மீறல்கள் இசை, இலக்கியம், நாடகம் என ஏதோ ஒரு வடிவத்தில் பீறிட்டு வருவதை வரலாறு தொடர்ந்து பதிவுசெய்துவருகிறது.
ராக் என்பது வெறும் இசை அல்ல என்று சொல்லி, அதன் தத்துவ, சரித்திர, உளவியல் கூறுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் இடத்தில் படம் கனம் சேர்கிறது. போதை, உடல் துர்நாற்றம், ஒழுங்கின்மை, சோம்பல், மரியாதை தராத அதீதக் கெட்ட வார்த்தைகள், கொண்ட மொழி என்று வாழும் ஒரு ராக் பாடகன் பள்ளிக்கூட ஆசிரியர் ஆகும்போது நிகழும் இரு பக்க உளவியல் மாற்றங்களும் சரியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
கல்வி என்பது தன்னை அறியும் முயற்சி. அதற்குச் சுதந்திரமான சிந்தனை தேவை. கேள்விகள் முக்கியம். மனித உறவுகள் இங்குப் பேணப்பட வேண்டும். அதை வழி நடத்தும் ஆசிரியன் பயம் அற்றவனாய், அன்பு செலுத்துபவனாய், உண்மையுள்ளவனாய் இருத்தல் அவசியம்.
எல்லாவற்றையும்விட ஆசிரியனும் சிறந்த மாணவனாக இருக்க வேண்டும். இவற்றைத் தன்னை அறியாமல் செய்யும் இந்தப் பட நாயகன் மாணவர்களிடம் நன்மதிப்பை, அன்பை, பின் தொடர்தலைப் பெறுகிறான்.
சமூக மதிப்பீடுகளிலும் வியாபாரங்களிலும் சிக்கித் தவிக்கும் இன்றைய கல்வி முறையை மறைமுகமாகக் கேலி செய்கிறார் இயக்குநர். நிஜம் அறிந்தும் வெளியே வரத் தவிக்கும் முதல்வராய்க் கதாநாயகி வேடமும் அத்தனை அழகு. நகைச்சுவை உணர்வும் இசை ஆர்வமும் சமூகக் கட்டுக்குள் சிக்காத சிந்தனையைப் பெற்றவர்கள் எவ்வளவு பெரிய பாக்கியவான்கள்? அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் நம் நாயகன் பாத்திரம்.
நம் சூழலுக்கு இந்தக் கதையும் படமும் பொருந்திப் போகின்றன. ராக் நம் கலாச்சாரம் இல்லை என்றாலும் அதன் இணை இசை வடிவங்கள் இங்கு உள்ளன. கல்வி முறை இங்கு குழந்தைகள் மேல் வன்முறை செலுத்தும் வண்ணம் உள்ளதால் இக்கதையை எவ்வளவு மிகைப்படுத்தி எடுத்தாலும் அது நம் இயல்பாகவே தோன்றும்.
சரி, என் கதாநாயகத் தேர்வு? யார் நடித்தாலும் சிறப்பாகவே அமையும். இருந்தும் என் சாய்ஸ் ஒரே ஒருவர் தான். நடிகர் கரண்!
தொடர்புக்கு- gemba.karthikeyan@gmail.com