

இசை மொழியைக் கடந்தது. ஆனால், பாடல்கள் மொழியைச் சார்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளன. அதிலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் காணக் கிடைக்கும் வகைமைகள் ஏராளமானவை.
தமிழ்த் திரையில் பாடல்கள் அமைந்த தன்மைக்கும் இந்தித் திரைப்படங்களில் பாடல்கள் அமைந்த விதத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைப் போலவே வேற்றுமைகளும் உள்ளன. இந்தி மொழி தமிழ் மொழி போல் ஒரே பின்புலத்திலிருந்து பிறந்ததல்ல. வேறுபட்ட பல கலாச்சார பின்புலங்களிலிருந்து, உருது, மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளின் புலங்களிலிருந்து வந்த மொழி.
இப்படிப்பட்ட ஒரு மொழியின் கவிஞர்களை உலகம் எப்படி ஏற்றுக்கொண்டு வளம் பெற்றது என்பது பற்றியும், இந்திப் பாடல்களின் பாடுபொருட்களில் உள்ள வித்தியாசமான அம்சங்கள் பற்றியும் அவற்றின் பின்னணியோடு அசைபோடுவதே இந்தத் தொடரின் நோக்கம்.
கலாச்சார வரையறைகள்
இந்தித் திரைப் படங்களின் மையமாக மும்பை என்ற அந்தக் கால பம்பாய் விளங்கினாலும் அதன் அனைத்து அங்கங்களும் மேற்கு வங்காளத்தைத் தாயகமாகக் கொண்ட, ‘பெங்காலி’ என்று பொதுவாக அறியப்பட்ட வங்காளிகளிடம் மட்டுமே இருந்தன. இது அன்று இருந்த தென்னிந்திய, குறிப்பாகத் தமிழ் படங்களின் சூழலுக்கு மாறுபட்ட ஒரு நிலை. அப்போதெல்லாம் தமிழகத்தில் ஸ்டூடியோக்கள் அதிகம் இல்லை. இதனால் பல தமிழ்ப் படங்கள் கல்கத்தாவில் படமாக்கப்பட்டாலும், படங்களின் வசனகர்த்தாக்கள் மற்றும் பாடலாசிரியர்கள் நன்றாகத் தமிழ் கற்ற, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களாகவே இருந்தனர். எனவே, அவர்கள் எழுதிய வசனங்கள் மட்டுமின்றி பாடல் வரிகளும் தமிழ் கலாச்சார வரையறைக்கு உட்பட்டே இருந்தன.
ஆனால் வங்காளிகள் தயாரித்த இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல் வரிகள் எழுத வந்த உருதுக் கவிஞர்களுக்கு மேற்கண்ட கலாச்சார வரையறைகள் ஏதுமில்லை. பாரசீக, முகலாயப் பண்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில் பெண் என்பவள் அழகின் வடிவம் மட்டுமே. போதையூட்டும் அவள் கண்களும் பரவசப்படுத்தும் அவள் கூந்தலும் மற்ற உணர்வுகளைக் கடந்த பாடுபொருளாக அமைய வல்லவை.
தெளிவான புரிதலும் ரசனையும்
இந்த நுட்பமான வேறுபாட்டை அறிந்துகொண்டு அன்றைய இந்திப் பாடல்களை நாம் ரசிக்கும்பொழுது அதை இயற்றிய கவிஞர்களின் ஆற்றல் நமக்குத் தெளிவாகப் புலப்படும்.
சில எளிய உத்திகள், சான்றுகள், இந்தி மொழி பேசுபவர்கள் அதிகமாக அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இந்தி மற்றும் உருதுச் சொற்கள் மூலம் ஆழமான கவிதை சார்ந்த கருத்தை அந்தக் கவிஞர்கள் வெளிப்படுத்திய விதம் அலாதியானது. இந்த வேறுபாட்டை உணர்ந்துகொண்டு அதனை ரசிக்கும்போது அந்த ரசனையே அலாதியானதாக மாறிவிடுகிறது.
காதல், ஏமாற்றம், சோகம் ஆகிய உணர்வுகளுக்கு மட்டும் இடம் தரும் பாடல்கள் மட்டும் என்று இல்லாமல் நாயகியின் அங்க வர்ணனை, இயற்கையுடன் அவளை இணைத்துப் பாடும் மிகைப்படுத்தப்பட்ட வர்ணனையை உள்ளடக்கிய பாடல்கள் ஆகியவையும் இந்திப் பாடல்களில் அதிகம் உண்டு.
காலப்போக்கில் இந்தித் திரையுலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பாடல்களும் மாறின. பாடுபொருள்களும் மாறின. சுவாரஸ்யமான இந்தப் பயணம் பல விஷயங்களை நமக்குச் சொல்கின்றன.
இவை அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதே இந்தத் தொடரின் நோக்கம். இந்திப் பாடல்களை எழுதிய கவிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு கள் ஆகியவையும் இந்தத் தொடரில் போகிறபோக்கில் இடம்பெறும்.
வாருங்கள் இந்திப் பாடல்களின் கரையோரம் சென்று அந்தக் கடல் நீரில் கொஞ்சம் கால் நனைப்போம்...