

கன்னடத்தில் வித்தியாசமான கதைகள் நிறைய வருவது சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் வெளியான 'ஜிகர்தண்டா' படத்தை கன்னடத்தில் புதுமுகங்களை வைத்து நான் தயாரித்தேன். எப்போதுமே புதுமையான விஷயங்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும், எப்போதுமே மக்கள் விரும்பும் படங்களைப் பண்ண வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று சிரிக்கிறார் சுதீப். 'நான் ஈ' படத்தின் மூலம் உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றவர். தமிழில் ‘முடிஞ்சா இவனப் பிடி' மூலம் நாயகனாக அறிமுகமாகவிருக்கிறார்.
‘முடிஞ்சா இவனப் பிடி' படத்தை ஒப்புக்கொள்ளக் காரணம் என்ன?
இந்தக் கதையின் கமர்ஷியல் அம்சங்கள்தான் காரணம். பெரிய ஜாம்பவான்களின் படங்களையெல்லாம் இயக்கியவர் கே.எஸ். ரவிக்குமார். அவரோடு பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. என் டைரியில் நான் யாரோடெல்லாம் பணியாற்றியிருக்கிறேன் என்று பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. நித்யா மேனன், ரவி சங்கர் போன்ற நல்ல நடிகர்களோடு இணைந்து நடிப்பதால் என்னுடைய நடிப்பு இன்னும் மெருகேறும். என் மீது நம்பிக்கை வைத்து என்னால் முடியும் என அழைக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ‘நான் ஈ' படத்துக்காகத் தென்னிந்திய ரசிகர்கள் காட்டிய அன்புக்கு எல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை.
வில்லனாகப் பெரிய அறிமுகம் கிடைத்திருக்கிறது, பிறகு ஏன் நாயகன் ஆசை?
என்னைப் பொறுத்தவரை நாயகன், வில்லன் என்றெல்லாம் இல்லை. ஒரு கதாபாத்திரம்; அவ்வளவுதான். ஒரு படம் முடிவடையும்போது எந்தக் கதாபாத்திரத்தை உங்கள் மனதில் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு நாயகனாக எல்லா எல்லைகளையும் நான் கடந்தாக வேண்டும். சினிமாவின் மீது இருந்த காதலால் நாயகனாக உள்ளே வந்தேன். இங்கு நட்சத்திர அந்தஸ்து வேண்டுமென்று நான் கேட்கவில்லை. ‘சேது' படத்தை கன்னடத்தில் பண்ணும்போது கிச்சா என்ற பெயர் வந்தது. அதை என் பெயரோடு சேர்த்துக்கொண்டேன். அவ்வளவுதான். எனக்கென்று அடைமொழி எல்லாம் போட்டுக்கொள்வதில்லை. நமக்குச் சவாலான கதாபாத்திரத்தைப் பண்ணினால் வெற்றி என்பது தானாகத் தேடி வரும்.
ரஜினிக்குப் பிறகு நீங்கள்தான் கன்னடத்திலிருந்து வந்து நாயகனாக நடித்திருக்கிறீர்கள்…
ரஜினி சார் மட்டுமல்ல அனைத்து நடிகர்களுமே பணியாற்றுவதற்குத்தான் வந்தார்கள். நடிகர்கள் அனைவருமே அன்பு, மரியாதை உள்ளிட்டவற்றுக்காகத்தான் வருகிறார்கள். அவை இரண்டும் இல்லையென்றால் நாயக அந்தஸ்துக்கு மதிப்பில்லை. அனைத்து நடிகர்களுமே செய்த வேலைதான் அவர்களை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதே போலத்தான் நான் இங்கு எதையும் எதிர்பார்த்து நாயகனாக வரவில்லை. இங்கேயும் நமக்கு ஒரு படம் கிடைத்திருக்கிறதே, அதனால் பண்ணியிருக்கிறேன்.
நாயகன், வில்லன், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல தளங்கள் பணியாற்றுகிறீர்களே…
அனைத்துப் பணிகளுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். உங்களுக்குப் பிடிக்காத வேலைக்காக நேரம் ஒதுக்குவது தேவையற்ற ஒன்று. என்னிடம் கிரிக்கெட், உணவு சமைப்பது, தோட்ட வேலை என எதைக் கேட்டாலும் உடனே, இறங்கிவிடுவேன். அனைத்தையும் காதலித்து ஏற்றுக்கொண்டதால் என் வாழ்க்கை அழகானதாக மாறியது. இப்படிச் செய்வதால் எப்போதுமே என்னை இளமையாக உணர்கிறேன். வாழ்க்கையில் ஏதோ சுவாரசியம் இருக்க வேண்டும். வெற்றி என்பது மற்றவர்களோடு போட்டி போட்டுக் கிடைப்பது அல்ல, உங்களுடனே போட்டி போட்டுப் பெற்றுக்கொள்வதுதான் வெற்றி.
‘பாகுபலி'யில் சிறு வேடத்தில் நடித்திருந்தீர்கள். ‘பாகுபலி' 2-ல் இருக்கிறீர்களா?
‘நான் ஈ' படத்தில் ராஜமெளலியோடு பணியாற்றினேன். 'பாகுபலி' படத்தில் இந்த ரோல் இருக்கிறது என்று அழைத்தார். போய்ப் பண்ணினேன். அவ்வளவுதான். நான் எப்போதுமே உறவுகளின் அடிப்படையில் பணியாற்றுபவன். எந்த ஒரு நடிகரும் இயக்குநரோடு நல்ல நண்பராக இல்லாமல் படத்தில் பணியாற்ற முடியாது. அந்த வகையில் ராஜமெளலி நம்பிக்கையோடு அழைத்தார், பண்ணினேன். அவ்வளவுதான். ‘பாகுபலி -2'க்காக ராஜமௌலி அழைப்பார் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. கூப்பிட்டால் போவேன், இல்லையா படத்தைப் பார்க்கப் போவேன்.
தமிழில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டீர்களா?
தமிழில் நான் நாயகனாக எப்போதோ வந்திருக்க வேண்டியது. கன்னடத்தில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களால் 2 பெரிய வாய்ப்புகளைக் விட்டுவிட்டேன். மணிரத்னம் என்னை ‘அலைபாயுதே', ‘யுவா' ஆகிய படங்களில் நடிக்க அழைத்தார். பாலா ‘பிதாமகன்' படத்துக்காக அழைத்தார். நாயகனாக நடிக்கிறேன் என்பதற்காக வில்லனாக நடிக்க மாட்டேன் என்றில்லை. எனது நடிப்புக்குத் தீனி கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம்.
தமிழில் எந்த நாயகனோடு நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? ஏன்?
‘லிங்கா'வில் ரஜினி சாரோடு நடித்துவிட்டேன். அஜித்தோடு நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எனக்கும் அவரைப் போலவே பைக், கார்கள் என ஒரே மாதிரியான ரசனை உண்டு. இ-மெயில் மூலமாக நீண்ட காலமாகப் பேசிக்கொண்டிருந்தோம். தற்போது கொஞ்ச காலமாகத் தொடர்பில் இல்லை. அவருடைய நட்சத்திர அந்தஸ்துக்காக அல்ல, அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதற்காகத்தான் அவருடன் நடிக்க ஆசை. ஒரு நாள் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
படம்: எல். சீனிவாசன்