

பெற்றோருடன் சென்னையில் வசிக்கும் கிருஷ்ணா (கலையரசன்) நடுத்தரக் குடும் பத்தை சேர்ந்தவர். இவரது தங்கைக்கு (சவுமியா) மருத்துவராக வேண்டும் என்று சிறுவயது முதலே கனவு. நான்கு மதிப்பெண்கள் குறைவதால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போகிறது. தங்கையின் கனவை நிறைவேற்ற இடைத்தரகர்களை நாடும் கிருஷ்ணா, தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.50 லட்சம் விலை கொடுத்து சீட் வாங்குகிறார். எதிர்பாராத விதமாக, அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகிவிடுகிறது. மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
அதிர்ச்சியடையும் கிருஷ்ணா, கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கு கிறார். அதுவே அவரது குடும்பத்துக்கு ஆபத்தாக முடிகிறது. கல்லூரி அதிபர், இடைத்தரகர்கள், அவர்களை இயக்கும் ரவுடிகள் எனக் கல்விக் கொள்ளையின் பின்னால் இருக்கும் வலைப் பின்னலை அறியும் கிருஷ்ணா, அவர்களுடன் மோதுகிறார். அந்த மோதலில் அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதுதான் கதை.
வேரோடு களைந்தெறிய வேண்டிய கல்வி வியாபாரத்தால் நடுத்தரக் குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்ற செய்தியை அழுத்தமாக, பார்வையாளர்களை உலுக்கும்படி கூற நினைத்திருக்கிறார் இயக்குநர். இதற் காக த்ரில்லர் பாணி திரைக்கதையைத் தேர்வு செய்திருக்கிறார். கதாபாத்திரங்கள், சம்பவங்கள், திருப்பங்களுடன், கதாநாயகன் வில்லன் - வில்லனின் ஆட்கள் ஆகிய மூன்று தரப்புக்கு இடையில் விரிவுகொள்ளும் முக் கோண மோதல் என எல்லாமே படத்தை முழுமை யான த்ரில்லர் படமாக மாற்றியிருக்கின்றன. கல்விக் கொள்ளையின் வலைப் பின்னல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காட்சிகளின் உபரி நீளம், கதாநாயகி கதாபாத்திரத்தைப் பயன்படுத்திக்கொண்ட விதம், நரேன் கதாபாத்திரத்தைத் தேவையின்றி நீட்டித்தது போன்றவை திரைக்கதையின் சீரான ஓட்டத்தைத் தடுக்கின்றன. தொடர்பே இல்லாத பல பாத்திரங்கள் கதையின் மையத்துடன் வந்து ஒட்டிக்கொள்ளும் விதம் ஏற்கும்படி இல்லை. இருப்பினும், சமூகத் தீமையைக் கதையின் மையமாக எடுத்துக்கொண்டதற்காக இயக்குநர் சக்தி ராஜசேகரனைப் பாராட்டலாம்.
ஆற்றாமையும் ஆவேசமும் கொள்ளும் பாத்திரம் கலையரசனுக்கு நன்றாகப் பொருந்து கிறது. நாயகனுக்கான முக்கியக் குறிக்கோளில் இருக்கும் அழுத்தத்தையும், அதில் அவர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் அளவாகவும், இயல்பாகவும் வெளிப்படுத்துகிறார். ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் வேகமும் உடல்மொழியும் போதாது என்றாலும், இதைக் கதாபாத்திரத்தின் யதார்த்தமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
கதாநாயகனுக்கு இணையாகப் பயணிக்க வேண்டிய எல்லாச் சாத்தியங்களும் கொண்ட ஒரு கதைக்களத்தில் அவ்வப்போது வந்துபோகும் கதாபாத்திரமாக கதாநாயகியை படைத்திருப்பது ஏமாற்றம் தருகிறது. கதாநாயகியான சாத்னா டைட்டஸ் அடிக்கடி காணாமல் போய்விடும் கதாபாத்திரமாக அமைந்துவிட்டதால், காவல் உடை அணிந்து அவ்வப்போது திரையில் தோன்று வதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. கல்லூரி அதிபரின் வலது கரமாக வரும் நரேன் கதாபாத்திரம், தேவைக்கு அதிகமாக கதையில் பயணித்தாலும் அவரது நடிப்பு அபாரம். குற்ற வலைப் பின்னலில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் தவிப்பை வலுவாகச் சித்தரிக்கிறார்.
முக்கிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித் திருக்கும் கவுதமின் உடல்மொழியும் நடிப்பும் படத்துக்குப் பெரும் பலம். அவருக்குத் தரப்பட்டிருக்கும் பின்னணிக் குரல் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. வேல.ராமமூர்த்தியை வீணடித்துள்ளனர். தர்மன் என்ற ரவுடியாக நடித்திருக்கும் கிருஷ்ணா, கண்களாலேயே மிரட்டுகிறார்.
த்ரில்லர் படத்துக்கான பின்னணி இசையைத் தருவதில் பார்த்தவ் இளங்கோ பின்தங்கிவிட்டார். பாடல்களும் மனதில் தங்கவில்லை. கதைக் கான ஒளிப்பதிவைத் தந்ததில் சி.பிரேம்குமார் வசீகரித்திருக்கிறார். கதையையும், கதாபாத்திரங் களையும் மனதில் வைத்து யதார்த்தமாக ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார் ராக் பிரபு.
இரண்டாம் பாதியில் மேலும் அழுத்தமான முடிச்சுகளைப் போட்டு காட்சிகளைக் கச்சித மாகச் செதுக்கியிருந்தால் ‘எய்தவன்’ குறி இன்னும் துல்லியமாக இலக்கை அடைந் திருக்கும்!