

மேற்கத்திய கதைகளில் ஃபேண்டஸிக்கு என்று தனித்த ரசிகர்கள் உண்டு. அவற்றை எழுத கற்பனை வளம் மிக்க எழுத்தாளர்களும் உண்டு. புத்தக வடிவமாக இருந்தாலும் திரைப்படங்களாக இருந்தாலும் அந்தக் கதைகளுக்கு அலாதியான வரவேற்பைத் தர மேற்கத்திய ரசிகர்கள் தயங்குவதேயில்லை. சிறுவர்களுக்காக மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கான கற்பனையுலகுக் கதைகளுக்கும் உதாரணங்களாக ஹாரிபாட்டர், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் போன்றவற்றைச் சொல்லலாம். இவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டு உலகெங்கும் உள்ள ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் ஜோசெப் டிலேனி என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் எழுதி 2004-ல் வெளியான ‘தி ஸ்பூக்’ஸ் அப்ரெண்டிஸ்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ‘செவென்த் சன்’.
இருட்டுலகத்தைச் சேர்ந்த தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ’ஸ்பூக்’ என்ற முதிய வீரனைப் பற்றிய கதை இது. தடி ஒன்றை சுமந்து அலையும் அவன், மனிதர்களுக்கு உதவினாலும் கடவுளுக்கும் தீயசக்திகளுக்கும் இடையிலான போராட்டத்தில் தேவையில்லாமல் தலையிடுவதாக மதத்தலைவர்கள் அவனை வெறுக்கின்றனர். அதைப்பற்றி கவலைப்படாமல் சூனியக்காரக் கிழவிகள், பேய்கள் இவற்றுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறான். மதர் மால்க்கின் என்ற சூனியக்காரியை சிறைவைக்கும் ஸ்பூக், இளைஞர்களுக்கு சண்டைப் பயிற்சியளித்தும் வருகிறான். எனினும் திறமை இல்லாத அந்த இளைஞர்கள் அசுர சக்திகளால் கொல்லப்படுகின்றனர். ஒரு குடும்பத்தின் ஏழாவது மகனுக்குப் பிறக்கும் ஏழாவது மகன்தான் ஸ்பூக்கின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வீரனாவான் என்று நம்பப்படுகிறது. அதன்படி ஸ்பூக்குக்கு ஒரு நல்ல மாணவன் கிடைக்கிறான். இதற்கிடையில் சிறைவைக்கப்பட்ட மதர் மால்க்கின் அதிலிருந்து தப்பி, ஸ்பூக்கைப் பழிவாங்கும் வெறியுடன் அலைகிறாள். அவளை எதிர்கொள்ள ஆசிரியரும் மாணவரும் தயாராகின்றனர்.
மிக பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது.
ரஷ்ய இயக்குநரான செர்ஜி போத்ரோ இப்படத்தை இயக்கியுள்ளார். மங்கோலியப் பேரரசை நிறுவிய செங்கிஸ் கான் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து போத்ரோ இயக்கிய ‘மங்கோல்’ என்ற ரஷ்ய மொழித் திரைப்படம் உலகெங்கும் உள்ள திரைப்பட விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. அவரது மற்றொரு படமான ‘ப்ரிஸனர் ஆப் தி மவுன்டன்ஸ்’ என்ற திரைப்படமும் இவ்விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அரிசோனாவில் செட்டில் ஆகிவிட்ட இந்த ரஷ்யத் திரைப்பட மேதையின் புதிய படைப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
படத்தின் முக்கிய பாத்திரமான ஸ்பூக்காக நடித்திருப்பவர் ஜெஃப் பிரிட்ஜஸ். ’கிரேஸி ஹார்ட்’ படத்தில் தனது சிறந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற இம்மனிதர் ஆர்ப்பாட்டமான பாத்திரங்களுக்குப் புகழ்பெற்றவர். கோயன் சகோதரர்கள் இயக்கிய ‘ட்ரூ கிரிட்’ படத்தில் ரூஸ்டர் காக்பர்ன் என்ற முரட்டுத்தனமான ரேஞ்சர் பாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்காகப் பல விருதுகளுக்கு ஜெஃப் பிரிட்ஜஸ் பரிந்துரைக்கப்பட்டார். அழகான நடிகையான ஜூலியானே மூர் இப்படத்தில் சூனியக்காரியாக நடித்திருக்கிறார். இவரும் நான்கு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்தான். இந்தப் படத்தில் இன்னொரு ஆஸ்கர் நாயகரும் பணிபுரிந்திருக்க வேண்டியது. கடைசியில் அது முடியாமல் போய்விட்டது. அவர் இந்தியாவின் இசைமேதை ஏ.ஆர்.ரஹ்மான்!