Published : 02 Mar 2014 00:00 am

Updated : 07 Jun 2017 10:54 am

 

Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Jun 2017 10:54 AM

தெகிடி: திரை விமர்சனம்- இந்து டாக்கீஸ் குழு

முற்றிலும் புதுமையான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்துத் திரில்லர் வகைப் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ். குற்றவியல் படிப்பு, துப்பறியும் களம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான திரில்லரைத் தந்திருக்கிறார். கதையோடு ஒன்றிய காதலையும் இணைத்திருக்கிறார்.

கிரிமினாலஜி படித்த வெற்றிக்கு (அசோக் செல்வன்) தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஒரு நபரைப் பற்றிய தகவல்களைத் திரட்டும்படி இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்படப் பல நிபந்தனைகளுடன் வெற்றி களத்தில் இறக்கப் படுகிறான்.

குறிப்பிட்ட நபர் யார், அவர் என்ன வேலை செய்கிறார், அவர் பொழுதுபோக்கு, குடும்பப் பின்னணி, நடமாட்டங்கள் எனப் பல தகவல்களை யும் திரட்டிக் கொடுக்கிறான். நிறுவனம் பாராட்டுகிறது. மேலும் சில அசைன்மென்ட்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு அசைன்மென்டின் போது அவன் சந்தேகத்துக்குரிய முறையில் மது (ஜனனி) என்னும் பெண்ணின் கண்ணில் பட்டுவிடு கிறான். அவளைப் பார்த்ததும் பிடித்துப் போவதால் அவளிடம் தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறான்.

எதிர்பாராத திருப்பமாக அவளையே வேவு பார்க்கச் சொல்லி நிறுவனம் உத்தரவிடுகிற்து. வெற்றி வேலையை ஆரம்பிக்கிறான். ஆனால் பணியின் நிபந்தனையை மீறி அவளோடு பழகி நெருக்கமாகிறான். இதை எப்படிச் சமாளிப்பது என்று கவலைப்படும் நேரத்தில் அதைவிடவும் பெரிய பிரச்சினையை அவன் எதிர்கொள்ள நேர்கிறது.

அடுத்தடுத்து விழும் கொலைகளும் அவற்றின் பின்னணியும் வெற்றியைச் சிக்கலில் மாட்டிவிடுகின்றன. தன் காதலியின் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரியவருகிறது. தன்னையும் காப்பாற்றிக்கொண்டு காதலியையும் காப்பாற்றிக் கொலைகளின் மர்மத்தையும் கண்டுபிடிக்க அவன் போராடு கிறான்.

இதுபோன்ற சஸ்பென்ஸ் திரில்லர்களில் கொலை செய்யப்படும் நபர்கள் பெரிய மனிதர்களாக இருப் பார்கள். அவர்களுக்கு எதாவது பின்புலம் இருக்கும். ஆனால் இங்கு கொல்லப்படுவது எந்த பின்புலமும் இல்லாத சாதாரண மக்கள். இந்த முடிச்சினை நேர்த்தியாகக் கோர்த்துச் சிக்கல் இல்லாமல் அவிழ்த் திருக்கிறார் இயக்குநர். ஒரு கட்டம் வரையிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் யூகிக்க முடியாதபடி நிகழ்கின்றன. கொலைக்குப் பின்னால் இருக்கும் மர்மம் விலகும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஆனால், மர்மம் வெளிப்பட்ட பிறகு கதையின் போக்கை எளிதாக யூகிக்க முடிகிறது. காவல் துறையின் கையில் விஷயம் போன பிறகும் நாயகன் தனி ஆவர்த்தனம் வாசிப்பது நம்பும்படி இல்லை. குற்ற வலையின் கண்ணிகள் விரிந்துகொண்டே போவது ஒரு கட்டத்தில் அலுப்பூட்டுகிறது. தவறு செய்தவர் தன் தவறை நியாயப் படுத்திக் கடைசிக் காட்சியில் வசனம் பேசுகிறார். பார்வையாளர்கள் கொட்டாவி விடுகிறார்கள்.

அப்சர்வேஷன் என்பதற்கான விளக்கம், துப்பறிவதன் உத்திகள் ஆகியவை நன்றாக இருக்கின்றன. சில இடங்களில் வசனங்கள் நன்றாக உள்ளன.

அசோக் செல்வனின் நடிப்பு கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. காமெடி கலந்த குணசித்திர வேடத்துக்குக் காளி நன்றாகப் பொருந்துகிறார் அவரது பாடி லாங்க்வேஜ் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் மட்டுமே ஜனனிக்குத் தன் நடிப்புத் திறனைக் காட்ட வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை முழுமையாகக் கோட்டை விட்டிருக்கிறார்.

பாடல்கள் வேகத் தடைகளாக அல்லாமல் கதையோடு சேர்ந்து பயணிக்கும் காட்சிகளின் தொகுப்பாக இருப்பது நல்ல விஷயம். ஆனால் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மெட்டுகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். பின்னணி இசையில் சில இடங்களில் தேவையில்லாமல் அல்லது தேவைக்கதிகமாக ஓசை எழுப்புகிறார்.

தினேஷ்கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தி. குறிப்பாக இருட்டுக் காட்சிகள். வலுவான கதை முடிச்சு, விறுவிறுப்பான திரைக்கதை, தேவையான அளவு சஸ்பென்ஸ் என இத்தனை விஷயங்கள் இருந்தாலும் படத்தோடு ஒன்றச் செய்யும் அம்சம் முழுமை யாகவில்லை. மர்ம முடிச்சு அவிழ்ந்த பிறகு கதையை வளர்த்தாமல் இருந்திருக்கலாம்.

தெகிடி என்றால், வஞ்சம், சூது, ஏமாற்றுதல் என்றெல்லாம் பொருளாம். ஏமாற்றுவதைப் பற்றிய படம் ஏமாற்றவில்லை.


தெகிடிதிரை விமர்சனம்தி இந்து விமர்சனம்இந்து டாக்கீஸ்தெகிடி விமர்சனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author