

சில படங்கள், இசை எதிர்பார்ப்பைப் உருவாக்கும். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது பெரும் சவால்தான். எழுத்தாளர் ராஜு முருகனின் முதல் படமான குக்கூவுக்கும் அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு.
ஏற்கெனவே, அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வித்தியாச ஹிட்களைக் கொடுத்தவர் இளம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். குக்கூவில் மெலடிகள், மாறுபட்ட பாடல்களைக் கொடுத்து வசீகரித்திருக்கிறார். அனைத்துப் பாடல்களும் யுகபாரதி. நினைத்து நினைத்து அசைபோட வைக்கின்றன வரிகள்.
ஆர்.ஆர். என்ற பெயருக்குள் ஒளிந்திருக்கும் பாடகர் யார் என்று தெரியவில்லை. திவ்யா ரமணியுடன் சேர்ந்து பாடியுள்ள ‘மனசுல சூரக்காத்து’ மெலடியில் அசத்தியிருக்கிறார். அதில் மெலடியில் வருடிவிட்டு, ‘பொட்டப் புள்ள’ பாடலில் நாட்டுப்புறத் துள்ளோட் டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
இவ்வளவு காலம் அடையாளம் பெற்ற உற்சாகக் கல்யாணப் பாடல்களுக்கு மாறாக, ‘கல்யாணம் கல்யாணம்’ என்ற சோகப் பாடல் புது அடையாளமாக மாறப் போகிறது. பாடலின் மெட்டு மட்டுமல்லாமல், அதைப் பாடியுள்ள தஞ்சை நாட்டுப்புறப் பாடகர் ஆண்டனி தாசனின் உருக்கும் குரலும் அதிரடிக்கும் பின்னணி இசையுமே காரணம்.
வைக்கம் விஜயலட்சுமியின் குரலால் அழகடைந்திருக்கும் மற்றொரு பாடல் ‘கோடையில’. ‘ஏண்டா மாப்ள’ பாடலில் கானா பாலாவின் வழக்கமான பெப் இல்லாவிட்டாலும், தனித்துவத்துடன் பாடும் இளம் பாடகர்களால் இந்த ஆடியோ நிரம்பியுள்ளது. அதற்குப் பிரதீப் குமார் மற்றொரு உதாரணம். ‘ஆகாசத்த நான் பார்க்குறேன்’ என்ற மெலடியும் குறிப்பிடத்தக்கது.
புத்துணர்வை ஊட்டும் இசையைத் தந்துள்ள சந்தோஷ் நாராயணனிடம் நிறையவே எதிர்பார்க்கலாம்.