திரை விமர்சனம்: ப.பாண்டி

திரை விமர்சனம்: ப.பாண்டி
Updated on
2 min read

முன்னாள் ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டி (ராஜ் கிரண்) மகன் ராகவன் (பிரசன்னா) வீட்டில் வசதியாக வாழ்கிறார். பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்கிறார். பக்கத்து வீட்டு இளைஞனுடன் சரிக்கு சமமாக அரட்டை அடிக்கிறார். சமூகப் பொறுப் புடன் அவர் செய்யும் சில காரியங்கள் மகனுக்குத் தொந்தரவாக அமைகின்றன. அந்தப் பிரச்சினைகள் எல்லை மீறிப் போகும் போது மகனுக்கும் தந்தைக்கும் இடையே பிரச்சினை வெடிக்கிறது. தனக்குள் இருக்கும் வெற்றிடத்தையும் உணர்கிறார். என் வழி தனி வழி என்று முடிவெடுக்கும் ராஜ்கிரண் என்ன செய்கிறார், அவருக்குக் கிடைக்கும் அனுபவங்கள் என்ன, தந்தை - மகன் உறவு என்னவானது?

முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், முதல் முறையாக இயக்குநராகக் களம் இறங்கியிருக்கிறார். எளிமையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு, எளிமை யான, சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் அதற்குத் திரை வடிவம் தந்துள் ளார். பெற்றோர் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளும் முறையையும், அதே பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ளும் முறையையும், பெரியவர்களின் தனிமை உணர்வையும் அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். அறிமுக இயக்குநர் என்பதற்கான சுவடுகள் ஆங்காங்கே தெரிந் தாலும், உணர்வுகளைக் கச்சிதமாகச் சொன்ன விதத்தில் கவனிக்க வைக்கிறார்.

முதியவர்களின் நிலை மீது கவனம் செலுத்தும் தனுஷ், இளையவர்களை எதிர்மறையாகச் சித்தரிப்பதைக் கவன மாகத் தவிர்த்திருப்பது இயக்குநராக அவருடைய முதிர்ச்சியைக் காட்டுகிறது. ராஜ் கிரண் மீது அனுதாபம் கொள்ளும் பார்வையாளர்களால் பிரஸன்னாவின் மீது பெரிதாகக் கோபம் கொள்ள முடியாது. படப்பிடிப்பில் இளைஞர்கள் தன் மீது வைத்திருக்கும் மதிப்பை உணர்ந்து ராஜ் கிரண் நெகிழும் இடம் மனதைத் தொடுகிறது.

ராஜ் கிரணின் முதல் காதலைச் சொல் லும் பின்னோட்டக் காட்சி சற்றே நீளமாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. தன் காதலி கிளம்பிச் செல்லும்போது ஒருமுறையாவது அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற தனுஷின் தவிப்பு சோகமான கவிதையாக நம் மனதில் நிற்கிறது. “ஏன் மழையில நனையுற? குடைக்குள் வா...” என்று அழைக்கும் மடோனாவிடம், “ஏன் குடைக்குள் இருக்கே? மழைக்கு வா” என்று தனுஷ் கூறும்போது திரையரங்கமே உற்சாகத்தில் துள்ளுகிறது. ரேவதியை ராஜ் கிரண் சந்திக்கும் இடத்திலும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. ராஜ்கிரணும் ரேவதியும் பேசும் இடங்களில் இயல்பின் அழகு ததும்புகிறது. உச்சக் காட்சியின் திருப்புமுனையும் இயல்பு மீறாமலும் பக்குவமான முறையிலும் அமைந்துள்ளது.

பின்னோட்டக் காட்சிகளில் தனுஷ், மடோனாவின் உடைகளில் அந்தக் கால ஸ்டைல் பிரதிபலிக்கிறது. 40 ஆண்டுகள் பழசாகிவிட்ட கடிதத் தாள் பழுப்பேறியிருக் கிறது. தனுஷின் மூக்குக்கும் ராஜ்கிரணின் மூக்குக்கும் இடையில் உள்ள வேறு பாட்டுக்கும் விளக்கமளிக்கப்படுகிறது. இத்தனை விஷயங்களையும் கவனித்துச் செய்திருக்கும் இயக்குநர், முதல் பாதியில் வரும் சில காட்சிகளை இன்னும் இயல் பாகவும் சுவாரஸ்யமாகவும் தந்திருக்கலாம். சண்டைக் காட்சிகளில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சண்டைக் கலைஞருக்கான உடல் மொழி, கம்பீரம், பேரக் குழந்தைகளுடன் பாசம், காதலில் உருகுவது, கோபப்படுவது எனத் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் ராஜ் கிரண். நினைவுகளில் மூழ்கிக் கரைவதும் பொறுப்பை உணர்ந்து செயல் படுவதுமாக ரேவதி தன் கதாபாத்திரத்தை மிகச் சரியாகக் கையாள்கிறார். தனது கதாபாத்திரத்துக்கான தேவையை உணர்ந்து குறையின்றி நடித்துள்ளார் பிரசன்னா. சாயாசிங், ரின்சன், ராகவன், வித்யுலேகா ஆகியோர் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். ஒரே காட்சியில் வந்தாலும் திவ்யதர்ஷினி அனாயாசமான நடிப்பால் மனதில் நிற்கிறார்.

‘அவங்கதான் நம்ம வாழ்க்கை, நம்ம அவங்க வாழ்க்கையா’, ‘28 வயசானாலும் 60 வயசானாலும் துணை துணைதான்’ எனப் பல இடங்களில் வசனங்கள் (தனுஷ்) யதார்த்தம் மீறாத அழுத்தத்துடன் ஒலிக்கின்றன.

பின்னோட்டக் காட்சிகளில் இளைய ராஜா பாணியில் பின்னணி இசையைச் சேர்த்திருப்பதில் கவனம் ஈர்க்கிறார் ஷான் ரோல்டன். ராஜ் கிரண் பயணம் செல்லும்போதும் ரேவதியைச் சந்திக்கும் போதும் பின்னணி இசையின் தன்மை அப்படியே மாறிவிடுகிறது. ‘ஒரு சூரக்காத்து ஊரைப் பார்த்து போகுது’, ‘வீசும் காத்தோடதான்’, ‘வெண்பனி மலரே’ ஆகிய பாடல்கள் மனதில் நிற்கின்றன. கிராமத்து வாசத்தையும், நகரத்தின் வெளிச்சத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கச் செய்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

இன்றைய வேகமான உலகத்தில் மனித உறவுகளின் முக்கியத்துவத்தையும், பெற்றோர்களுடன் இளைஞர்கள் பேண வேண்டிய உறவையும் அறிவுரைத் தன்மை இல்லாமல் சொல்லும் விதத்தில் பவர்ஃபுல் பாண்டியாக நிமிர்ந்து நிற்கிறது படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in