மும்பை கேட்: ஆலியாவின் அலைவரிசை!

மும்பை கேட்: ஆலியாவின் அலைவரிசை!
Updated on
1 min read

ஆலியாவின் அலைவரிசை!

ஆலியா பட் தனக்கான யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கிறார். தற்போது ரன்வீர் கபூருடன் அவர் நடித்துவரும் ‘பிரம்மாஸ்த்ரா’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு ‘ப்ளூப்பர்’ வீடியோவுடன் தனது யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கும் ஆலியா, “என் வாழ்க்கையில் திரைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்களையும் என் தனிப்பட்ட வாழ்க்கையின் நல்ல, கெட்ட, எளிமையான, வேடிக்கையான நாட்களையும் இந்த சேனலில் பார்க்கவிருக்கிறீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் ஆலியா. தற்போது, ‘பிரம்மாஸ்த்ரா’ தவிர, சல்மான் கானுடன் ‘இன்ஷால்லா’ படத்திலும் நடித்துவருகிறார்.

27 ஆண்டுகள்

பாலிவுட்டின் ‘கிங்’ கான  ஷாருக், திரைத்துறையில் 27 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறார். இதை அவருடைய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஒருநாள் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். 1992 ஜூன் 25 அன்று ‘தீவானா’ படத்தின் மூலம் ஷாருக் கான் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் அறிமுகமானாலும், நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனத்தில் இடம்பெற்றார் ஷாருக். “27 ஆண்டுகள் என்பது, தற்போது என் வாழ்க்கையின் பாதி நாட்கள். என் வாழ்க்கையின் பாதி நாட்களை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செலவிட்டிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி” என்று சொல்லியிருக்கிறார் ஷாருக்.

காதல் கதை இல்லை

‘தபங் 3’ படத்தில் சோனாக்ஷி சின்ஹா தான் ஏற்ற ‘ரஜ்ஜோ’ என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். பிரபு தேவா இயக்கும் இந்தப் படம் ஒரு முக்கோணக் காதல் கதை எனத் தகவல் பரவ, அதை சோனாக்ஷி மறுத்திருக்கிறார். “முந்தைய ‘தபங்’ வரிசைப் படங்களைப் போன்ற திரைக்கதையில் ‘தபங் 3’ உருவாகவில்லை.

இது முற்றிலும் வித்தியாசமான கதை. படத்தில் புதிய கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது முக்கோணக் காதல் இல்லை. அத்துடன் வழக்கமான ‘முன்னி’ பாடலுக்குப் பதிலாக ‘முன்னா’ பாடல் இந்தப் படத்தில் இடம்பெறும்” என்று விளக்கியிருக்கிறார் சோனாக்ஷி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in