Published : 28 Jun 2019 10:57 am

Updated : 28 Jun 2019 10:57 am

 

Published : 28 Jun 2019 10:57 AM
Last Updated : 28 Jun 2019 10:57 AM

தரைக்கு வந்த தாரகை 19: ஏழையின் காதல்!

19

பானுமதி அம்மையார் உரையாடலின் நடுவே பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கதையை நிறுத்திய இடத்திலிருந்து கச்சிதமாகத் தொடங்கிவிடுவார். பெரும்பாலும் அவருடைய உதவியாளர் அண்ணாசாமிதான் எங்கள் அருகே தயங்கியபடி வந்து நிற்பார்.

“ஆடிட்டர் பேசினார்” என்பார், சிலநேரம் “லீவு வேணும்மா” என்பார். அம்மையாரிடம் எந்தச் சலனமும் இராது. சிறிய தலையாட்டல். ஏற்பா, மறுப்பா? அண்ணாசாமிக்கே வெளிச்சம். அவர் முகத்தில் ஏதோ புரிந்துகொண்ட பாவனை தெரியும், போய்விடுவார்.


எங்கிருந்தோ காற்றில் நாகலிங்கப் பூக்களின் நறுமணம் கமழும். அமைதி என்றால் அப்படி ஓர் அமைதி. அமைதிக்கென ஒரு வாசனை உண்டென்றால் அது இப்படித்தான் இருக்க முடியும். அன்றும் அப்படித்தான்.

பானுமதி அம்மையார் “கண்ணாமணி அம்மா என்னைக் கூப்பிட்டு கலாட்டா பண்ணிணார்னு சொன்னேன் இல்லையா? ஒரு முக்கியமான விஷயத்தை அப்பவே சொல்ல மறந்துட்டேன்” என்று தொடங்கினார்.

“கண்ணாமணி ராமகிருஷ்ணாவையும் கூட்டிவர ஆபீஸ் பையனை அனுப்பியிருப்பார் போல. அங்கு எனக்கு முன்பே ராமகிருஷ்ணா உட்கார்ந்திருந்தார். என் கையைப் பிடித்து அழைத்துப்போய் அவருக்கு முன்னால் போட்டிருந்த நாற்காலியில் உட்காரவைத்தார் கண்ணாமணி.

மனம்விட்டுப் பேசிய மணாளன்

ராமகிருஷ்ணா என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடி கேட்டார். ‘இதெல்லாம் என்ன அம்மாயி? கண்ணாமணி அம்மா சொல்லித்தான் தெரியும். எனக்குத் தெரியாது’ என்றார்

என்னால் பதில் எதும் பேச முடியவில்லை. கண்ணாமணி ஏன் இப்படிச் செய்துவிட்டார்? அப்பாவுக்குத் தெரிந்தால்…? கடவுளே என்று மனதுக்குள் பதற்றத்துடன் வேண்டிக்கொண்டேன்.

கண்ணாமணி அம்மாவால் எங்கள் மெளனத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘இப்படி ரெண்டு பேரும் பேசாமல் இருந்தால் எப்படி? ஏதோ பழங்காலக் கட்டுப்பெட்டி காதல் ஜோடி மாதிரி இருக்கீங்களே..!’ என்றார். அவர் அப்படிக் கூறியதற்கு ‘நான் ஒன்றும் இவரைக் காதலிப்பதாகச் சொல்லவில்லையே என்றார் சிரித்தபடி ராமகிருஷ்ணா.

அவரைச் சடாரென்று நிமிர்ந்து பார்த்தேன். என் சுயமரியாதை தாக்கப்பட்ட உணர்வு! அப்போதுதான் அவர் கண்களில் மின்னிய குறும்புத்தனத்தைக் கவனித்தேன்!. எனக்குப் புரிந்தது, என்னைச் சீண்டிப் பார்க்கிறார்!

‘நல்ல காதலர்கள்தான் போங்க. அவதான் சின்னப்பொண்ணு. நீ தொடங்கலாமே’ என்றார் கண்ணாமணி. ‘ஏன் இப்படிக் களேபரம் பண்றீங்க அம்மா! நானோ ஏழை, இவங்க என்னோடு வந்து சந்தோஷமா வாழ முடியுமா?’ என்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்த ராமகிருஷ்ணா, ‘அம்மாயி, உங்க அப்பா, அம்மாகிட்டே என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தீர்மானமாகச் சொல்லிட்டீங்களாமே’ என்று கேட்டார்.

நான் பேசவில்லை. என் கண்கள் பேசின. அவர் கண்கள் அதைப் புரிந்துகொண்டன. ‘இப்படியே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டிருந்தா எப்படி? பெரியவங்ககிட்ட சொல்லி சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்வோம்’ என்றார் கண்ணாமணி.

ராமகிருஷ்ணா சொன்னார் ‘முன் யோசனை இல்லாத முடிவு! நான் ஒரு சாதாரண ஆள். ஒரு சிம்னி விளக்கு மாதிரின்னு வச்சுக்குங்க. பிரகாசமான பெரிய விளக்கு பக்கம் நான் நிற்க முடியுமா? முதல்ல அவங்க அப்பா ஒத்துப்பாங்களா? அம்மாயி, நான் சொல்றதைக் கேளுங்க.

உங்க மனசை மாத்திக்குங்க. நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நிறைய பிரச்சினைகளைச் சமாளிக்கணும்’. கண்ணாமணி சட்டென்று குறுக்கிட்டுச் சொன்னார். ‘இதோ பாரப்பா, அவ ஒண்ணும் உன் லெக்சரைக் கேட்க இங்கே வரலை. ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ. இந்த சினிமா ஃபீல்டில் நான் எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்திருக்கேன்.

ஆனால், இவளை மாதிரி ஒரு நல்ல பெண் உனக்குக் கிடைக்கமாட்டாள். அப்பா அவளை பூ மாதிரி வச்சு காப்பாத்துறார். உண்மைதான். ஆனா மகாலட்சுமியே வந்து உன் வீட்டுக் கதவைத் தட்டும்போது. நீ பெப்பே காட்டிட்டு ஓடிப்போயிடுவாயா?’ கண்ணாமணி பேசுவதைக் கேட்டு சிரிப்பு வந்துட்டுது. இதற்கு ராமகிருஷ்ணா என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள என் காதுகளைத் தீட்டிக்கொண்டேன்.

‘அவங்க மகாலட்சுமி மட்டுமில்லை.. மகா சரஸ்வதின்னும் எனக்குத் தெரியும். கதை எல்லாம் எழுதறாங்க! என்ன ஒண்ணு கோபம் வந்துட்டா, எதிரில் இருப்பவர் கன்னம் பழுத்துடும். நல்ல பெண்தான். இல்லேன்னு சொல்லலையே..’ என்றார். அவரது இந்த வார்த்தைகள் என் உடலைச் சிலிர்க்கவைத்தன.

‘ஒருத்தன் சொன்னானாம் எனக்கு ராஜாவின் மகளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைதான். ஆனா அதுக்கு ராஜா ஒத்துக்கணுமே...! என் நிலைமையும் இதுபோல்தான்! இந்தப் பெண் என்னை மாதிரி ஒரு ஏழையைக் கல்யாணம் பண்ணிகிட்டு கஷ்டங்களை அனுபவிக்கத் தயார்னா எனக்கு ஆட்சேபனை இல்லை, என்று சொல்லிவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்தார், பிறகு போய்விட்டார்.

குடிசையா, மரத்தடியா?

‘கருட கர்வ பங்கம்’ படத்துக்காக மேலும் சில காலம் சென்னையில் தங்கும்படி ஆயிற்று. என் பெற்றோர் தங்களை வந்து சந்திக்குமாறு ராமகிருஷ்ணாவுக்குச் சொல்லி அனுப்பினார்கள். ராமகிருஷ்ணா வந்தார், வழக்கம்போல் வங்காளி பாபு போல் சட்டையும் வேட்டியும் உடுத்தியிருந்தார்.

மணமகன் போல ஜம்மென்று ஒரு கோட் போட்டிருந்தார். தயங்கிபடியே நாற்காலியில் அமர்ந்தார். நான் கதவருகே ஒளிந்துகொண்டு அவரைப் பார்த்தேன். அப்பா திடீரென்று கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.

“உங்கள் தகப்பனார் வசதி படைத்தவரா?’

“இல்லை”

“என்ன உத்தியோகம் பார்க்கிறார்”

“இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ்”

“எதுவரை படித்திருக்கிறீர்கள்?’

“பி.ஏ. வரை படித்திருக்கிறேன்”

“சங்கீதம் பிடிக்குமா?”

“பிடிக்கும். ஆனால் பாடத் தெரியாது”

“உங்களுக்கு இலக்கிய அனுபவம் உண்டா? அதாவது கதை,கிதை எழுதுவீர்களா?”

“இல்லை, நான் சினிமாக் கதைகளை உருவாக்குபவன்! படத்துக்கான கதை வசனங்கள் எழுதத் தெரியும்” என்றார் ராமகிருஷ்ணா சிரிப்பை அடக்கிக்கொண்டு.

அப்பா சொன்னார்.

“ஆக, சினிமா சமாச்சாரம் தவிர வேறு ஏதும் தெரியாது?”

“ஆமாம் சார், எனக்கு சினிமாத் துறையில்தான் ஆர்வம். இதற்காகத்தான் என் 18-வது வயதிலேயே சென்னைக்கு வந்துட்டேன். ஹெச்.எம். ரெட்டியுடன் இணைந்து பணியாற்றுகிறேன்”

“அப்பா என்கிற முறையில் என் பெண்ணை நல்ல இடத்தில் கொடுக்க வேண்டும் என்ற கடமை எனக்கு உண்டு. அதனால்தான் உங்களைக் கேள்வி கேட்கும்படி ஆச்சு... தப்பாக எடுத்துக் கொள்ளாதீங்க”

“நானும் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுகிறேன். நீங்கள் நினைப்பது போல் உங்கள் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதில் வேறு கெட்டநோக்கம் ஏதும் எனக்கில்லை. விருப்பங்கள் குதிரைகள்.

ஆனால், அதில் பிச்சைக்காரர்களும் சவாரி செய்வார்கள் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வாய்ப்பு வந்தால் விருப்பம் நிறைவேறும்..” என்று புன்னகையுடன் சொன்னார் ராமகிருஷ்ணா. அப்பா ராமகிருஷ்ணாவை வியப்புடன் பார்த்தார்.

“சரி தம்பி, இவ்வளவு தூரம் வந்தபிறகு ஒன்றே ஒன்று கேட்கிறேன். அவளை நடிக்க அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் விருப்பம். ஆனால், அவளைப் பாட அனுமதிப்பீர்கள் அல்லவா? ஆந்திர தேசம் முழுவதும் அவள் குரல் ஒலிக்க வேண்டும் என்பது என் ஆசை”

“நீங்கள் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுப்பதாயிருந்தால் திருமணத்திற்கு பிறகு நான் குடிசையில் வசித்தாலும், மரத்தடியில் வசிக்க நேர்ந்தாலும் அவள் என்னுடன் வாழ்ந்தாகவேண்டும்”.

இப்படிச் சொல்லிவிட்டு அப்பாவின் பதிலை எதிர்பாராமல் விறுவிறுவென்று நடந்து வெளியேறினார் ராமகிருஷ்ணா.

நான் எப்படி பேச வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியே ராமகிருஷ்ணா பேசினார். அவர் சென்றதும் என் பக்கம் திரும்பினார்கள், ‘ஆக அவனுடைய சொற்ப சம்பளத்தில் அவனோடு குடிசையிலும் நீ வாழத் தயார் அப்படித்தானே அம்மா?’

“ஆமாம் அப்படித்தான்! நான் ஒரு ஏழ்மையான வாழ்க்கையைத்தான் விரும்புகிறேன். அவரே ஏழைதானே? அவரையே திருமணம்செய்துகொள்வது என முடிவு செய்துவிட்டால் எந்த நிலைமையையும் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை!” என்றேன் வைராக்யமான குரலில்.

(தாரகை ஒளிரும்)

தொடர்புக்கு:-

thanjavurkavirayar@gmail.com

படம் உதவி: ஞானம்தரைக்கு வந்த தாரகைதமிழ் சினிமா தொடர்தமிழ் சினிமா பிளாஷ்பேக்தமிழ் சினிமா நினைவுகள்பானுமதி கதைபானுமதி வாழ்க்கைமணாளன்குடிசைஏழையின் காதல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x