

ஒட்டக நண்பன்
கதிர் நடிப்பில் ‘சிகை’ படத்தை இயக்கிக் கவனம் பெற்றவர் ஜெகதீசன் சுபு. அவர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்யும் படம் ‘பக்ரீத்’. விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தராவும் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தின் கதைக் களமும் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிதாக இருக்கும் என்கிறார் இயக்குநர். “விவசாயம் செய்வதை விரும்பி ஏற்றுக்கொண்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நாயகன்.
அவனது வாழ்க்கையில் எதிர்பாராமல் ஒட்டகம் ஒன்று வந்து சேர்கிறது. புதிய ஒட்டக நண்பனால் அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள், அதனால் அவன் மேற்கொள்ளும் நெடுந்தூரப் பயணம், அதில் அவன் சந்திக்கும் மனிதர்களால் ஏற்படும் திருப்புமுனைகள் என மாறுபட்ட பயணத்தைக் கதைக் களமாகக் கொண்ட படம்” என்கிறார் இயக்குநர். ‘மிர்ச்சி’ சிவா, சந்தானம் நடித்த ‘யா யா’ படத்தைத் தயாரித்த, எம்.எஸ். முருகராஜின் எம் 10 நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படம்.
மீண்டும் மெஹ்ரின்!
சுசீந்திரன் இயக்கத்தில் 2017 –ல் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் மெஹ்ரின் பிர்சடா. ஆனால், படம் வெளியான மூன்றாம் நாள், கதாநாயகி வரும் காட்சிகள் படத்தின் வேகத்தைத் தடுப்பதாக விமர்சனங்கள் வெளியாயின. அதனால் மெஹ்ரின் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டித் தள்ளினார் இயக்குநர்.
அதன்பிறகு தமிழ்ப் படமே வேண்டாம் என்று தெலுங்குப் பக்கம் போய்விட்ட மெஹ்ரின், விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான ‘நோட்டா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மேலும் முன்னேறி தமிழில் தனுஷுக்கு ஜோடியாகியிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தில் மெஹ்ரின்தான் கதாநாயகி.
கிராஃபிக்ஸ் கலக்கல்
சமீபகாலத்தில் தமிழில் வெளியான படங்களில் ஷங்கரின் ‘2.0’ சர்வதேச கிராஃபிக்ஸ் தரத்தில் 90% எட்டியது என்று கூறலாம். தற்போது ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் 90% காட்சிகள் ‘450 சிஜி’ தரத்தில் கிராஃபிக்ஸ் கலக்கலாக உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. ஆண்ட்ரு இயக்கத்தில் ஜெய், பானுஸ்ரீ உட்பட பலர் நடிக்க ஃபாண்டசி அறிவியல் புனைவு ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறதாம்.
ஸ்பைடர் மேனைப்போல இதில் திடீரென சூப்பர் ஹீரோவாக மாறுகிறாராம் நாயகன் ஜெய். பெற்றோர், நண்பர்கள், மனைவி உட்பட அரவணைக்க வேண்டிய அனைவரும் ஜெய்யை நிராகரிக்கிறார்கள்.
இந்த சமயத்தில் விண்வெளியிலிருந்து ஒரு விண்கல் பூமியை தாக்கும்போது அதன் ஒரு சிறு துகள் ஜெய் உடலில் காயத்தை ஏற்படுத்துகிறது. இதன்பிறகு ஜெய்க்கு சூப்பர் ஹீரோவின் சக்தி கிடைத்து விடுகிறது. அதன்பிறகு அவர் அநீதியை அழிக்கப் புறப்படுவதுதான் கதை.
மூன்றாம் முறை
‘ரோமியோ ஜூலியட், ‘போகன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லக்ஷமண் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் ஜெயம் ரவி. இது அவருக்கு 25-வது படம். தற்காலிகமாக ‘ஜெயம் ரவி-25’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் நிதி அகர்வால்.
ஜெயம் ரவி நடிப்பில் ‘அடங்கமறு’ படத்தைத் தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இதற்கிடையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோமாளி’ விரைவில் வெளியாக இருக்கிறது.
சார்லியின் வியப்பு!
‘பிழை’ எனத் தலைப்பு சூட்டப்பட்டிருந்தாலும் பிழைகள் ஏதுமின்றித் துணிச்சலுடன் எடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் திரைப்படம் ‘பிழை’ என அப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பாராட்டியிருக்கிறார் நடிகர் சார்லி. “சில படங்கள், தயாரிப்பில் இருக்கும்போது வெளியே தெரியாது. ரிலீஸுக்குப் பிறகுதான் அது எவ்வளவு பெரிய படம் என்பதை மக்கள் புரிய வைப்பார்கள்.
‘பிழை’ அப்படியோர் அபூர்வப் படைப்பு. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான புரிதலை மையமாக் கொண்டு தமிழின் குறிப்பிடத்தக்கப் படைப்பாக இதைத் தந்திருக்கிறார் இயக்குநர்” என்று பாரட்டினார் சார்லி. ராஜ்வேல் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ‘காக்கா முட்டை’ ரமேஷ், மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் ஆகியோருடன் பத்துக்கும் அதிகமான குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
காதலின் புதிய அத்தியாயம்!
‘அங்காடித் தெரு’ மகேஷ் நடிப்பில் ஒரு இடைவெளிக்குப் பின் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பு ஆடு. “நாயகி ஒரு கிராமத்துப் பெண். அவள் உயிருக்கு உயிராக வளர்த்துவரும் ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றுகிறான் அவளது கிராமத்துக்கு குச்சி ஐஸ் விற்கவரும் நாயகன்.
அவனது நேயம் மிகுந்த செயலுக்கு, தனது நட்பைக் காணிக்கையாக் கொடுக்கிறாள் நாயகி. ஆனால், அவர்களது நட்பைக் கிராமத்தினர் கொச்சைப்படுத்துகிறார்கள். ஊர் வாயை அடைப்பதற்காக அல்லாமல், வேறொரு நல்ல நோக்கத்துக்காக அவர்கள் காதலிக்கிறார்கள்.
இது காதலின் புதிய அத்தியாயம்” என்கிறார் படத்தை எழுதி இயக்கியிருக்கும் விஜய்மோகன். ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ படத்தின் நாயகி அக் ஷிதா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் படம் இது.