நிலவே கேள் என் கதையை

நிலவே கேள் என் கதையை
Updated on
2 min read

திரைப்படங்களின் பார்வையில் நிலவு என்பது இதமான இயற்கையையும் தாண்டிய ஒரு முக்கிய உருவகமாகத் திகழ்கிறது. மகிழ்ச்சியான தருணங்களில் தன் காதலியை நிலவுடன் ஒப்பிட்டுப் பாடுவார்கள் நம் திரை நாயகர்கள்.

அதேபோல் காதலை விட்டுக் காததூரம் ஓட நேரிடும் சோகமான சமயங்களிலும் நிலவை அழைத்துத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள். இந்தக் கழிவிரக்க உணர்வு இந்தி, தமிழ்ப் படப் பாடல்களில் ஒரே விதத்தில் மிக அழகாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.

இந்தித் திரைப்பட ரசிகர்களே அதிகம் அறிந்திராத மஹிபால் –ரத்னமாலா ஜோடி நடித்து 1963-ம் ஆண்டு வெளிவந்த நாகஜோதி என்ற படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

சர்தார் மல்லிக் இசை அமைத்த இப்பாடலை எழுதியவர் இந்தித் திரையுலகில் இலக்கிய வளத்துடன் பாடல் எழுதும் திறன்பெற்றவர் எனப் போற்றப்பட்ட பரத் வியாஸ் என்ற கவிஞர்.

சுவரொட்டிகள் உள்பட இப்படத்தின் அடையாளங்கள் எதுவுமே ஆவணப்படுத்தப்படாமல் மறைந்துவிட்டன. தற்போது எஞ்சியுள்ளது, சோக உணர்வைக்கூடச் சுகமாகக் கேட்க வைக்கும் சிறப்பான குரல் வளம் கொண்ட முகேஷ் பாடிய அதன் பாடல்கள் மட்டுமே.

சுன் சாந்த் மேரி யே தாஸ்த்தான்

மே கஹூம் துஜே யா கே நா கஹூம்

தேரி சாந்தினி தேரா பாஸ் ஹை

முஜே யே பத்தா மே கஹான் ரஹூம்

கிலி ரேன் மே தேக்கோ சேன் ஸே

பொருள்:

நிலவே கேள். என்னுடைய இந்தக் கதையை

உன்னிடம் சொல்லவா அல்லது வேண்டாமா (என மயங்குகிறேன்)

(நீ வசிப்பதற்கு) உன் சாந்தினி (நிலவின் இனிய அம்சம்) உன்னிடம் இருக்கிறது.

நான் எங்கே (அப்படி) வசிப்பது

என்று எனக்குச் சொல்

உற்றுப் பார்.

மலர்ந்துவிட்ட இந்த இரவில்

இந்த உலகம் முழுவதும் உறங்கிக்கொண்டிருக்கிறது.

உன்னுடைய நட்சத்திரங்களில் நிழலில் நான் மட்டும் அமைதியாக அழுதுகொண்டிருக்கிறேன்.

தனிமை என்ற தணல் என் தேகம் முழுவதும் பற்றியுள்ளது.

என்னால் இதைச் சகிக்க முடியுமா அல்லது

சகிக்க முடியாதா (தெரியவில்லை)

என் உள்ளத்தில் பதிந்துவிட்ட அந்த

(உன்) பார்வை ஒரு சூலம் போல உள்ளது

பூக்களைப் பூக்களால் அலங்கரிப்பது போல

என் உள்ளங்கையில்

(என்னில்) உன் முகத்தை அலங்கரித்தேன்

இப்படியே (என்னுள்) ஓடிக்கொண்டிருக்கும்

உன் நினைவு என்ற நதியில்

(இப்பொழுது) நான் பிரவாகிக்கவா இல்லை கூடாதா (எனத் தெரியவில்லை)

நிலவே கேள். என்னுடைய இந்தக் கதையை உன்னிடம் சொல்லவா

அல்லது வேண்டாமா (என மயங்குகிறேன்).

இந்தக் கழிவிரக்க உணர்வு சிறிதும் குறையாமல், தன்னை நாடும் பெண்ணின் காதலை ஏற்கத் தயங்கும் கதாநாயகன் பாடுவதாக அமைந்த தமிழ்ப் பாடல் அமரத்துவமான பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

தமிழ்ப் பாடல்.

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நான் இல்லை

(நிலவே)

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்

என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ

பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்

என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

(நிலவே)

அமைதியில்லாத நேரத்திலே

அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்

நிம்மதி இழந்து நான் அலைந்தேன்

இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...

கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்து ஜெமினி கணேசன் கே.ஆர். விஜயா நடித்த ராமு என்ற இப்படத்தின் இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கப்படுகிறது.

நல்ல மெட்டு, கருத்தாழமிக்க எளிய வரிகள் மனதை வருடும் பி.பி. ஸ்ரீநிவாஸ் குரல் ஆகியவற்றை உடைய இப்பாடல் தனக்கு விருப்பமான சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று எனப் புகழ்பெற்ற பலர் தெரிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை பாடியவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in