

| அக்டோபர் 1 - நடிகர் திலகம் 90-வது பிறந்த நாள் |
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
நாம் தேர்ந்துகொள்ளும் துறையில் புகழோடு விளங்க வேண்டும் என்பதே இக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் இக்குறளுக்கு முழுவதும் தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழ்கிறார். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னரே, இதற்கான அடிப்படைத் திறன்களை அவர் பெற்றிருந்தார் என்பதை நான் அறிந்தவன்.
அந்நாட்களில் ‘கவியின் கனவு’ நாடகத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் அனுதாபமோ பாராட்டோ பெறத்தக்கது அல்ல. மேலும், இப்போதுபோல அப்போது அவர் விளம்பரம் பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்ப்போர் அவரை மறக்க முடியாதபடி தனது கதாபாத்திரத்துக்கான நடிப்பால் மக்கள் மனதில் தன்னை நிலைநிறுத்திகொண்டுவிடுவார் அவர்.
இயற்கையை மீறிய இயற்கையான நடிப்பு
‘மனோகரா’ நாடகத்தை எடுத்துக்கொள்வோம். பத்மாவதி வேடம் ஏற்று, தாய்மை உணர்வையும் பாசத்தையும் நெஞ்சுருகப் பொழிந்து, வீறுகொண்டெழும் மகனை தடுத்து, “ ஏந்தியவாளை இறக்கு; மறுப்பாய் என்றால், இதே வாளால் உன்னைப் பெற்றெடுத்த என்னை முதலில் வெட்டி வீழ்த்திவிட்டு உன் விருப்பம்போல் செய் மகனே..” என்று அவர் கூறுகின்ற கட்டம், ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகலாதது.
ஆண் ஒரு ஆணாக நடிப்பது இயல்பு. பத்து அல்லது பன்னிரண்டு வயதில் நாடக ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை உள்ளத்தில் தேக்கி, பெண் என நம்பும்படியாக தோற்றத்துக்காக அலங்காரம் செய்து, பூச்சூடி, சிறுவன் ஒருவனை, சிறுமி போலத் தோன்றச் செய்வது நடிப்பைக் கற்றுக்கொள்ள உதவி செய்யும் வழிமுறைகளில் ஒன்று. அதோடு வயதுக்கு உரிய இளங் குரலுக்கூடச் சிறுவர்களுக்கு ஒத்துழைக்கும். ஆனால், வாலிப வயதை அடைந்த ஓர் ஆண், பெண்ணாக நடிப்பது அத்தனை சுலபமல்ல.
இனிமையான இளங் குரல், கடினமாக மாறிவிட்ட பருவத்தில் இயற்கைக்கே எதிராக, இயற்கையோடு போராடி, இயற்கையாக நடித்துப் புகழ்பெற்றார் தம்பி கணேசன் என்றால் அது மிகப்பெரிய சாதனையே அல்லவா? அன்று நாடக மேடையில் எல்லாவிதமான வேடங்களிலும் தனிச்சிறப்போடு நடித்து, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கும் நாடகக் கலைக்கும் தனது நடிப்பால் பொலிவூட்டியவர். மேடையில் சண்டைக் காட்சிகளிலும் துணிந்து நடித்தவர்.
முரண்களிலும் மிளிர்ந்தார்
நல்ல குணங்கள் கொண்டக் கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம்பெறுவது எளிது. ஒரு கதாபாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரையும் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், மக்களால் வெறுக்கப்படும் கதாபாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம்பெறுவது சாதாரண விஷயமல்ல. ‘திரும்பிப் பார்’ படத்தில் முழுக்க முழுக்க வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றார். பல பெண்களை ஏமாற்றும் கதாபாத்திரம் அது. ஆனால், படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காண்போரை தன்பால் ஈர்த்துக்கொள்ளும் அளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ நடிப்பு என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார்.
தம்பி கணேசன் நாடகத்தில் நடித்தபோது அந்த நடிப்புக்குப் பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்கும் முன்பு வேறு நடிகர்களுக்குக் அவர் குரல் கொடுத்தபோது அந்தக் குரலுக்குப் பெருமை. பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது வெற்றிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன. எந்த நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பெறக்கூடிய தகுதி அவரிடம் வேரூன்றியிருந்தது.
எதற்காக முணுமுணுப்பு?
அமெரிக்க அரசாங்கத்தின் விருந்தினராக அழைக்கப்பட்டு, அந்த நாட்டுக்குச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும் பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” எனக் கேள்வி கேட்டவர்களும் சிலர் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. உலக வல்லரசுகளுக்கிடையே முக்கியமானது எனக் குறிப்பிடத்தக்க தகுதியைப் பெற்றுள்ளது அமெரிக்க அரசாங்கம்.
அப்படிப்பட்ட அமெரிக்கா, ஒரு தமிழ் மகனை, அதிலும் நாடக மேடையிலிருந்து சினிமா நடிப்புக் கலையில் சிறந்து நிற்கும் கலைஞனை அரசாங்க விருந்தினர் என்ற அந்தஸ்தோடு அழைத்துப் பெருமைப்படுத்தியது இதுவரை எந்தத் தமிழ் நடிகனுக்கும் கிடைக்காத பெரும் பேறு. அதனைப் பெற்ற தம்பி கணேசனை வரவேற்காமல் வேறு யாரை வரவேற்பது? அவரைப் பாராட்டாமல் வேறு எவரைப் பாராட்டுவது? அவருக்குப் புகழ்மாலை சூட்டாமல் வேறு யாருக்குச் சூட்டுவது?
மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்று அடிப்படைகளின் மீது தோன்றி, அவற்றைச் சார்ந்ததாக விளங்குவதே நடிப்பு எனும் உயரிய கலை. நாடகத்திலோ, சினிமாவிலோ நடிக்கிற ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பாரானால், அவருக்கு வருகிற பெருமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற அத்தனை பேருக்கும் வருகிற பெருமையாகும்.
அவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார் என்னும்போது, ‘தமிழர்’ என்ற இனத்தைச் சார்ந்தவராகிறார். தமிழ் இனத்தைச் சேர்ந்த அவருக்குக் கிடைக்கக்கூடிய பெருமைகள் யாவும் தமிழினத்துக்கு அதாவது, நமக்கு வழிகாட்டியாக விளங்கிய நம் முன்னோருக்கும் இன்று நம்முடன் இருந்து வாழ்வோருக்கும், இக்கலையை இனி எதிர்காலத்தில் பின்பற்றப்போகும் புதிய தலைமுறைக்கும் உரிய பெருமை அல்லவா!
தமிழ்ப் பண்பாடு உலகிலேயே மிகச் சிறந்த பண்பாடு என ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டைத் தாய்மொழியாம் தமிழில் எடுத்துச்சொல்லிய கலைத்திறனுக்காக, உலக அரங்கத்தால் பாராட்டப்பட்டால் அது தமிழ்மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்ப் பண்பாட்டுக்குக் கிடைத்த பாராட்டே அல்லவா?
இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் சிவாஜி கணேசன் யார் என்ற கேள்வி பிறக்கும்போது, ‘அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப் பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு! தம்பி கணேசனுடைய புகழ் இன்னும் மேலோங்கட்டும்!
- ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் | படங்கள் உதவி: ஞானம்