

இசையும் காதலும் ஒருசேர இசைந்த திரைப்பட முயற்சியாக உருவாகியிருக்கிறது ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’.
வெற்றிகரமாக வலம்வரும் ராக் இசைக் கலைஞனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏனோ வெறுமையும் இருளும் சூழ்ந்திருக்கின்றன. அதன் விளைவாகப் போதையின் பாதையில் தடுமாற ஆரம்பிக்கிறான். எதேச்சையாக மதுக்கூடம் ஒன்றில் பிழைப்புக்காகப் பாடும் அந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் அவனுக்குள் வெளிச்சம் பீறிடுகிறது. இசையும் பாடலும் அழகுமாக அவளது தீட்டப்படாத திறமைகள் அனைத்தையும் வெளிக்கொணர அவன் உதவுகிறான்.
ஒரே நேரத்தில் அவளை ரட்சிக்க வந்த தேவதூதனாகவும், ரசிக்க வந்த காதலனாகவும் அவன் உருவெடுக்கிறான். விரைவில் அவள் எதிர்பார்த்த இசையுலக வெற்றியும் அவன் எதிர்பார்த்த காதலும் வரமாக வருகின்றன. ஆனால், அவன் அலட்சியமாகக் கைக்கொண்ட போதையின் நிழலே, இந்த வரங்களைத் தட்டிப்பறிக்கும் வில்லனாக முளைக்கிறது. அவற்றிலிருந்து தப்பித்து காதலும் இசையும் கரை சேர்ந்தனவா என்பதே மீதிக் கதை.
1937-ல் இதே பெயரில் வெளியான மூலத் திரைப்படத்தின் மூன்றாவது மறுஆக்கமே ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’ திரைப்படம். இடையில் 1954 மற்றும் 1976 ஆண்டுகளில் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ள போதும், வெற்றிகரமான சினிமாவின் தூண்களான காதலையும் இசையையும் நம்பி மூன்றாம் முறையாகக் களமிறங்கி உள்ளனர்.
கதையின் போக்கைத் தீர்மானிக்கும் வளரும் இசைப் பாடகி கதாபாத்திரத்தில் லேடி காகா நடித்திருப்பதால் இசையுலக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன. நாயகிக்கு உதவும் காதலனாகத் தோன்றுவதுடன் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் பங்கேற்றுப் படத்தை இயக்கவும் செய்திருக்கிறார் பிராட்லி கூப்பர்.
முன்னதாக ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’ ஏராளமான திரைவிழாக்களில் பங்கேற்றிருப்பதும் பல்வேறு பிரிவுகளில் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கக்கூடும் என்ற ஆருடங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது. அக்டோபர் 5 அன்று இந்த இசை, காதல் காவியத்தை இந்தியத் திரைகளிலும் எதிர்பார்க்கலாம்.