

திரையரங்குகளைத் தேடிச்சென்று திரைப் படங்களை ரசிப்பது எப்போதுமே தனி அனுபவம். என்றாலும், வீட்டில் அமர்ந்தபடி பிரத்யேகத் திரைப்படங்களைக் காண வாய்ப்பளிக்கும் பல டிஜிட்டல் தளங்களில் ஒன்றாக, பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது நெட்ஃபிளிக்ஸ். இதன் ஒரிஜினல்ஸ் வரிசையில் முதல் இந்தியத் திரைப்படம் ‘சாப்ஸ்டிக்ஸ்’.
மூன்று பிரதான கதாபாத்திரங்களுடன் ஒரு கார், ஆடு ஆகியவற்றை வைத்துக்கொண்டு ரசனையான திரைப்படம் ஒன்றை வழங்க முயன்றிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டமான பாலிவுட் படப் பாணிலிருந்து வேறுபட்டு, சலசலக்கும் சிற்றோடையெனக் கதை ஊர்ந்து செல்கிறது.
பணி நிமித்தம் மும்பை பெருநகரத்தில் வாழத் தலைப்படும் ஒரு யுவதி. அவர், ஆசையாசை யாய்த் தனக்கான சேமிப்பில் கார் ஒன்றை வாங்குகிறார். கடவுளிடம் ஆசி பெற அன்றைய தினமே கோயிலுக்குச் செல்கிறார். ஆனால், அங்கே தனது புதிய காரைப் பரிதாபமாகப் பறிகொடுக்கிறார். காவல் நிலையத்தில் அவரது புகார் அலட்சியமாகக் கையாளப்படுகிறது. வெறுப்பும் நிர்க்கதியுமாய் நிற்பவருக்கு எதிர்பாரா திசையிலிருந்து உதவிக் கரம் நீள்கிறது.
எப்பேர்பட்ட பூட்டுகளையும் திறக்கும் அனுபவத்துடன், தலைசிறந்த சமையல் கலைஞராகப் புகழ்பெறவும் காத்திருக்கும் இளைஞன் அவன். தவிர, பல வித்தியாசமான குணாதிசயங்களை ஒருங்கே கொண்ட இளைஞனும்கூட. அவனது உதவி, காரைத் தொலைத்த யுவதிக்குக் கிடைக்கிறது. கார்களைத் திருடிய வேகத்தில் அவற்றை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி விற்றுவிடும் கும்பல்கள் மத்தியில் இருவரும் கார் தேடும் படலத்தைத் தொடங்குகின்றனர். கிடைக்கும் இடைவெளியில் வாழ்க்கைத் தேடலின் பாடங்கள் பலவற்றை அவனிடமிருந்து கற்றுக்கொள்கிறாள் அவள். கார் மட்டும் தனது முகத்தைக் காட்டாமல் கண்ணாமூச்சி காட்டுகிறது.
இந்த இருவரையும் அடக்கிய முக்கோணத்தின் மூன்றாவது மூலையாக வருகிறார் வழக்கமான குணாதிசயங்கள் கொண்ட ஒரு மும்பை தாதா. ஊரே அலறும் அந்த தாதாவுக்கு தான் வளர்க்கும் செல்ல ஆடு என்றால் உயிர்! தனி உணவு, அலங்காரம் ஆகியவற்றுடன் அந்த ஆட்டுக்கு என பிரத்யேகமாக கார் ஒன்றையும் ஒதுக்கி ஆட்டை அன்பாக வளர்க்கிறார். கார் தொலைத்த யுவதி, அவளுக்கு உதவும் இளைஞன், தாதா என மூன்று கதாபாத்திரங்களுடன் தொலைந்த கார், அந்த ஆடு ஆகியவையும் இணைந்து கொள்ள வேகமெடுக்கிறது திரைக்கதை.
கதையைச் சுமக்கும் யுவதியாக நிர்மா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் மிதிலா பால்கர். குழந்தைமையும் வாலிபமும் ஒரு சேரக் குழைந்த மிதிலாவின் முகத்தில் பூத்து விரியும் புன்னகை போலவே, அவரை மையமாகக் கொண்ட கதையும் மெல்ல இதழ் பிரிந்து மலர்கிறது. காரின் ராசியான பதிவு எண்ணை முன்வைத்து அவர் வாயாடும் முதல் காட்சியே படத்தின் சாயலைச் சொல்லிவிடுகிறது.
தொலைதூரச் சிற்றூரில் பிறந்து, மும்பை போன்ற பெருநகரத்தில் பணிக்காகத் திணிக்கப்படும் இளம்பெண்ணின் தவிப்புகளை மிதிலா சுலபமாகப் பிரதிபலிக்கிறார். கூச்சமும் தயக்கமும், சற்றே தன்னம்பிக்கை குறைந்தவராகவும் தொடங்கும் அவரது கதாபாத்திரம், தான் நேசிக்கும் ஒன்று கைநழுவியதும் அதற்கான தேடலில் படிப்படியாய் உருமாறுவது சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மிதிலாவுக்கு உதவும் இளைஞனாக வரும் அபய் தியோலுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனபோதும் கொடுத்த கதாபாத்திரத்தில் அமைதியாக ரசிகர்களை ஈர்க்க முயல்கிறார். மும்பை தாதாவாக வரும் விஜஸ் ராஸ், மிதிலாவுக்கு இணையாகப் பல காட்சிகளில் சுவாரசியம் சேர்க்கிறார். கிஷோர்குமார் பாட்டுக்காகவும் ‘பாகுபலி’ என்ற வளர்ப்பு ஆட்டுக்காகவும் உருகும் தாதாவாக அவர் அடிக்கும் லூட்டிகள் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.
பரவலான நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் இருந்தபோதும் அவை, விழுந்து சிரிப்பதாக அல்லாது புன்னகைத்துக் கடக்கும்படியாக இருக்கின்றன. இந்தி தெரிந்தவர்கள் சற்றுக் கூடுதலாக நகைப்பதற்கெனச் சில இடங்களில் வசனங்களில் விளையாடுகிறார்கள். சப்-டைட்டிலில் படம் பார்ப்பவர்கள் பாவம்தான்.
வாழ்வின் அரிதாகிப்போன விழுமியங்கள் பலவற்றைப் படம் நெடுக மெல்லிய இழையெனக் கோத்திருப்பது, இயக்குநர் சச்சின் யார்டியின் சாமர்த்தியம். சீனத்து பேச்சுவழக்கான ‘மாண்டரின்’ மொழிபெயர்ப்பாளராக வரும் மிதிலாவுடன் சப்பை நாசியாளர்களின் உணவு மேசையில் தவிர்க்க முடியாத ‘சாப்ஸ்டிக்ஸ்’ குச்சிகளுடனான தொடர்பும் அந்த சாமர்த்தியத்தில் அடங்கும். எளிதில் ஊகிக்கக்கூடிய திருப்பங்கள், முடிச்சுகள் ஆகியவற்றுடன் தித்திக்காத நகைச்சுவையும் கலந்த இந்த இந்தித் திரைப்படத்தைக் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கலாம்.