Last Updated : 21 Jun, 2019 10:09 AM

Published : 21 Jun 2019 10:09 AM
Last Updated : 21 Jun 2019 10:09 AM

டிஜிட்டல் மேடை 32: ஒளிந்திருக்கும் உண்மைகள்

தேசத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் அணுசக்தி அவசியம் என இன்றைய உலக நாடுகள் தீவிரமாக நம்புகின்றன. ஆனால், அந்த நம்பிக்கையைப் பல உண்மைகளுடன் கேள்விக்குள்ளாக்குகிறது ‘சொர்னோபில்’ என்ற குறுந்தொடர்.

வரலாற்றின் மிகப்பெரும் அணு உலைத் துயரமான செர்னோபில் விபத்தை 5 அத்தியாயங்கள் வழியே விளக்கமாகச் சொல்லும் ஹெச்.பி.ஓ. தொடரான இதை ‘ஹாட் ஸ்டார்’ வெளியிட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தொடங்கி வாரம் ஒன்றாக வெளியான தொடர், ஜூன் முதல் வாரத்தில் முடிவடைந்தது. சர்வதேசத் திரை ஆக்கங்களை மதிப்பிடும் ஐ.எம்.டி.பி. தளத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரிவில், இதுவரை வேறெந்த நிகழ்ச்சிக்கும் கிடைக்காத மதிப்பெண் புள்ளிகளைப் பெற்று உலகளாவிய வரவேற்பையும் ‘செர்னோபில்’ பெற்றுள்ளது.

சோவியத் ரஷ்யாவின் அப்போதைய அங்கமான உக்ரைனின் செர்னோபில் பகுதியில் நான்கு அணுமின் உலைகள் செயல்பட்டு வந்தன. அவற்றின் ஒன்றில் 1986 ஏப்ரல் 26 அதிகாலையில் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்புச் சோதனை, பெரும் அணு உலை விபத்துக்கு வித்திட்டது.

அப்போதைக்கு 31 பேரும் அதன் பின்னர் ஆயிரக்கணக்கானோரும் சாகக் காரணமான அணுகுண்டு வெடிப்புக்கு நிகரான கதிர்வீச்சு காற்றில் தொடர்ந்து பரவத் தொடங்கியது.

அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அறிவியலாளர் கள் முதல் சாதாரணத் தொழிலாளர்கள்வரை போராடித் தங்களது உயிரைத் தியாகம் செய்தனர். இவர்களுடன் விபத்தின் பின்னணியை ஆராயப் புறப்படும் வல்லுநர்கள், உண்மையை மறைக்க முயலும் அரசு, அதிகார மையங்கள் எனப் பல தரப்புகளில் இருந்தும் ‘செர்னோபில்’லை அணுகுகிறது புதிய குறுந்தொடர்.

ஒரு உண்மைச் சம்பவத்தின் சித்தரிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பாக வெளியாகி இருந்தாலும், இதுவரை வெளிவராத ஆய்வுகள், ஆவணங்களின் அடிப்படையிலான தகவல்கள் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டுபவை.

செர்னோபில் பேரழிவின் பின்னணியை ஆராய்ந்து உலகுக்குச் சொல்ல முயன்ற அணு இயற்பியல் அறிவியலாளர் வெலெரி லெகஸோவ், தானறிந்த ரகசியங்களைக் குரல் பதிவுகளாக்கிய கையோடு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதுடன் தொடர் தொடங்குகிறது.

அவர் உட்பட, ஏராளமானோரைக் கதிரியக்கம் துளைக்கக் காரணமான விபத்து நடந்த அந்த இரவுக்குக் காட்சிகள் நம்மை அழைத்துச் செல்கின்றன. வெடிப்புக்கு ஆளான அணு உலையை விபரீதம் புரியாது அணைக்கப் போராடி கதிரியக்கத்தால் தாக்குறும் தீயணைப்பு வீரர் களின் தவிப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

வெலெரி லெகஸோவ் சம்பவ இடத்துக்கு அழைக்கப்படுகிறார். கோர்பசேவ் சார்பில் அமைச்சரவை பிரதிநிதியான போரிஸ், வெலெரியுடன் கை கோத்ததும் மீட்பு மற்றும் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் துரிதமா கின்றன.

கொல்லும் வெப்பத்தைச் சமாளிக்க ஆடைகளின்றி அணு உலையில் அடிப்பகுதியில் பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், உயிர்-ரோபாட்டுகளாக அணு உலையின் கூரையில் கதிர்வீச்சின் சிதிலங்களை அப்புறப்படுத்தும் தொழிலாளர்கள் ஆகியோருடன் இந்த இருவரின் தலைமையிலான முயற்சிகள் சறுக்குவதும், மீள்வதுமாக மீட்புப் போராட்டம் தொடர்கிறது. தூண்டப்பட்ட கதிரியக்கத்தின் முன்பாக மனித முயற்சிகள் எத்தனை அற்பமானவை என அடுத்து வரும் காட்சிகள் பொட்டில் அறைந்து உணர்த்துகின்றன.

இவற்றுக்கிடையே மனித மனத்தின் ஈரத்தை உரசும் நெகிழ்வான சம்பவங்களும் கடக்கின்றன. இருப்பிடத்தைக் காலி செய்யுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டும் ராணுவ வீரனை உதாசீனப்படுத்தும் மூதாட்டியின் ஆழமான பதில், மனிதர்கள் காலி செய்த குடியிருப்புகளின் வளர்ப்பு பிராணிகளைக் கொல்ல நியமிக்கப்பட்ட இளைஞனின் தவிப்பு, கதிரியக்கத்துக்குப் பலியாகும் கணவனின் இறுதி மூச்சு வரை பிரியாத கர்ப்பிணி மனைவியின் கண்மூடித்தனமான காதல் போன்றவை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் சினிமா காட்சிகளை விஞ்சுகின்றன. அதுபோலவே இறுதி அத்தியாயத்தின் நீதிமன்றக் காட்சிகள் சினிமா பாணியில் சென்றாலும், அங்கு எழுப்பப்படும் கேள்விகள் மனித மனசாட்சிகளை உலுக்க கூடியவை. குறிப்பாக லெகாசி வாயிலாக ‘பொய்களுக்கு நாம் தரும் விலையென்ன?’ எனத் தொடங்கும் முத்தாய்ப்பான வினாக்கள் தொடர் முடிந்த பின்னரும் நம்மை துரத்தக்கூடியவை.

விபத்தின் தோற்றுவாயைத் தோண்டி அறியும் எமிலி வாட்சனின் ‘உலானா’ கதாபாத்திரம், பல்வேறு அணு இயற்பிலாளர் கதாபாத்திரங்களின் தொகுப்பாக வருகிறது. அது தவிர்த்த முதன்மைக் கதாபாத்திரங்களின் இறுதிக் காலம், செர்னோபில் களத்தின் தற்போதைய நிலவரம் உள்ளிட்ட அரிய தகவல்களைத் தொடரின் நிறைவாகத் தொகுத்துப் பட்டியலிடவும் செய்திருக்கிறார்கள்.

சோவியத் ஒன்றியத்தைச் சிதறிடித்த காரணிகளில் ஒன்றாக செர்னோபில் விபத்தை கோர்பசேவ் சுட்டிக்காட்டியதும் பின்னாளில் நடந்தது. பாடம் ரஷ்யாவுக்கு மட்டுமானதில்லை என்பதுதான் ‘செர்னோபில்’ சொல்லும் இறுதிப்பாடமும்கூட!.

‘செர்னோபில்’ முன்னோட்டத்தைக் காண:


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x