ஹாலிவுட் ஜன்னல்: புதிதாய்ப் பிறந்த சிலந்தி மனிதன்!

ஹாலிவுட் ஜன்னல்: புதிதாய்ப் பிறந்த சிலந்தி மனிதன்!
Updated on
1 min read

அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் வரிசையில் தனித்து நிற்பது ஸ்பைடர்மேன். அந்த வரிசையில் அடுத்து வெளியாக இருக்கும் படம், ‘ஸ்பைடர்மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’.

கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்’ படத்தில் ஸ்பைடர்மேன் உட்பட சூப்பர் ஹீரோக்களில் பலரும் இறந்துபோய்விடுவார்கள். அவர்களில் ஸ்பைடர்மேன் உள்ளிட்ட சிலர், இந்த ஏப்ரலில் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: என்ட்கேம்’ படத்தில் மீள உயிர்த்திருந்தார்கள். அந்த வகையில் ‘அவெஞ்சர்ஸ்: என்ட்கேம்’ படத்தின் தொடர்ச்சியாகப் புதிய ஸ்பைடர்மேன் படத்தின் கதை தொடங்குகிறது.

தனது ஸ்பைடர் மேன் அவதாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கோடை விடுமுறையில் நண்பர்களுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு உல்லாசப் பயணம் செல்லும் பீட்டர் பார்கரை கடமை துரத்துகிறது. நிக் ஃபரி வழி நடத்தலில் வினோத வடிவத்தில் எழும் உலகுக்கான புதிய அச்சுறுத்தல்களை ஐரோப்பிய நாடுகளிடையே பறந்து பறந்து ஸ்பைடர்மேன் எதிர்கொள்கிறார்.

ஸ்பைடர்மேன் படங்களின் வரிசையில் 2017-ல் வெளியான ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்’கைத் தொடர்ந்து ‘ஸ்பைடர்மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’ வெளியாகிறது. ‘ஹோம் கம்மிங்’கைத் தொடர்ந்து புதிய ஸ்பைடர்மேன் திரைப்படத்தையும் ஜான் வாட்ஸ் இயக்கியுள்ளார். ஸ்பைடர்மேன் அவதாரமெடுக்கும் பீட்டர் பார்கராக டாம் ஹாலந்த் தோன்றுவதுடன், சாமுவேல் எல்.ஜாக்சன், மரிசா டோமி உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர்.

ஸ்பைடர்மேன் சாகசங்கள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதால், அந்த நாடுகளின் வெளியீட்டுக்கெனச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சோனி பிக்சர்ஸ் விநியோகம் என்பதால் ஜப்பான், சீனாவில் முன்கூட்டியே படம் வெளியாகிறது. தொடர்ந்து அமெரிக்காவில் ஜூலை 2 அன்றும் இந்தியாவில் ஜூலை 5 அன்றும் ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’ படம் வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in