வடசென்னை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை!: கார்த்தி பேட்டி

வடசென்னை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை!: கார்த்தி பேட்டி
Updated on
2 min read

பருத்தி வீரனில் மண்வாசனை மிகுந்த கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு மீண்டும் ஒரு மண்வாசனைப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்துவிட்டது. இம்முறை ’மெட்ராஸ்’ படத்துக்காக வடசென்னையின் மண்வாசனையில் புரண்டு வந்திருக்கிறார். தற்போது கொம்பன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், வடசென்னை இளைஞனைப் போல வெகு எளிமையான வார்த்தைகளில் பேச ஆரம்பித்தார்...

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பு வடசென்னை பகுதிகளுக்குப் போயிருக்கீங்களா?

ராயபுரம் போயிருக்கேன். இதுதான் துறைமுகமா என்று பார்த்திருக்கேன். அவ்வளவுதான். இந்தப் படம் மொத்தமா ஒரு புது அனுபவம். முழுக்கப் பெரம்பூர் ஏரியாவில்தான் வாழ்ந்துருக்கேன். வடசென்னைன்னு சொன்னாலே க்ரைம்னு சொல்லாம, அந்த ஏரியால நார்மலான வாழ்க்கையும் இருக்குனு நேர்ல தெரிஞ்சுகிட்டேன். அதையும் இந்தப் படத்துல காட்டியிருக்கோம். அவங்க இயல்பு வாழ்க்கை அவ்வளவு பாதுகாப்பாக இல்லைன்னு இந்தப் படத்தில சொல்லிருக்கோம்.

இந்த நேரத்துல வடசென்னை மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கேன். நடு ராத்திரி ரெண்டு மணிக்குப் போய் ஷூட் பண்ணு வோம். பகல் நேரத்தில் அவங்க ஆபிஸ் கிளம் புறப்போ ஷூட் பண்ணிட்டு இருப்போம். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் பொறுமையா இருந்தாங்க.

இது உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கதையா?

இல்லை. மூணு புதுப் பசங்களை வெச்சு எடுக்க இருந்த படத்தில், நானும் போய்ச் சேர்ந்துகிட்டேன். நான் நடிக்கணும்னு முடிவான உடனே, கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்து ரெடி பண்ணினோம். அன்பு, பாசம், காதல் இப்படி எல்லா விஷயத்திலும் நிஜ வாழ்க்கையை விட்டு விலகிப் போய்விடக் கூடாதுங்கிறதுல இயக்குநர் ரஞ்சித் தீர்மானமா இருந்தார். கலையரசன், வினோத், ஜானி இப்படி நிறைய புதுமுகங்கள்கூட நடிச்சிருக்கேன். இவங்கள்ல ஜானி நடிப்பில பிச்சிருக்கார்னு சொல்வேன். என்னைவிட இந்தப் புதுமுகங்களோட நடிப்பை ரொம்ப ரசிப்பீங்க.

மெட்ராஸ் என்ன மாதிரியான படம்?

ஒரு சுவர் எப்படி மக்களை ஆட்டிப் படைக்குதுங்கிற விஷயம் படத்துல முக்கியமானதா இருக்கும். அந்தச் சுவரைச் சுத்திதான் படமே நகரும். ஒரு சுவர், எட்டு வித்தியாசமான கதாபாத்திரங்கள். ‘மெட்ராஸ்' ஒரு வழக்கமான படம் கிடையாது.

ஒரு கதையை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இயக்குநரை வைத்தா அல்லது புதுமையான கதைக்காகவா?

இரண்டுமே முக்கியம்தானே. நல்ல கதை மட்டும் இருந்தால் போதுமா, நல்ல இயக்குநர் வேண்டும் அல்லவா? ஒரு கதையை இயக்குநர் சொல்லும்போது, அதை எவ்வளவு தெளிவா சொல்றார், அந்தக் கதை அவருக்கு எவ்வளவு பிடிச்சிருக்கு, என்னோட கதாபாத்திரம் எனக்கு எவ்வளவு பிடிச்சிருக்கு, இதெல்லாமே முக்கியம்தான்.

புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஏன் தயங்குறீங்க?

தயக்கம் இல்லை. என்னை எந்த ஒரு புது இயக்குநரின் கதையும் கவரவில்லை அவ்வளவுதான். அவங்க கதை சொல்லும்போது, இந்தக் கதை சூப்பரா இருக்கு, மிஸ் பண்ணக் கூடாது அப்படினு எனக்கு எதுவும் தோணல. ‘சகுனி' கதையாக எனக்குப் பிடித்திருந்தது. அதைப் படமா எடுக்கும்போது இயக்குநர் மட்டுமில்லாமல் வெவ்வேறு பிரச்சினைகள் இருந்தன. சரியா போகவில்லை.

ரஞ்சித்கூடப் புது இயக்குநர்தானே, ‘அட்டகத்தி' அப்படின்னு ஒரு படம்தானே பண்ணியிருக்கார். ‘நான் மகான் அல்ல' படம் பண்ணும்போது சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடி குழு' அப்படின்னு ஒரு படம்தானே பண்ணியிருந்தார். சூப்பரான கதையை வைச்சுக்கிட்டு முயற்சிக்கிற புதுமுக இயக்குநர்கள் இருப்பாங்க. என்கிட்ட அவங்க இன்னும் வரல அப்படிங்கிறதுதான் விஷயம்.

நீங்க எப்போ இயக்குநர் பாலா பட்டறையில் நுழையப்போறீங்க?

பாலா சார்தான் கூப்பிடணும். அவர் டேய் வாடான்னு கூப்பிட்டா உடனே போயிடுவேன். அவர் எனக்குக் குடும்ப நண்பர் மாதிரிதான். சார்னு கூப்பிட்டா கோபப்படுவார். “என்ன சார்னு எல்லாம் கூப்பிடுற?”னு சொல்வார். “இல்ல அண்ணா.. வந்திருது”ன்னு சொல்லுவேன். பொருத்தமாக இருக்கும்னு அவர் நினைக்கிறப்போ அவர் பட்டறையில நான் மாணவனா இருப்பேன்.

குடும்பப் பின்னணி இல்லாமல் இப்போது நிறைய நடிகர்கள் ஜொலிக்கிறாங்க. அவங்களப் பற்றிய உங்க பார்வை என்ன?

எங்கப்பா என்னை ஆக்டிங் ஸ்கூலுக்கா அனுப்பினார்?. படிச்சு முடிஞ்சு, வேலை செஞ்சுட்டு இருந்தப்போ திடீர்னு சினிமாக்குள்ள வந்தவன்தான் நான். முதல் வாய்ப்பிற்கு எங்கப்பா ஒரு அடையாளமா இருந்தாரே தவிர, எனக்காக அண்ணனோ அப்பாவோ உட்கார்ந்து கதைகூடக் கேட்கிறது கிடையாது.

இப்போ இருக்கிற பசங்க இன்னும் இன்னும் கூர்மையா இருக்காங்க. சிவகார்த்திகேயன் எல்லாம் டி.வியிலேயே ரொம்ப பெயர் வாங்கின ஆள். தன்னோட வசனத்தில் கலக்கியவர், இப்போ இன்னொருத்தவர் வசனம் எழுதிக் கொடுக்கிறார், சொல்லவா வேணும். நல்லா டான்ஸ் வேற ஆடுறார்.

விஜய் சேதுபதி எல்லாம் கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற விதம் சான்ஸே இல்ல! இந்தக் கதையில விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்துவிட்டார். விஜய் சேதுபதி எவ்வளவு போராட்டத்தில் இருந்து வந்திருக்கார் என்பது எனக்குத் தெரியும்.

நானும் சரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இப்போ வந்திருக்கும் சிம்ஹா உட்பா எல்லாருக்குமே இந்தப் பெயரைக் காப்பாற்றிக்கொள்வதுதான் கஷ்டம். அது தான் பெரிய போராட்டம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in