

ஒ
ரு வருடக் காத்திருப்புக்குப் பின் வெளிவந்திருக்கிறது ‘பூமரம்’. ‘1983’, ‘ஆக்ஷன் ஹீரோ பிஜூ’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு எப்ரித் சைன் இயக்கியிருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பும் கூடியிருந்தது. ‘ஞானும் ஞானும்’ என்ற இப்படப் பாடல் ஒரு வருடமாகத் தொடர்ந்து யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களுள் ஒன்றாக இருந்தது. இதுபோன்ற கல்லூரி வளாகப் பாடல்களின் தொகுப்புபோல் இந்தப் படம் இப்போது வெளியாகியிருக்கிறது.
குடும்பப் படம், திகில், நகைச்சுவை போன்ற பிரிவுகளைப் போல் கல்லூரி வாழ்க்கை சார்ந்த திரைப்படங்களையும் தனியாகப் பிரிக்கலாம். இந்தக் கல்லூரி வாழ்க்கை சார்ந்த திரைப்படங்கள் காதல் சார்ந்ததாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமல்ல. ஆனால் ‘ஒரு தலை ராகம்’, ‘இதயம்’ போன்று நாம் அறிந்த பெரும்பாலான படங்கள் காதலையே மையமாகக் கொண்டு வெளிவந்துள்ளன. இயக்குநர் செல்வாவின் அறிமுகப்படமான ‘தலைவாசல்’ இதிலிருந்து மாறுபட்டு ஒரு கல்லூரியின் கதையைச் சொன்னது. ‘பூமரம்’அந்த வரிசையிலானது.
மலையாளத்தில் வேணு நாகவல்லியின் ‘சர்வகலாஷால’, பரதனின் ‘சாமரம்’ லால் ஜோஸின் ‘க்ளாஸ்மேட்ஸ்’ போன்ற படங்களை இம்மாதிரிக் காதல் படங்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம். அதுபோல் ‘class of 1984' என்ற படத்தைத் தழுவி ப்ரியதர்ஷன் இயக்கிய ‘செப்பு’ படம், காதலுக்கு அப்பாற்பட்டு கல்லூரியின் அரசியலைப் பேசியது.
பல்கலைக்கழகக் கலைவிழாதான் பூமரத்தின் மையம். கதை இதுதான் எனத் திடமாகச் சொல்ல முடியாதபடியான ஒரு படமாகத்தான் இருக்கிறது. இயக்குநர் எப்ரித், ‘ஆக்ஷன் ஹீரோ பிஜூ’படத்தில் கையாண்ட அதே உத்தியைத்தான் இதிலும் கையாண்டிருக்கிறார். துண்டு துண்டான காட்சிகளைத் தொகுத்து சினிமா ஆக்கியிருக்கிறார். அதனால் எடிட்டிங்கில்தான் இந்த சினிமா பார்வையாளனுக்கான ஒரு கதையாக முழுமையாகியிருக்கும் என ஊகிக்க முடிகிறது. பாடல்களுக்கு இடையே சினிமாவே மாண்டேஜ் காட்சிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தின் புகழ்பெற்ற பல கேம்பஸ் பாடல்கள் இடையிடையே பின்னணி இசையில்லாமல் வந்துசெல்கின்றன.
எர்ணாகுளத்தின் புகழ்பெற்ற அரசுக் கலைக் கல்லூரியான மஹாராஜா கலைக் கல்லூரி மாணவர்களும், புனித தெரஸா பெண்கள் கல்லூரி மாணவர்களும்தாம் இதன் நாயகர்கள். நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மட்டுமே பரிச்சயமான முகம். மற்ற அனைவரும் புதியவர்களே. மகாராஜா கல்லூரி மாணவர்களையே கதாபாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். தொடர்ந்து கோப்பை வென்றுவரும் தெரஸா கல்லூரியைத் தோற்கடித்துக் கோப்பையைச் சொந்தமாக்க வேண்டும் எனப் புறப்படுகிறார்கள்.
இந்தப் பின்னணியில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ரோம் எம்மட்டியின் ‘ஒரு மெக்ஸிக்கன் அபார’ படத்தை இது நினைவுபடுத்துகிறது. காளிதாஸ், மஹாராஜாவின் தலைவர். நீட்டா பிள்ளை புனித தெரஸாவின் தலைவர். இந்த இரு முன்னணிக் கதாபாத்திரங்களும் சந்தித்துக்கொள்ளும் காட்சியே இல்லை. இது இந்தப் படத்தின் விசேஷமான அம்சங்களுள் ஒன்று. காட்சிகளின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகக் கடந்துசெல்கிறார்கள்.
கதகளி, மோகினி, ஓட்டந்துள்ளல், பரதம், லலித கானம் (கதைப் பாட்டு) போன்ற மரபான கலைப் போட்டிகளும் மிமிக்கிரி, கிட்டார், மைம் (மெளன நாடகம்) போன்ற நவீனக் கலை போட்டிகளும் அங்குள்ள கலைகளின் பல வித வண்ணங்களைக் காட்டுகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஏதாவது கலையொன்றில் தன்னை அர்ப்பணிப்புடன் ஒப்புகொடுக்கிறார். படம் தொடங்கிய சில நிமிடங்களில் தொடங்கிவிடும் சர்வகலாசலையின் கலைவிழா ஒரு நிஜமான கலை அனுபவத்தைத் தருகிறது.
இந்தக் காட்சிகளுக்குள் மாணவப் பருவத்தின் அத்துணை சுவாரசியங்களையும் கொண்டாட்டமாகக் காட்சிப்படுத்தியுள்ளது படம். இந்தப் படத்தில் இரு மவுன நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்று ஸ்மார்ட்போனின் தவறான பயன்பாட்டால் தற்கொலைசெய்துகொள்ளும் மாணவி குறித்தானது. இரண்டாவது இடைவிடாத போர்களால் சக்கரவர்த்தி ஆன அசோகரைக் குறித்தது; அவர் பவுத்தத்தைத் தழுவியதை சமூககால வன்முறைக்கான தீர்வாக முன்னிறுத்துவது.
மகாராஜா கல்லூரிக்கு வெற்றி தேடித் தரக்கூடியதாக நம்பப்படும் இந்த மவுன நாடகம் அரங்கேற்றம் காணாமல்போகிறது. கல்லூரி அரசியலுக்குக்கான தீர்வாகவும் பவுத்தத்தை முன்னிறுத்துவதன் மூலம், படம், அந்த மாணவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. ஆனால் இன்றைய பவுத்தத்தைப் போல் படமும் சம்பிரதாயமாக முடிந்துவிடுகிறது.
தொடர்புக்கு jeyakumar.r@thehindutamil.co.in