

‘அறம்’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தவர் சுனு லட்சுமி. தாயின் பரிதவிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தியதால் பல தரப்பிலிருந்தும் பொழியப்பட்ட பாராட்டு மழையில் நனைந்தார். தமிழ் சினிமாவுக்கு கதாநாயகிகளை வாரி வழங்கும் கேரளத்தின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் இவர். ‘அறம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘கர்தவ்யம்’ இன்று ரிலீஸ். சுனு லட்சுமியிடம் உரையாடியதிலிருந்து...
தொடக்கத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?
நான் இதுவரை நடித்த எல்லாப் படங்களிலுமே ஹீரோயினாகத்தான் நடித்துள்ளேன். ‘அறம்’ படத்தில் மட்டும்தான் இப்படி ஒரு கேரக்டர் ரோலில் நடித்தேன். முதலாவது, இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடித்தது. எனவே, ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்ற என்னுடைய கொள்கையில் இருந்து விலகி, இதில் நடித்தேன்.
இரண்டாவது, இயக்குநர் கோபி நயினார் என்னிடம் கதை சொன்னபோது, ‘படத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே நயன்தாரா வருவார். தொடக்கம் முதல் இறுதிவரை நீங்கள்தான் இருப்பீர்கள் என்றார். ஆனால், படப்பிடிப்பின்போது நயன்தாராவின் பகுதிகள் அதிகமாக்கப்பட்டுவிட்டன.
கேரக்டர் ரோலில் நடித்ததால் கதாநாயகி இமேஜ் பாதிக்கப்படாதா?
பாதிக்காது என்றுதான் நினைக்கிறேன். ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த பிறகு இப்போதும் ஹீரோயினாகத்தானே நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதுபோல நானும் அடுத்தடுத்து ஹீரோயினாகவே நடிப்பேன். ‘அறம்’ மாதிரியான வலிமையான கேரக்டராக இருந்தால் கேரக்டர் ரோலில் நடிக்க எப்போதும் ரெடி!
படப்பிடிப்பில் நயன்தாராவும் நீங்களும் பேசிக்கொண்டீர்களா?
இரண்டு பேருமே கேரளா என்பதால் எங்களுடைய உரையாடல் மலையாளத்திலேயே இருக்கும். பொதுவாக ஷூட்டிங் விஷயமாகத்தான் பேசிக் கொள்வோம். அதைத் தவிரப் பெரிதாக எதுவும் பேசியதில்லை. படத்தில் என்னுடைய உடை சேலை தான். படம் ரிலீஸான பிறகு ஒரு அவார்டு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். அப்போது நான் மாடர்ன் டிரெஸ்ஸில் இருந்ததால் அவரால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்தான் சுனுலட்சுமி எனச் சொன்னதும் அவர் ஆச்சரியப்பட்டார்.
நடிக்கவந்த புதிதில் மளமளவென நிறைய படங்களை ஒப்புக் கொண்டேன். அவற்றில் சில படங்கள் இப்போதுதான் ரிலீஸாகின்றன. ஆனால், ஒரே மாதிரி நடித்தது ஒரு கட்டத்தில் போரடித்துவிட்டது. அதனால் செலக்டிவாக இப்போது நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். வருடத்துக்கு ஒரு படம் நடித்தால்கூடப் போதும். ஆனால் அந்த வருடம் முழுவதும் ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருக்கும் படமாக அது இருக்க வேண்டும்.
அடுத்து எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்?
‘உதயம் என்.ஹெச். 4’, ‘புகழ்’ படங்களை இயக்கிய மணிமாறன் இயக்கும் ‘சங்கத் தலைவன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். சமுத்திரக்கனி சார் ஹீரோவாக நடிக்கிறார். நானும் விஜய் டிவி ரம்யாவும் கதாநாயகிகளாக நடிக்கிறோம். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த நீங்கள், இதுவரை ஒரேயொரு மலையாளப் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறீர்கள், என்ன காரணம்?
எனக்குத் தமிழையும் தமிழ்ப் படங்களையும் ரொம்பவே பிடிக்கும். ஒரு படத்தில் நடித்து முடிப்பதற்குள் அடுத்த படத்தில் வாய்ப்பு இங்குதான் உடனே கிடைக்கிறது.