மாற்றுக்களம்: மவுனமாக வெளிப்படும் தேசபக்தி

மாற்றுக்களம்: மவுனமாக வெளிப்படும் தேசபக்தி
Updated on
1 min read

பிரபல நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பார்கள், விளம்பரப் படங்களில் நடிப்பார்கள். சமுதாயத்திற்கு எதையாவது செய்ய நினைத்தால் மரம் நடுவார்கள், விழிப்புணர்வு படங்களில் நடித்துக்கொடுப்பார்கள். ஆனால் ஒரு விழிப்புணர்வுக் குறும் படத்தைத் தயாரிப்பார்களா அதுவும் திரைத் துறையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும்போது என்று கேட்டால் எளிதில் பதில் கிடைக்காது.

ஏனெனில் தங்கள் மார்க்கெட் பாதிக்கப்படுமோ எனப் பயப்படுவார்கள். ஆனால் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பயப்படாமல் காரியமாற்றியுள்ளார். ஐயம் தட் சேஞ்ச் என்னும் விழிப்புணர்வு குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்தக் குறும்படம் யூ டியுபில் பரவலான வரவேற்பைப் பெற்றுவருகிறது.

சுகுமார் இயக்கிய இந்தப் படத்தின் மையக் கருத்து மாற்றம். அதுவும் ஒரு தேசத்தின் மாற்றம். தேசம் மாற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பதால் தேசம் மாறிவிடப்போவதில்லை. தேசத்தில் மாற்றம் வர வேண்டுமானால் அதன் குடிமக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும். குடிமக்களிடம் மாற்றம் எப்படி வரும்? ஒவ்வொரு தனிநபரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் மாறினால் ஒரு தேசத்தின் தலையெழுத்தை மாற்றிவிடலாம் என்பதே உண்மை. இந்த உண்மையை மூன்று நிமிடங்களில் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ள குறும்படம்தான் ஐயம் தட் சேஞ்ச்.

போக்குவரத்து விதியை மீறிய பணக்கார இளைஞன் போக்குவரத்து காவலருக்கு லஞ்சம் கொடுக்க முனைகிறான், தேர்வில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவியின் விடைத் தாளைப் பார்த்து எழுத முயல்கிறாள் ஒரு மாணவி. தந்தையுடன் தெருவில் செல்லும் சிறுவன் ஒருவன் தான் குடித்து முடித்து காலியான குளிர்பான பாட்டிலை குப்பைத் தொட்டியை நோக்கி தூக்கி வீசுகிறான் அது தெருவில் விழுகிறது, நடிகர் ஒருவர் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார், வெடிகுண்டு சோதனைக் கருவியில் சோதனையிட்டுக்கொள்ளாமல் செல்கிறார்.

அப்போது, பின்னணியில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கிறது. நடிகர் பாதுகாப்பு சோதனைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறார், சிறுவன் குப்பைத் தொட்டியில் காலி குளிர்பான பாட்டிலை எடுத்துப் போடுகிறான். மாணவி பார்த்து எழுத மறுத்து விடைத் தாளைத் தள்ளிவிடுகிறாள். போக்குவரத்துக் காவலர் பணக்கார இளைஞனுக்கு அபராதம் விதிக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்வதே தேச பக்தி, மாற்றம் நம் ஒவ்வொருவரிடமும் இருந்து தொடங்க வேண்டும், நான் மாறிவிட்டேன், நீங்களும் மாறுங்கள் என்ற வசனத்தை நடிகர் பேசுகிறார். அல்லு அர்ஜுன் நடிகராகவே வருகிறார்.

கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் எல்லோரும் மனம் மாறிய பின்னர் அவர்கள் உடைகளில் குத்தியிருக்கும் தேசியக் கொடி மட்டும் வண்ணத்தில் மின்னுகிறது. தேசத்தின் செழுமையை அது குறிக்கிறது. கச்சிதமாக எடுக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படம் காண்போரை எளிதில் தன்வசப்படுத்திவிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in