

சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘வேலைக்காரன்’ படத்துக்காகக் கொலைகாரன் குப்பம் என்ற பிரம்மாண்ட குடிசைப் பகுதி செட் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் அதைப் பார்க்கப் பொதுமக்கள் ஆவலுடன் கூடினார்கள். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் பெயர் சூட்டப்படாத படத்துக்காக அம்பாசமுத்திரம் நகரத்தைப் போன்ற பிரம்மாண்டமான குடியிருப்புப் பகுதி செட்டை 3 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உருவாக்கி வருகிறார்கள்.
கலை இயக்குநர் ஆர்.கே.விஜயன் தலைமையில் 200 தொழிலாளர்கள் இதை உருவாக்க வேலை செய்து வருகிறார்களாம். செட் வேலை முடிந்ததும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகிய இரண்டு கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'பேய் பசி' என்ற படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாடலைப் பாட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்ரீனிவாஸ் கவிநயம் என்ற புதியவர் இயக்கும் இப்படத்தின் கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர். இவருடன் அம்ரிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 'பேய் பசி' படத்தில் விஜய் சேதுபதி பாடவிருப்பதை யுவன் தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்
காதலரை மணக்கும் ஸ்ரேயா
2001-ம் ஆண்டில் வெளியான ‘இஷ்டம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திரமான ஸ்ரேயாவுக்குத் திருமணம் உறுதியாகிவிட்டது. ரஷ்யத் தொழிலதிபர் ஆந்திரி கோஸ்செவை வரும் 17-ம் தேதி மணக்க இருக்கிறார்.
சல்மான் ருஷ்டியின் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'மிட்நைட் சில்ட்ரன்' ஆங்கிலப் படத்திலும் நடித்திருக்கும் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்புகள் இன்னும் வற்றிப்போகவில்லை. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நரகாசுரன்' படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்துவரும் ஸ்ரேயா, தெலுங்கில் ஒரு படத்திலும், இந்தியில் ஒரு படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்ரேயா நீண்டகாலமாகக் காதலித்து வந்தவர்தான் இந்த ஆந்திரி கோஸ்செவ்.
ராஜஸ்தானில் விக்ரம்
விக்ரமை பாக்ஸ் ஆபீஸ் நாயகன் ஆக்கிய படம் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சாமி’. தற்போது ‘சாமி-2’ படத்தில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய, ‘இருமுகன்’ படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன் இப்படத்தைத் தயாரித்துவருகிறார். முதல்கட்டமாக திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் நடந்துமுடிந்த படப்பிடிப்பு, தற்போது தூத்துக்குடியில் நடந்துவருகிறது.
அங்கிருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்களாம். கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் படப்பிடிப்பும் ஜெய்சால்மரில் நடத்தப்பட்டதுதான். கதையின் ஒரு பகுதியும் ராஜஸ்தான் வில்லன் சம்பந்தப்பட்டதுதான் என்கிறார்கள் படக்குழுவினர்.
சாதனை விருது
‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் மணிரத்னம். அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருவதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படம் தொடங்கிய நேரம், கர்நாடக மாநில அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது மணிரத்னத்தைத் தேடி வந்திருக்கிறது. பத்துலட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய இவ்விருதை மாநில முதல்வரே வழங்கியிருக்கிறார்.