

ந
டந்து முடிந்த 90-வது ஆஸ்கர் திருவிழாவில் பார்வையாளர்களைக் கலங்கடித்த படம் ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங், மிசௌரி’ (Three Billboards Outside Ebbing, Missouri). மார்ட்டின் மெக்டோனா இயக்கியிருக்கும் இந்தப் படம் மனிதர்களின் பல்வேறு உணர்வுநிலைகளின் கலைடாஸ்கோப்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தன் மகளின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் புறப்படுகிற பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை இது. படுகொலை செய்யப்பட்ட 19 வயது ஏஞ்சலாவுடைய அம்மா மில்ரெட், விவாகரத்தானவர். பள்ளி செல்லும் மகனுடன் தனித்து வாழ்கிறார். மகளின் மரணம் தந்த வேதனையைவிட அந்தக் கொலை குறித்த விசாரணையில் எந்த முன்னகர்வும் இல்லை என்பது மில்ரெட்டை இரும்பாக்குகிறது.
காவல்துறை தன் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்பதால் தன் மகளின் வழக்கு குறித்து அவர்களுக்கும் தன் பகுதி மக்களுக்கும் நினைவூட்ட முடிவெடுக்கிறார். தான் வசிக்கும் எபிங் பகுதியின் வெளிப்புறச் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் மூன்று விளம்பரப் பலகைகளை வாடகைக்கு எடுக்கிறார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாசகத்தை எழுதுகிறார்.
‘இறந்துகொண்டிருக்கும்போது நடந்த வல்லுறவு; இதுவரை ஒருவரும் கைதாகவில்லை; எப்படிச் சாத்தியம் தலைவர் பில் வில்லபி’. கொட்டை எழுத்துகள் பளிச்சிட, பற்றிக்கொள்கிறது நகரம். செய்தி நிறுவனங்கள் தங்கள் பங்குக்குப் பரபரப்பைக் கூட்ட, விசாரணை அதிகாரிகளுக்கு நெருக்கடி. தலைவர் வில்லபிக்குக் கூடுதல் தலைவலி. காரணம் விளம்பரப் பலகையில் அவரது பெயர்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மில்ரெட்டின் வீட்டுக்குக் காவல் அதிகாரி வில்லபி வருகிறார். எவ்வளவு முயன்றும் இந்த வழக்கில் ஒரு துருப்புகூடக் கிடைக்கவில்லை என அவர் சொல்ல, எந்தச் சலனமும் இல்லாமல் இறுக்கமாக இருக்கிறார் மில்ரெட். தான் புற்றுநோயால் செத்துக்கொண்டிருப்பதாக வில்லபி சொல்ல, “தெரியும்” என்கிறார் மில்ரெட். “அது தெரிந்துமா விளம்பரப் பலகையை வைத்தீர்கள்?” என வில்லபி கேட்க, “நீங்கள் இறந்தபிறகு வைத்தால் இந்த அளவுக்குப் பலன் இருந்திருக்காது” என்று மில்ரெட் சொல்ல, வில்லபி வாயடைத்துப்போகிறார்.
எளியவர்களுக்கு நீதி கிடைப்பதில் ஏற்படுகிற தாமதமும் மகளின் பேரிழப்பும் மில்ரெட்டைக் கோபமே வடிவாக மாற்றியிருந்தன. அந்தக் கோபம்தான் அவரைத் துணிவோடும் உறுதியோடும் படம் முழுக்க வழிநடத்துகிறது. முன்னாள் கணவன், திருச்சபைத் தலைவர், பல் மருத்துவர் என யார் சொல்லியும் விளம்பரப் பலகைகளை அகற்ற மில்ரெட் மறுத்துவிடுகிறார்.
தன் மனைவி, தன்னுடன் பணியாற்றும் காவலர் டிக்ஸன், மில்ரெட் மூவருக்கும் கடிதம் எழுதிவைத்துவிட்டு வில்லபி தற்கொலை செய்துகொள்கிறார். விளம்பரப் பலகைகள் எரிக்கப்படுகின்றன. ஆனாலும், மில்ரெட் சோர்ந்துவிடவில்லை. முன்னைக்காட்டிலும் உறுதியோடு இருக்கிறார். ஏஞ்சலா அன்று அந்தச் சாலையில் தனியாக நடந்துசென்று இப்படிப் படுகொலை செய்யப்படக் காரணம் தான்தானோ என்று நினைத்து அழுகிற நொடியில் மில்ரெட் அடைகாத்துவரும் கோபத்தின் நியாயத்தை உணரமுடிகிறது.
நீதி கேட்டுப் போராடும் கோபக்காரத் தாய், புற்றுநோயால் தற்கொலை செய்துகொள்ளும் காவல் அதிகாரி, நிறவெறியும் அதிகாரத் திமிரும் கொண்ட, பின்னாளில் அன்பின் வழிநின்று ஏஞ்சலாவின் விசாரணைக் கோப்பைத் தீயிலிருந்து மீட்கும் காவலர், ஜன்னல் வழியே தூக்கி வீசப்படும் விளம்பர நிறுவன ஊழியர் எனப் பலரையும் சுற்றிப் படம் நகர்ந்தாலும் கனன்று எரியும் தாயின் கோபமே படம் முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறது.
எதிர்பாராத தருணமொன்றில் ‘கோபத்திலிருந்து கோபமே பிறக்கிறது’ என்பதை மில்ரெட் உணர்வார். அன்பும் கோபமும் இருவேறு துருவங்கள் என்றாலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்பதை நுட்பமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மில்ரெட்டாக நடித்த ஃபிரான்ஸிஸ் மெக்டோர்மெண்ட் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் காவலர் டிக்ஸனாக நடித்த சாம் ராக்வெல் துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றிருக்கிறார்கள்.
தொடர்புக்கு: brindha.s@thehindutamil.co.in