

அந்தச் சிறுவனுக்கு அப்போது 8 வயது. அப்போதே அவன் ‘சூப்பர் 8’ கேமராவைக் கையாளப் பழகிவிட்டான். அதை வைத்துக்கொண்டு தன்னுடைய 10 வயதில், குறும்படங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டான்.
அந்தச் சிறுவன், பின்னாளில் மெக்ஸிகோவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவனாகிறான். ‘வெற்றிகரமான த்ரில்லர் பட இயக்குநர்’ என்று அழுத்தமாகக் கால் பதிக்கிறான். தான் இயக்கிய ‘பான்ஸ் லாபிரிந்த்’ எனும் ஸ்பானிய மொழிப் படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட’த்துக்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. நூலிழையில் தவறவிட்ட ஆஸ்கர் விருதை, இந்த ஆண்டு ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்’ படத்தை இயக்கியதற்காக ‘சிறந்த இயக்குநர்’ பிரிவில் வென்றான். அந்தச் சிறுவன்… கில்லியர்மோ தெல் தோரோ.
மெக்ஸிகோவின் குவாதலஹாராவில் பிறந்த கில்லியர்மோ, குவாதலஹாரா பல்கலைக்கழகத்தில் சினிமா தொடர்பான படிப்பை முடித்தார். தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரிந்து வந்த அவர், ‘க்ரோனோஸ்’ (1993) எனும் தன்னுடைய முதல் படத்தை இயக்குவதற்கு முன்பு, சுமார் 10 குறும்படங்களை இயக்கினார்.
அவரது திறமையைப் பார்த்து வியந்த ‘மிராமாக்ஸ் ஃபிலிம்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம், அவரது இரண்டாவது படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அளித்தது. ‘மிமிக்’ என்ற அந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது, கதையை மாற்றச் சொல்லுதல், திரைக்கதையில் மூக்கை நுழைத்தல், நடிகர்களை மாற்றுதல் என அந்த நிறுவனத்தின் உரிமையாளரால் பல தொல்லைகள் ஏற்பட்டன.
‘நிறுவனமயத்துக்கு ஆதரவான ஹாரர் படம், நிறுவனமயத்துக்கு எதிரான ஹாரர் படம் என இரண்டு விதமான ஹாரர் படங்கள் உள்ளன. என்னுடையது இரண்டாவது வகை’ என்று சொல்லும் கில்லியர்மோவுக்கே ‘திகில்’ கொடுத்த, அந்த உரிமையாளர் வேறு யாரும் அல்ல… ஹாலிவுட் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காகத் தற்போது ஹாலிவுட்டால் முற்றாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஹார்வே வெய்ன்ஸ்டீன்தான் அந்த உரிமையாளர்!
அந்தப் படத்தை எடுத்துக்கொண்டிருந்த காலத்தில்தான், கில்லியர்மோவின் தந்தை ஃபெதரிக்கோ தெல் தோரோ அடையாளம் தெரியாத சில நபர்களால் கடத்தப்பட்டார். அவரை விடுக்க வேண்டுமென்றால், கடத்தல்காரர்கள் கேட்ட தொகையைக் கொடுக்க வேண்டும். ஆனால் கில்லியர்மோவிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லை. அப்போது, அவரது முதல் படத்தின் முன் தயாரிப்புப் பணிகளின் போது சந்தித்த நண்பர் ஒருவர் அவருக்குக் கைகொடுக்கிறார். அவர் கொடுத்த பணத்தைக்கொண்டு, சுமார் 72 நாட்களுக்குப் பிறகு தன் தந்தையை மீட்டார் கில்லியர்மோ. அந்த நண்பர் வேறு யாருமல்ல… ‘டைட்டானிக்’ புகழ் ஜேம்ஸ் கேமரூன்தான்.
கில்லியர்மோ ஜேம்ஸ் கேமரூனுடன் மட்டும் நட்பு கொண்டிருக்கவில்லை. ‘கிராவிட்டி’ எனும் படத்துக்காக ஆஸ்கர் வென்ற முதல் மெக்ஸிகன் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்ற அல்ஃபோன்ஸோ குவோரான், ‘பேர்ட்மேன்’ எனும் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் வென்ற அலெசாந்த்ரோ இன்யொரிட்டு ஆகியோரும் கில்லியர்மோவின் நெருங்கிய நண்பர்கள்.
ஆரம்ப காலத்திலிருந்து, திரைப்படத்துறையில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து நிறைய ‘ரிஸ்க்’ எடுத்தார்கள். அதன் காரணமாகத்தான் ‘கிராவிட்டி’, ‘தி ரெவனெண்ட்’, ‘பான்’ஸ் லாபிரிந்த்’ போன்ற படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் இவர்களால் முடிந்திருக்கிறது. ஸ்பானிய மொழித் திரைப்படங்கள், உலக அளவில் கவனிக்கப்படுவதற்கு இந்த ‘மூன்று முகங்களின்’ பங்களிப்பு அபாரமானது!
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு பாராட்டும் இந்த மூன்று மெக்ஸிக்கன் இயக்குநர்களையும் ‘தி த்ரீ அமிகோஸ்’ (மூன்று நண்பர்கள்) என்று ஹாலிவுட் அழைக்கிறது. தற்போது, கில்லியர்மோ, ஆஸ்கர் வென்றிருப்பதன் மூலம், திரைத்துறையில் இந்த மூன்று நண்பர்களின் வாழ்க்கை, ஒரு முழுமையான வட்டத்தை அடைந்திருக்கிறது!
ஆவி, பேய், ரத்தக் காட்டேறி போன்ற விஷயங்களில் மெக்ஸிகன் மக்களுக்குத் தீவிர நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையோடு, ‘மாய யதார்த்தவாதம்’ போன்ற லத்தீன் அமெரிக்கக் கூறுகளையும் இணைத்துக் கதை சொல்லும் முறைதான் கில்லியர்மோவின் ‘மேஜிக்!’. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், அவர் இயக்கிய ‘பான்’ஸ் லாபிரிந்த்’ (2006) படம்.
ஒரு பக்கம், நிஜ உலக மனிதர்களுக்கிடையேயான உறவு நிலைகளைப் பற்றிப் பேசுதல், இன்னொரு பக்கம், மாய உலக ஜீவன்களுடனான உறவு நிலைகளைப் பற்றிப் பேசுதல் என ‘டபுள் ட்ராக்’கில் இந்தப் படம் செல்கிறது. மாயமும் யதார்த்தமும் கலந்த இந்தப் படத்தைப் பார்க்கும்போது, காப்ரியல் கார்சியா மார்கேஸின் கதையைத் திரையில் படிப்பது போல இருக்கும். இந்தப் படம் போலவே கில்லியர்மோவின் இதர ஸ்பானியப் படங்களும் அவரது இயக்கத்தில் வெளியான ஆங்கிலப் படங்களும் ‘மேஜிக்கல் ரியலிஸ’ தன்மையைக் கொண்டிருக்கும். அதற்குக் காரணம், கில்லியர்மோவே ஒரு சிறந்த நாவலாசிரியர்தான். அவரது எழுத்தில் வெளியான ‘தி ஸ்ட்ரெய்ன்’ எனும் நாவல், அதற்கு உதாரணம்.
மேற்சொன்ன அத்தனை காரணங்களையும் தாண்டி, கில்லியர்மோ தெல் தோரோவை நாம் தலையில் வைத்துக் கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு காரணம் உள்ளது. ஆஸ்கர் விருது பெறும்போது அவர் ஆற்றிய உரையைக் கேட்டவர்களுக்கு அந்தக் காரணம் என்னவென்பது தெரியும். “நான் ஒரு வந்தேறி. ஆனால் நாம் பணியாற்றும் இந்தத் திரைப்படத் துறை, எல்லா வித்தியாசங்களையும் அழித்துவிடுகிறது!”. அமெரிக்காவில் குடியேறுவதற்குச் சில நாட்டினருக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், கில்லியர்மோவின் வார்த்தைகள் மிகவும் பொருள் பொதிந்தவை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை!