

குழந்தைகளின் கோடை விடுமுறையைக் குதூகலத்துடன் தொடங்கிவைக்க ஏப்ரல் 13 அன்று திரைக்கு வருகிறது ‘ராம்பேஜ்’ ஹாலிவுட் திரைப்படம்.
ராம்பேஜ் சகாப்தம் 1986-ல் வீடியோ கேம் வடிவில் தொடங்கியது. குரங்கு, ஓநாய், பல்லி உள்ளிட்ட உயிரினங்கள், எதிர்பாராத மரபணுப் பாதிப்பால் ராட்சத வடிவை அடைகின்றன. வட அமெரிக்கப் பெரு நகரங்களை ஒவ்வொன்றாக அழித்தவாறு அதகளம் செய்யும் அவற்றை ராணுவத் தளவாடங்கள் உதவியுடன் அழித்தொழிப்பதே விளையாட்டு. இதற்குக் கிடைத்த வரவேற்பு, சில வருடங்கள் இடைவெளியில் ராம்பேஜின் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுகளின் வரிசையை அடுத்தடுத்து உலகமெங்கும் வெளியாகச் செய்தன. அந்த வகையில் ஏழாவது பாகத்தை ஃபாண்டஸி மற்றும் அறிவியல் புனைவுத் திரைப்படமாக தயாரிக்க 2011-ல் முடிவானது.
அப்படித் தொடங்கிய முயற்சிகளால் தற்போது 3டி மற்றும் ஐநாக்ஸ் பதிப்புகளாக, மிரட்டலான பின்னணி இசையுடன் பெரும் பொருட்செலவில் உருவான ‘ராம்பேஜ்’ திரைப்படம் வெளியாக உள்ளது. ஆராய்ச்சியாளராக வரும் ட்வெய்ன் ஜான்சன் செல்லமாக வளர்க்கும் வெள்ளைநிற கொரில்லா ஒன்று மரபணுப் பரிசோதனைக்கு ஆளாகிறது. மரபணு மாற்றத்தின் எசகுபிசகான விளைவுகளால் அது ராட்சத வடிவம் எடுப்பதுடன், அதன் சாந்த குணமும் அடியோடு மாறுகிறது. இந்த கொரில்லாவுடன் பறக்கும் ஓநாய், டைனோசர் வடிவ முதலை என மொத்தம் மூன்று பிரம்மாண்ட உயிரினங்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவும் அலைகின்றன. அவற்றை அடக்க முற்படும் ராணுவ வியூகங்கள் தோல்வியடைகின்றன.
தனது கொரில்லாவைப் பழைய நிலைக்கு மீட்க மருத்துவக் குழுவுடன் களமிறங்கும் ஜான்சனின் முயற்சிகள், ஆக்ஷன் ஹாலிவுட் திரைப்படத்தின் இலக்கணமாகிய ‘அழிவின் பேராபத்திலிருந்து உலகைக் காக்கும்’ சாகச நடவடிக்கையாக மாறுவதே ‘ராம்பேஜ்’ திரைப்படம்.
இயக்குநர் பிராட் பெய்டனுடன் இணைந்து ட்வெய்ன் ஜான்சனே படத்தைத் தயாரித்திருக்கிறார். இவருடன் ஜெப்ஃரி டீன் மார்கன், நவோமி ஹாரிஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் உலகம் முழுக்கப் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.