Last Updated : 09 Mar, 2018 10:49 AM

 

Published : 09 Mar 2018 10:49 AM
Last Updated : 09 Mar 2018 10:49 AM

சி(ரி)த்ராலயா 08: வேலையை விட்டு வெளியே வா!

ஒரு கால்கட்டைப் போட்டு விட்டால் பொறுப்பில்லாமல் இருக்கும் கோபு சரியாகிவிடுவார் என்று பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார் அவருடைய தயார். திருமணத்திலிருந்து தப்பிக்க மீண்டும் பெரியப்பா மகனிடம் சென்று தனக்கு மெட்ராஸில் வேலை வங்கித் தரும்படி கேட்டார் கோபு. இம்முறை ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலையை வாங்கித் தந்தார் அண்ணன்.

காவாலி பிரதர்ஸ் என்ற அந்த கம்பெனியில் கோபுவுக்கு மேனேஜர் உத்தியோகம். கோபுவின் ஒரே வேலை போன் கால்களுக்குப் பதில் தருவது. பொறுப்பான வேலை கைநிறைய சம்பளம் என்று உற்சாக இளைஞனாக மாறிவிட்ட மகனுக்கு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு பெண்ணைப் பார்த்தார் அம்மா. கோபுவுடைய பெற்ற அம்மாவின் இந்தப் பொறுப்பான செயலுக்கு, காஞ்சிபுர வளர்ப்பு அம்மா கடும் கண்டனம் தெரிவித்தார். “எனது தத்துப் பிள்ளைக்கு எப்போ கல்யாணம் செய்யணும்னு நேக்குத் தெரியாதோ? இப்போ...அவனுக்கு நோ மேரேஜ்!'' என்று அறிவித்துவிட்டார் வளர்ப்பு அம்மா கமலா.

பெற்ற அம்மாவுக்கோ கடும் கோபம். “என் பிள்ளைய சுக்கு தின்னு முக்கி பெத்தது நானாக்கும்! அவனுக்கு எப்படி, எப்போ கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எனக்குத் தெரியும்” என்றார். கோபுவின் கல்யாண பேச்சு உரிமைப் போராட்டமாக மாறியது. ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் மற்றொருத்தியின் மகனாக மாறிய கோபுவின் பாடு திண்டாட்டமாக மாறியது. அவரது அவஸ்தையை லைவ் ஆக காண வேண்டுமா? கோபு, கதை, வசனம் எழுதி இயக்கிய ‘அத்தையா, மாமியா?’ படத்தில் மனோரமா, காந்திமதி இடையே ஜெய்சங்கர் படும் பாட்டைப் பார்த்தாலே போதும்.

கமலாக்கள் நிறைந்த குடும்பம்

கடைசியாக இரு அம்மாக்களுக்கும் சமரசம் ஏற்பட்டு அந்தத் திருவல்லிக்கேணி பெண்ணைப் பார்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது. கோபு போட்ட கண்டிஷன் ஒன்றுதான். “எனக்கு மனைவியாக வரப்போறவளுக்கு கமலா என்ற பெயர் இருக்கக்கூடாது!” அதற்குக் காரணம் கோபுவின் கூட்டுக் குடும்பத்தில் ஏற்கெனவே நான்கு கமலாக்கள் இருந்தனர். கோபு அப்பாவின் தங்கை பெயர் கமலா. கோபுவின் வளர்ப்பு தாயார் பெயர் கமலா. கோபுவின் பெரியப்பா மனைவி பெயர் கமலா.

கோபுவின் அம்மா வகை பெரியம்மா மகளின் பெயரும் கமலா. ஆக, அவரது கூட்டுக் குடும்பத்தில் கமலா என்ற பெயரால் நிறைய குழப்பங்கள் விளைந்து கொண்டிருந்தன. வரப்போகிற தனது மனைவிக்கு வேறு அந்தப் பெயர் இருக்க வேண்டாம் என்று பார்த்தார் கோபு. ஆனால், அந்தத் திருவல்லிக்கேணி பெண்ணின் பெயரும் கமலாதான். வேறு வழியின்றி பெண் பார்க்கச் சென்றார் கோபு.

இதை அறிந்த ஸ்ரீதர், “நான்தானே உனக்கு மாப்பிள்ளைத் தோழன், என்னை ஏண்டா அழைத்துப் போகல?'' எனச் சண்டை போட்டார். “அட போடா! நானே பெண்ணை சரியா பார்க்கலே! வந்தாள்.. டமால்.. என்று சாஸ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாள், போய்க்கொண்டே இருந்தாள்! நான் முகத்தைக்கூட பார்க்கலை. அதுக்குள்ளே பெரிசுங்க தட்டை மாத்திட்டாங்க. வெத்தலை போடற அவசரமோ என்னவோ!'' கோபு சலித்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வந்த ஸ்ரீதர் கேட்டார், “என்னடா கோபு! என்னாச்சு உன் கல்யாணம்?”. ''பொண்ணு வேணான்னு சொல்றாளாம்.

ரெண்டு மாமியார் இருக்கிற இடம்னு தயங்கறாங்க போல இருக்கே!'' கோபு கொஞ்சம் சோகம் கலந்த ஹாஸ்யத்துடன் சொல்ல, “புரியலையே..” என்றார் ஸ்ரீதர். பெத்த அம்மாவுக்கும் தத்தெடுத்த அம்மாவுக்கும் இடையே நடந்த சண்டையை நகைச்சுவையாக கோபு சொல்ல, அவரையே கவனித்தபடி சிரித்துக்கொண்டிருந்த ஸ்ரீதர், திடீரென்று மவுனமாகி விட்டார். சற்றுநேரம் கோபுவையே ஏதோ யோசனையுடன் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர், திடீரென்று கிளம்பிச் சென்றார். கலைக்கடலில் தான் பயணிக்கும் தோணியில் கோபுவையும் சக பயணியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அப்போது ஸ்ரீதரினுள் தோன்றிவிட்டதை கோபு உணரவில்லை.

துணிந்து காலை வை

பல படங்கள் புக் ஆகி பிஸியான வசனகர்த்தா ஆகிவிட்டிருந்தார் ஸ்ரீதர். அடிக்கடி கோபுவின் காவாலி பிரதர்ஸ் அலுவலகத்துக்கும் ஸ்ரீதர் விஜயம் செய்வது வழக்கம். அப்போதுதான்தான் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜனுடன் பாகஸ்தராகி ‘அமரதீபம்’ படத்தின் இணைத் தயாரிப்பாளராக மாறியிருந்தார் ஸ்ரீதர். “இப்போதுதான் கதை வசன கர்த்தாவாக புகழ்பெற்று வருகிறாய். அதற்குள் தயாரிப்பாளராக ஏன் ரிஸ்க் எடுக்கிறாய்?'' என கோபு கேட்க ஸ்ரீதர் சொன்னார்.

“பயப்படக் கூடாது கோபு! பாசிட்டிவ் எண்ணங்களுடன் துணிவாக காலை முன் வைக்க வேண்டும். வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதும் முக்கியம். அப்போதுதான் வளர முடியும்” என்றார். “நானும் ரிஸ்க் எடுத்துட்டேன். அதே திருவல்லிக்கேணி பெண்ணையே நிச்சயம் பண்ணச் சொல்லிடுறேன்!'' என்றார் கோபு. “சபாஷ் இதுதாண்டா வேணும்!'' என்றார் ஸ்ரீதர். கோபுவின் மாப்பிள்ளைத் தோழனாக ஸ்ரீதர் திகழ, 1957-ல் ஜார்ஜ் டவுனில் கோபுவின் திருமணம் மிக விமர்சையாக நடந்தது. பட அதிபர்கள் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவிந்தராஜன் ஸ்ரீதருடனேயே திருமண வைபவத்தில் பங்கேற்றனர்.

புது கார், புது டிரைவர்

திருமணத்துக்குப் பின் கோபுவின் வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனை ஏற்படுத்திய நாள் அது. அவரது அலுவலக வாசலில் ஒரு புத்தம்புது கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்தார் ஸ்ரீதர்.

“உடனே கிளம்பு!'' கோபுவைத் தர தரவென்று பிடித்து இழுத்துக் கொண்டு கீழே சென்றார் ஸ்ரீதர். “நான் புதுசா கார் வாங்கியிருக்கேன். வா..சித்தாமூர் (மதுராந்தகம் அருகில் உள்ள சித்தாமூர்தான் ஸ்ரீதரின் சொந்த கிராமம்) வரைக்கும் போய் வரலாம்” என்று ஸ்ரீதர் டிரைவர் சீட்டில் அமைந்து காரை கிளப்ப, “எப்படா கார் ஓட்டக் கத்துக்கிட்டே?'' என்று ஆச்சரியமாகக் கேட்டார் கோபு. “நேத்துலேருந்து தான்'' என்றார் ஸ்ரீதர். “ஐயோ!'' என்று அலறிக்கொண்டே காரிலிருந்து குதிக்க எத்தனித்த கோபுவை அப்படியே அமுக்கிப்பிடித்து உட்கார வைத்து “உயிர் கொடுப்பான் தோழன்கிற நம்ம பண்பாட்டைக் காப்பாத்துடா..

நான் மட்டும் தனியா சாகமுடியாதுல்ல” என்று ஆக்ஸிலேட்டரில் ஒரே அழுத்தாகக் காலை வைத்து அழுத்த, ஒரு புரவியைப்போல பாய்ந்தது அந்தக் கார். பின்னாளில் ஸ்ரீதரின் திரைக்கதைகளில் இருந்த வேகத்தை அப்போதே தனது கார் ஓட்டும் வித்தையில் காட்டினார் ஸ்ரீதர். கார் சாலையிலிருந்து ஒரு அடி மேலே பறப்பதுபோன்ற வேகத்தை உணர்ந்த கோபு, வீட்டில் இருக்கும் தனது புதுமனைவியை வெள்ளை சேலையில் கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினார் “டேய் வேகத்தைக் குறை. தயவு செய்து காரை நிறுத்து!'' கோபு அலறினார்.

“நிறுத்தணும்னா நான் சொல்றபடி செய்யறீயா?'' என ஸ்ரீதர் கேட்க, “எதுவா இருந்தாலும் செய்யறேன். காரை மெதுவா ஓட்டு, இல்ல என்னை இறக்கி விட்டுடு!'' கோபு கெஞ்ச, ஸ்ரீதர் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டுக் கேட்டார்.

“இப்ப இருக்கிற வேலையில உனக்கு எவ்வளவு சம்பளம்?'' இரண்டு விரல்களைக் காட்டி, இரட்டை நூறு ரூபாய் என்றார். “நான் நானூறு ரூபாய் தரேன். வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, என்னோட ஸ்கிரிப்ட் எழுத வந்துடு!'' என்றார் ஸ்ரீதர்.

சிரிப்பு தொடரும்..

தொடர்புக்கு: tanthehindu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x