

வி
த்தியாசமான நாடக அனுபவத்தை ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ‘ஷ்ரத்தா’வின் 28-வது தயாரிப்பு ‘நம் சமையலறையில்’. 4 குறு நாடகங்களின் தொகுப்பான இது, சென்னை நாரத கான சபாவில் கடந்த சனி, ஞாயிறு அரங்கேறியது. இன்று உலக நாடக தினத்தையொட்டி, விதவிதமான நாடகங்கள் அரங்கேறும் நிலையில், நம் அன்றாட வாழ்வோடு பிரிக்கமுடியாத சமையலறையை மையமாகக் கொண்டு 4 குறு நாடகங்களை, காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு விருந்தின் நேர்த்தியுடன் பரிமாறியது ஷ்ரத்தா.
நவீன யுகத்தின் அடையாளமாக பல்வேறு துறைகளில் சாதிக்கும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு சமையலறையில் ஏற்படும் சவால்களை சிரிப்போடு சிந்திக்கவும் வைக்கிறது ‘மீனு என்கிற மீனாட்சி அம்மாள்’ நாடகம். மீனுவாக மயூரியும், மீனாட்சி அம்மா ளாக ஜெயஸ்ரீயும் கவனம் ஈர்க்கின்றனர். சுவாமி கணேசன் எழுதிய நாடகத்தை ஜி.கிருஷ்ணமூர்த்தி நேர்த்தியாக இயக்கியுள்ளார்.
மனைவியின் அன்பான நினைவுகளைத் தன் பேரக் குழந்தைகளிடம் பகிர்ந்துகொண்டு கரை யும் போஜராஜனின் (சுந்தரராஜன்) ஆளுமையும், பேத்தி அன்னபூரணியின் (அதிதி) சூட்டிகையும் போட்டி போடுகின்றன ‘சுடச்சுட’ நாடகத்தில். பேத்தியும், தாத்தாவும் சேர்ந்து காபி போடும் தருணத்தில், தாத்தா மீண்டும் மீண்டும் பாட்டி போட்டுக் கொடுக்கும் காபியைக் குறித்தே சிலாகிக்க, ‘‘சரியா சொல்லு தாத்தா, நீ மிஸ் பண்றது உண்மையிலேயே பாட்டியையா, அவங்க போட்டுக் கொடுத்த காபியையா?’’ என்று பேத்தி கேட்கும்போதும், ‘‘ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வேலையை பார்க்கிறாங்க. ஆனா, எல்லாருக்காகவும் அம்மாதானே சமைக்க வேண்டியிருக்கு’’ என்ற பேத்தி கூறும்போதும் அரங்கில் அப்ளாஸ்.
ஆர்யான் எழுதிய நாடகத்தை ஜி.கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
சமையலறை வேலைகளைக் கணவனும், மனைவியும் பகிர்ந்துகொண் டால் குடும்பத்துக்கு எவ்வளவு நன்மைகள்.. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விட்டுக்கொடுத்துப் போவதால் ஏற்படும் நன்மைகள்.. என நுட்பமான பல விஷயங்களை ‘நித்யா’ நாடகம் சொல்லும் விதம் பிரமிக்க வைக்கிறது.
கிளைமாக்ஸில், “இறந்த என் சித்திக்காக மட்டும் அழவில்லை. உங்க அப்பாவை சரியாக பார்த்துக்காம போனதுக்கும் சேர்த்துதான்” என்று கணவனிடம் நித்யா பேசும் வசனம், நிறைய வீடுகளின் எதிரொலி. நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார் பி.முத்துக்குமரன்.
நான்கு நாடகங்களுமே அருமை என்றாலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது ‘தி ஹான்டட் கிச்சன்’ நாடகத்துக்குதான். காரணம், அதன் கட்டமைப்பு. சுந்தரின் அப்பாவுக்கு அப்படியொரு நாக்கு ருசி. அவருக்கு விதவிதமாக சமைத்துப்போட்டே உயிரை விட்டிருப்பார் சுந்தரின் அம்மா. வேளாவேளைக்கு சமைத்துக்கொண்டும், வேலைக்கும் போகமுடியா மல் வேலையை ராஜினாமா செய்கிறாள் சுந்தரின் மனைவி கவிதா. ஒருநாள் சமையலறையில் இருக்கும் பொருட்கள் தானாக கீழே விழுகின்றன. யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கிறது. தன்னைப் போலவே மருமகளும் சமையலறையிலேயே சிறைப்பட்டுவிடக் கூடாது என்று மருமகளை மீட்க மாமியார் ஆவி செய்யும் சேட்டைகள் செம கலாட்டா. அதைவிட அரங்கை அதிரவைக்கிறது கிளைமாக்ஸ்.
வாயைத் திறந்தாலே ரெசிபிகளை பட்டியலிடும் சுந்தரின் தந்தையாக வரும் ஸ்ரீராமனும், தாயாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்திய பிரேமா சதாசிவமும் சென்ற தலைமுறையின் எல்லா வீடுகளிலும் நாம் பார்த்த பாத்திரங்களை ஞாபகப்படுத்துகின்றனர். சினிமா உத்தியோடு எழுதி இயக்கியுள்ளார் ஸ்ரீஅருண்குமார்.
‘சமையலறை என்பது பெண்கள் மட்டுமே உலவும் இடம்’ என இன்னமும் சில ஆண்கள் கருதுவதை 4 நாடகங்கள் மூலமாக விமர்சித்துள்ளனர். சில நாடகங்களில், கிடைத்த இடத்தில் அரசியல் மசாலாவையும் சேர்த்து அரைத்தது, மணம் கூட்டுகிறது.