

த
மிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட தமிழின் முதல் ‘ஸ்பூஃப்’ வகை திரைப்படம் கடந்த 2010-ல் வெளியான ‘தமிழ்ப் படம்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை ‘தமிழ் படம் 2.0' என்ற தலைப்பில் இயக்கி முடித்திருக்கிறார் சி.எஸ்.அமுதன். அவருடன் ஒரு சந்திப்பு.
இரண்டாம் பாகத்தில் எந்தப் படங்களை எல்லாம் கலாய்க்கப் போறீங்க?
தலைப்பிலேயே ‘போலீஸ் அத்தியாயம்' என்று வைத்திருக்கிறோம். விறைப்பான காக்கிகள் தொடங்கிச் சிரிப்பு போலீஸ் வரை கிண்டலடித்திருக்கிறோம். எல்லாம் நீங்க பார்த்த போலீஸ் படங்கள்தான். ஆனால், என்னென்ன படம் என்பது மட்டும் சர்ப்ரைஸ். காக்கிகளை கலாய்ப்பதும் ஒரு ஸ்பூஃப் படத்தின் கடமைதான்!
முதல் பாகத்தைவிட ‘தமிழ் படம் 2.0’ எப்படி வேறுபடுகிறது?
அந்தப் படத்தின் கதாபாத்திரங்களை வைத்து வேறொரு படம் செய்திருக்கிறேன். ‘மிர்ச்சி’ சிவாவுக்கு ஜோடி ஐஸ்வர்யா மேனன் என்ற புதுவரவு. முதல் பாகத்தில் இல்லாத ஆர்.சுந்தர்ராஜன், சந்தானபாரதி இதில் நடித்திருக்கிறார்கள். இதன் பட்ஜெட் பெரியது. டெக்னிக்கலாக புது விஷயங்களையும் முயற்சி செய்திருக்கிறோம்.
இதுபோன்ற பகடிகளை எந்தளவுக்கு மக்கள் ரசிக்கிறார்கள்?
படத்தில் ‘ஸ்பூஃப்’ மட்டுமில்ல, ‘ஃபார்ஸ்’ (Farce) உண்டு. தமிழில் இதை ‘அபத்தம்’ என்று சொல்லலாம். உதாரணமாக ‘தமிழ் படம்’ படத்தில் ஒரு காட்சியில் குடிசைப் பகுதியிலிருக்கும் சிவாவின் வீடு நட்சத்திர ஓட்டல் மாதிரி இருக்கும். நிஜத்தில் அப்படி ஒன்று இருக்க வாய்ப்பில்லை. இதைத்தான் அபத்தம் என்று சொல்கிறேன். இதுபோன்ற அபத்தங்கள் இந்தப் படத்தில் நிறைய இருக்கும்.
முதல் படத்துக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளி ஏன்?
எனக்குப் படம் இயக்குவது மட்டுமே வேலையல்ல. விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் நடந்தி வருகிறேன். சினிமா இல்லை என்றால் வாழ்க்கை நடத்துவது கடினம் என்கிற நிலையில் நான் இல்லை. ஆனாலும் அடுத்த படம் வெளிவரவில்லையே என்ற மன உளைச்சல் இருந்ததையும் மறுக்க முடியாது.
ஓ.பி.எஸ்ஸின் ‘தர்மயுத்தம்’ பாணியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தீர்கள். படத்தில் அரசியல் நையாண்டி உண்டா?
போஸ்டர்கள் உருவாக்குவதுடன் எங்கள் வேலை முடிந்தது. அதை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பது பார்க்கிறவங்க சம்பந்தப்பட்டது. படத்தில் அரசியல் இருக்கிறதா என்பது படம் வெளியான பிறகு தெரியும்.
அரசியல்வாதிகள், முன்னணி நடிகர்கள் என எல்லோரையும் கிண்டல் அடிக்கும்போது எதிர்ப்பு வருகிறதா?
படத்தைப் பார்த்து மக்கள் சிரித்துவிட்டார்கள் என்றால் அரசியல்வாதிகள் திட்டமாட்டார்கள். அதையும் மீறி திட்டினால், அவர்களுக்குத்தான் ஆபத்து. அனைவரும் சந்தோஷப்படும்போது, ஒருவர் மட்டும் எதிர்த்துப் பேசமுடியாது. ஆனால் மக்களே திட்டும்படி இருந்தால் கண்டிப்பாக பிரச்சினை வரும்தான்.
எல்லாம் தணிக்கைப் பிரச்சினைதான்.‘பெண்கள் மது அருந்துவதுபோலக் காட்டக் கூடாது’ என்றார்கள். இந்த விதிமுறை சென்சாரில் எங்கு இருக்கிறது என்று கேட்டால் “அதையெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. சீனை கட் பண்ணுங்க, இல்லையென்றால் யுஏ வாங்கிக்கோங்க”என்கிறார்கள். யுஏ வாங்கினால் வரிச் சலுகை கிடையாது. உடனே தயாரிப்பாளர் எப்படியாவது ‘யு' சான்றிதழ் வாங்கிக் கொடுங்கள் என்றார். அதற்கேற்றபடியும் மாற்றிக்கொடுத்துவிட்டேன். அதற்கு மேல் என் கையில் எதுவும் இல்லை.
அடுத்து என்ன?
நிச்சயமாக ‘ஸ்பூஃப்’ கிடையாது.