Published : 24 May 2019 12:05 pm

Updated : 24 May 2019 12:05 pm

 

Published : 24 May 2019 12:05 PM
Last Updated : 24 May 2019 12:05 PM

தரைக்கு வந்த தாரகை 14: அவரது அழகில் மயங்கிப் போனேன்!

14

கலைடாஸ் கோப்பில் விரியும் வண்ணச் சித்திரங்களாக பானுமதியின் வாழ்க்கைக் கதையும் சுழன்று விரிந்தது. சென்னைக்கு நடிக்க வந்த கதையைப் பகிரத் தொடங்கினார்.

“கல்கத்தாவிலும் கோலாபூரிலும் படப்பிடிப்பு முடிந்த பிறகு ‘பக்திமாலா’ படத்தில் நடிக்க சென்னை புறப்பட்டு வந்தோம். சென்ட்ரல் ஸ்டேஷன். தமிழ்க் குரல்களைக் கேட்கவே மனசுக்குச் சந்தோஷமாக இருந்தது. ‘குழந்தை இந்தப் படத்தில் இரண்டு இடங்களில் நாட்டியம் ஆடும்படி இருக்கும்’ என்றார் இயக்குநர். ‘


அடடா... என் மகளுக்கு நாட்டியம் தெரியாதே’ என்றார் அப்பா. படத்தின் நடன இயக்குநர் வேம்பட்டி பெரிய சத்யம் எனக்கு முறையாக நாட்டியம் கற்றுக் கொடுக்க முன்வந்தார். ‘இந்தப் படத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு நாட்டியம் கற்றுக் கொடுத்தால் போதும்’ என்றார் அப்பா பெரிய சத்யத்திடம்.

அடம் பிடித்த நாட்டியம்

‘சங்கீதம் (இசை) சாகித்யம் (இலக்கியம்) இரண்டு கண்கள் போன்றவை. பானுமதி இந்த இரண்டிலும் சிறந்து விளங்குகிறாள். நாட்டியம் பெரிய விஷயமே இல்லை. பானுமதி சிறப்பாக நாட்டியம் கற்றுக்கொள்ள நானாச்சு’ என்றார் பெரிய சத்யம்.

ஆனால், அந்தப் படத்தில் சத்யம் சாருக்கு நான் நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. சரஸ்வதி தேவி எனக்கு சங்கீதமும் சாஹித்யமும் தன் இரு கண்களாலும் பூரணமாகப் பார்த்து அருளியது என்னவோ உண்மைதான். ஆனால், நாட்டிய விஷயத்தில் அவள் பார்வை கோணலாகி விட்டது.

சின்ன வயதிலேயே நான் நாட்டியம் கற்றுக்கொண்டிருந்தால் இப்படி நடந்திருக்காது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனக்குச் சிறு வயதிலிருந்தே நாட்டியத்தில் ஈடுபாடு கிடையாது. சுபாவத்திலேயே எனக்குக் கூச்சம் அதிகம்.

கண்களை உருட்டுவதும் கைகளால் முத்திரை காட்டுவதும் எனக்குப் பிடிக்காது. இதெல்லாம் செயற்கையாகத் தோன்றும். செயற்கையான எந்த விஷயத்தையும் செய்வதற்கு என் மனசு இடம் கொடுக்காது.

கல்கத்தாவில் ‘மாலதி மாதவம்’ படப்பிடிப்பின்போது எனக்குக் குதிரை ஏற்றம், தடை தாண்டுதல், கத்தி வீசுதல் போன்ற வீர விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் விளைவாக நான் அபிநயித்த நாட்டிய முத்திரைகளில் நளினமும் மென்மையும் வெளிப்படுவதற்கு பதிலாக முரட்டுத்தனமும் கடூரமான உணர்ச்சிகளின் சாயலும் வெளிப்பட்டது.

‘பக்திமாலா’வில் மீராபாய் கதாபாத்திரத்தில் நான் பாடிய பாட்டுக்கள் எனக்குப் பெயர் வாங்கித் தந்தன. நாட்டியத்தில்தான் சொதப்பிவிட்டேன். ஒரு பத்திரிகை என் நடனப் படத்தைப் போட்டு ‘குழந்தை நட்சத்திரம் பானுமதி - முடக்குவாத போஸில்!’ என்று எழுதிவிட்டார்கள். இனிமேல் ஏதாவது படத்தில் நாட்டியம் ஆடச் சொன்னால் அந்த ரோல் செய்ய மாட்டேன் என்று அப்பாவிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.

காஞ்சனமாலா எனும் நட்சத்திரம்

‘பக்திமாலா’ படத்தின் அலுவலகம் அப்போது தியாகராயநகர் வைத்திய ராமன் தெருவில் இருந்தது. (அதே தெருவில் நான் வீடுவாங்கிக் குடியேறுவேன் என்று அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை) வாஹினி அலுவலகமும் அருகில்தான் இருந்தது.

அப்பாவுடன் வாஹினி அலுவலகம் செல்வது பிடிக்கும். அதற்குக் காரணம் அங்கிருந்த மெஸ். அந்த மெஸ்ஸில் தயாராகும் முறுகல் தோசையும் மல்லிகைப்பூ இட்லியும் இன்று நினைத்தாலும் நாவில் நீரூறும். ‘பக்திமாலா’ படப்பிடிப்பு முடிந்து ஊர் திரும்பிவிட்டோம்.

பின்னர், ‘கிருஷ்ண பிரேமா’ படப்பிடிப்புக்காக நாங்கள் மீண்டும் சென்னை வந்தோம். அதே சென்ட்ரல். அதே தமிழ்க் குரல்கள். ஸ்டார் கம்பைன்ஸ் நிறுவனத்தார் எங்களுக்காக ராயப்பேட்டை ஸ்ரீபுரம் காலனியில் ஒரு வாடகை வீடு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கே போனதும் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வைத்தது.

எனக்கு மிகவும் பிடித்த நடிகையான காஞ்சனமாலா அதே தெருவில்தான் குடியிருந்தார். நான் அப்பாவிடம் ஓடினேன் ‘அப்பா! எப்படியாவது நாம் காஞ்சனாமாலாவைச் சந்திக்கணும் வாங்க’ என்றேன். ‘நமக்கு முன்பின் பழக்கமில்லாதவங்களை அப்படிப் போய் பார்க்கப்படாது அம்மா. அறிமுகம் ஆகட்டும் அப்புறம் சந்திக்கலாம்.

நீ உடனே பார்க்கணும்னு ஆசைப்பட்டா பார்க்க ஒரு வழி இருக்கு. காஞ்சனாமாலாவோட கார் இந்த வழியாகத்தான் போகும். அதில் பார்க்கலாம்’ என்றார். எனக்குப் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆனால், முயற்சியைக் கைவிடவில்லை. நான் தெருவில் ஒவ்வொருமுறை கார் சத்தம் கேட்கும்போதும் ஓடிப்போய் பார்ப்பேன். ஏமாந்துபோவேன்.

இரண்டு நாள் கழித்து காலை 9 மணி இருக்கும். ஒரு பெரிய கார் அசைந்தபடி வந்தது. குறுகலான தெரு ஆகையால் கார் மிகவும் பெரிதாகத் தெரிந்தது. கார் நெருங்கியதும் தெருக் குழந்தைகளிடையே ஒரே கூச்சல். எனக்குப் புரிந்தது அது காஞ்சனாமாலாவின் கார்தான். எங்கள் வீட்டை காஞ்சனாமாலாவின் கார் கடக்க முற்பட்டபோது எதிரே ஒரு மாட்டு வண்டி வந்தது. கார் மெல்ல நின்று நின்று போயிற்று.

கையில்லாத பிளவுஸ், ஜார்ஜெட் புடவை, நல்ல செக்கச் செவேலென்ற நிறம், ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கிவரும் ரம்பையைப் போல ஜொலித்தார். பின் சீட்டில் உட்கார்ந்திருந்த காஞ்சனாமாலாவின் பார்வை என்மீது விழுந்தது. நானும் அவரை உற்றுப் பார்த்தேன்.

அவர் தன் பெரிய கண்களைத் திறந்து என்னைப் பார்த்தார். ‘யார் இந்தக் குட்டிப்பெண்?’ என்று கேட்பது போல் மெலிதாகப் புன்னகைத்தார். சட்டென்று கார் நகர்ந்து வேகம் எடுத்து சென்றது.

கார் நகர்ந்தாலும் என் கால்கள் நகரவில்லை. அவரது பெரிய கவர்ச்சியான கண்கள், மாம்பழக் கதுப்புகள் போன்ற கன்னங்கள், அந்தப் புன்னகை என அவரின் தோற்றப் பொலிவு அப்படியே என் மனசில் அழியாத ஓவியம்போல் ஆகிவிட்டது. நான் அவரது அழகில் மயங்கிப் போனேன்.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் காஞ்சனாமாலாவின் கார் எங்கள் வீட்டைக் கடந்து செல்வதைப் பார்க்க காத்திருப்பேன். காரை நிறுத்தி அவரோடு இரண்டு வார்த்தை பேசமாட்டோமா என்று இருக்கும். பேசினால்தான் என்ன; அவருடைய ஆயிரக்கணக்கான விசிறிகளில் நானும் ஒருத்தி அல்லவா? நட்சத்திரங்கள் இரவில்தான் பளீரென்று தெரியும்.

பகலில் அவை தங்களின் சோபையை இழந்துவிடும். ஒரு வேளை நடிகர், நடிகைகளை இதனால்தான் நட்சத்திரங்கள் என்று அழைக்கிறார்களோ என்னவோ… வெள்ளித்திரையில் இந்த நட்சத்திரங்களைப் பார்க்கும்வரைதான் மனசு மயங்கி மகிழ்ச்சியில் துள்ளும். அந்த இமேஜைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் நடிக நடிகைகள் படாதபாடு படுகிறார்கள். காஞ்சனாமாலா கவர்ச்சிக்கும் அதுதான் காரணம் எனத் தோன்றியது.

சில வருஷங்கள் கழித்து காஞ்சனாமாலா மறைந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். திரைவானில் சுடர்விட்டு ஒளி வீசிய துருவ நட்சத்திரம் விழுந்துவிட்டதை எண்ணி மனசு கனத்தது.

என் கதைக்கு வருகிறேன். ‘கிருஷ்ண பிரேமா’ படப்பிடிப்பு தொடங்க தேதி குறிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என் வாழ்வை ஒரு தென்றல் தீண்டியது! பின் அதுவே சூறாவளியாகவும் மாறியது” என்று புதிரோடு நிறுத்தினார் பானுமதி. புதிருக்குப் பின்னால் ஆச்சரியம் காத்திருந்தது!

(தாரகை ஒளிரும்)

தொடர்புக்கு:

thanjavurkavirayar@gmail.com

படங்கள் உதவி: ஞானம்


தரைக்கு வந்த தாரகைதமிழ் சினிமா தொடர்தமிழ் சினிமா பிளாஷ்பேக்தமிழ் சினிமா நினைவுகள்பானுமதி தரிசனம்மாலதி மாதவம்அழகில் மயங்கிப் போனேன்அடம் பிடித்த நாட்டியம்இலக்கியம்காஞ்சனமாலா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x