

கடந்த ஆண்டு தொடங்கிய மம்மூட்டியின் ‘18-ம் படி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. நடிகரும் திரைக்கதையாசிரியருமான ஷங்கர் ராமகிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம். இதில் 65 புது முகங்கள் நடிக்கிறார்கள்.
இதற்காகப் பிரம்மாண்டமான நட்சத்திரத் தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. இவர்களுடன் பிருத்விராஜ் சுகுமாரன், உன்னி முகுந்தன் ஆகியோரும் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
பிரியா ஆனந்த், சானியா ஐயப்பன், அஹானா கிருஷ்ணன் ஆகிய கதாநாயகிகளும் படத்தில் உண்டு. ஜான் ஆப்ரகாம் பாலேக்கல் என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடிக்கிறார். அடுத்த மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாயகன் ஆகிறார் விநாயகன்
‘திமிரு’, ‘சிலம்பாட்டம்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் விநாயகன். 2016-ல் வெளியான ‘கம்மட்டிப்பாடம்’ மலையாளப் படம் அவருக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இதற்காக அந்த ஆண்டில் சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசின் விருதும் அவருக்குக் கிடைத்தது.
இப்போது ‘கிஸ்மத்’ படப் புகழ் இயக்குநர் ஷானவாஸ் கே. பாவக்குட்டி இயக்கும் புதிய படமான ‘தொட்டப்பனி’ல் நாயகனாக நடிக்கிறார் விநாயகன். பிரபல மலையாளத் திரைக்கதையாசிரியர் ரகுநாத் பலேரியும் இயக்குநர் திலீஷ் போத்தனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
-விபின்