

மரணத்தை மையப்படுத்திய
ஒரு திரைக்கதை நேர்த்தியாகப் புனையப்படும்போது, வாழ்க்கை குறித்த அற்புதமான; நேர்மறையான திரைப் பதிவாக மாறிவிடும் என்பதற்கு ‘ட்ரூமேன்’ திரைப்படம் சான்று.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோ சிகிச்சை மேற்கொள்கிறார் நடுத்தர வயது நிரம்பிய ஜூலியன். நோய் பரவுவதைத் தடுக்க முடியவில்லை என்பதறிந்து இனியும் சிகிச்சை தேவை இல்லை என்று முடிவெடுக்கிறார்.
விஷயம் அறிந்து, சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் ஜூலியன் வீட்டுக்கு வந்துவிடுகிறார் அவருடைய பால்ய சிநேகிதன் தாமஸ். நண்பனைக் கண்ட உற்சாகத்தில் தன்னுடைய வாழ்க்கையின் இறுதி நாட்களைத் தனக்குப் பிடித்த வகையில் செலவழிக்க முடிவெடுக்கிறார் ஜூலியன்.
நண்பர்கள் இருவரும் 4 நாட்கள் சேர்ந்து கழிக்கிறார்கள். தன்னுடைய சக ஊழியர்கள், மகன், நண்பர்கள் என அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மரணத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள ஆயத்தமாகிறார் ஜூலியன். கடைசியில் தன்னுடைய வயது முதிர்ந்த செல்ல நாயை யாரிடம் ஒப்படைப்பது என்று புரியாமல் நண்பர்கள் தவிக்கிறார்கள் ‘ட்ரூமேன்’ என்பது அந்த நாயின் பெயரே.
ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படும் ஸ்பெயின் நாட்டின் ‘கோயா’ விருதை 2016-ல் வென்ற ஸ்பானிஷ் மொழிப் படம் இது. உலகம் முழுவதும் மேலும் 28 விருதுகளை வென்றிருக்கிறது.
‘ட்ரூமேன்’ (Truman) படத்துடன் ‘ஹேப்பி 140’ (Happy 140), ‘பட்டர்ஃப்ளைஸ் டங்’ (Butterfly’s Tongue), ‘மை பிக் நைட்’ (My Big Night), ‘ஹாசன்ஸ் வே’ (Hassan’s Way) ஆகிய ஐந்து படங்களை உலகத் திரைப்பட ரசிகர்களுக்குக் காட்டவிருக்கிறது ’ஸ்பானிஷ் பட விழா’.
சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்து வரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள ‘இன்ஸ்டிடோ செர்வாண்ட்ஸ்’ அமைப்பு ஆகியன சென்னையில் ஸ்பெயின் தூதரகத்துடன் இணைந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் கலாச்சார தூதரகமான சென்னை அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில்
மே-28 முதல் 30-வரை ’ஸ்பானிஷ் பட விழா’வை நடத்தவிருக்கிறது.ஸ்பானிஷ் பட விழா