

முன்னணி நடிகர், இசையமைப்பாளராக வலம்வரும் ஜி.வி.பிரகாஷ் கூடுதலாக ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். தனது யூடியூப் சேனலில் பேட்டியாளராகத் தோன்றவுள்ளார். வெளியே தெரியாமல் இருக்கும் சாதனையாளர்களைப் பேட்டியெடுத்து 'மகத்தான மனிதர்கள்' என்ற தலைப்பில் அவற்றை வெளியிடவுள்ளார்.
இதுபற்றி ஜி.வி.பிரகாஷிடம் கேட்டபோது, “கஜா புயல் நேரத்தில் தோன்றிய எண்ணமிது. பல்வேறு மனிதர்கள் சிறந்த சேவை செய்துவிட்டு வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பேட்டியெடுத்து வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. அதில் முதல் ஆளாக, ஜவ்வாதுமலையில் உள்ள மகாலட்சுமி என்ற ஆசிரியை பல்வேறு மலைவாழ் மாணவர்களைத் தனிப்பட்ட முயற்சி எடுத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பேட்டியெடுத்துள்ளேன்.
இதை என் யூடியூப் பக்கத்திலேயே வெளியிடவுள்ளேன். தனியார் தொலைக்காட்சியில் பண்ணலாம் என்றால், அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கும். மேலும், சில விஷயங்களைப் பேசக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் இருக்கும். அதுவே எனது யூடியூப் பக்கம் என்றால் எவ்விதத் தடங்கலும் இருக்காது. ஒவ்வொரு மாதமும் ஒருவர் என்று பேட்டி எடுக்கவுள்ளேன். அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, வாரந்தோறும் பண்ணும் எண்ணமும் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்தப் புதிய முயற்சிக்காக, குணா, இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி ஆகியோர் அவருடன் இணைந்துள்ளனர். பேட்டி எடுப்பதற்கான ஆட்களைக் கண்டறிந்து, இவர் சரியானவரா என்பதை விசாரித்து ஆய்வு செய்த பின்னரே அறிமுகப்படுத்த இருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.