

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் மறு ஆக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இவருக்கு பாலிவுட்டிலும் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
’அர்ஜுன் ரெட்டி’யைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்த ‘நோட்டா’, ‘கீதகோவிந்தம்’, ‘டாக்ஸி வாலா’ ஆகிய படங்களும் வெற்றிபெற்றன. இவற்றில் ‘நோட்டா’ மட்டும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டியர் காம்ரேட்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பரத் கம்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் மூலம் நான்கு மொழி நாயகன் ஆகியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஜூலை 26-ம் தேதி இந்தப் படம் நான்கு மொழிகளிலும் வெளியாகவிருக்கும் நிலையில் தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார் இவர்.
‘பெல்லி சூப்புலு’ படத்தின் இயக்குநர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தயாரிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் இதில் சமீர் என்ற புதுமுகக் கதாநாயகனை அறிமுகப்படுத்துகிறார்.
-ரசிகா