Published : 03 May 2019 01:05 PM
Last Updated : 03 May 2019 01:05 PM

தரைக்கு வந்த தாரகை 11: அச்சுப்பிச்சுகளின் காதல்

பானுமதி மாறி வரும்

வானகத்து மீனே

பார்க்க உன்னைத் தேடுதடி

கன்னி இளம் மானே

                படம்: அம்பிகாபதி

“கல்கத்தாவுக்குப் போய் உங்கள் முதல் படத்தில் நடித்த அனுபவத்தைச் சொல்லவே இல்லையே?” - என்று கேட்டேன்.

பானுமதி சிரித்தார். அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள்?. ‘வரவிக்ரேயம்’ படத்தில் நான் நடித்த காளிந்தியின் பாத்திரம் ஒரு வகையில் என் சொந்த வாழ்க்கையையே பிரதிபலிப்பதுபோல அமைந்துவிட்டதை என்னவென்று சொல்ல?

நான் முதன்முதலாக செட்டுக்குப் போனேன். யாராரோ வந்தார்கள். எனக்குக் கூச்சமாக இருந்தது. ‘லைட்ஸ் ஆன்’ என்று யாரோ கத்தினார்கள்.

மங்கலாக இருந்த செட்டில் பளீரென்று பரவிய வெளிச்சத்தைப் பார்த்துப் பயந்துவிட்டேன். ஓடிப்போய் ஒரு தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டேன்.

அடடா! உம்ம பெண் எங்க காளிந்தியவிட ரொம்பக் கட்டுப் பெட்டியாய் இருப்பாள் போலிருக்கே என்றார் புல்லையா.

“கொஞ்சம் இருங்கள், இந்தப் பெண்ணின் அம்மா வந்துவிடட்டும்” என்றார்.

“அம்மா எப்படி இங்கே?” என்று குழம்பிப்போன எனக்கு அப்புறம்தான் தெரிந்தது. அவர் சொன்னது என் அம்மாவாக சினிமாவில் நடிக்கும் சிவரஞ்சனியை என்று!

இயல்பான கண்ணீர்

சிவரஞ்சனி வந்தார். என்னை அன்புடன் தொட்டார். “என்ன மேக்கப்பெல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டார். எடுக்கப்போகிற காட்சியை புல்லையா விவரித்தார்.

மகளுக்கு வரன் தேடிவிட்டு அப்பா களைத்துப்போய் நுழைகிறார். சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுகிறார். வரன் முடிவாயிட்டுதா? என்று அம்மா கேட்கிறார். எங்கே போனாலும் பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். நம்ம பெண் காளிந்திக்கு எப்படிக் கல்யாணம் நடக்கும் என்கிறார் அப்பா சோர்வுடன்.

எங்கள் வீட்டிலும் அப்பாவும் அம்மாவும் இப்படிப் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. என் கண்ணில் நீர் தளும்பியது.

புல்லையா ‘கட்’ என்றார். அவ்வளவுதான் ‘ஷாட்’ ஓகே ஆகிவிட்டது.

“ரொம்ப இயற்கையாய் இருந்தது அம்மடு. அதுவும் நீ நின்றவிதம் பிரமாதம்” என்றார் புல்லையா.

அடுத்தநாள் ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் பாடல் பதிவு. மைக் என்று சொல்லி என் முன்னால் வைக்கப்பட்டது, தேன்கூடுபோல் இருந்தது.

பின்னணிப் பாடல் பதிவு என்பதே சினிமாவுக்கு அப்போதுதான் அறிமுகம். புஷ்பவல்லி சொன்னார்: “நீ அதிர்ஷ்டக்காரிதான் நாங்கள் எல்லாம் பாடிக்கொண்டே நடிக்க பட்ட கஷ்டம் உனக்கில்லை. வாயசைப்பு சரியாகவே வராது.”

ஒரு முறை சோகமான காட்சி ஒன்றை புல்லையா நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. சிரித்துவிட்டேன்.

அச்சுப்பிச்சுகளின்-காதல்

புல்லையா என்னைப் பார்த்துக் கோபமாக இரைந்தார். இதை நான் கொஞ்சம்கூட அவரிடம் எதிர்பார்க்கவில்லை. அழுதுவிட்டேன். அழுகையை நிறுத்தவே இல்லை. புடவை நுனியால் வாயை மூடிக்கொண்டு அழுதேன். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. டைரக்டர் ‘கட்’ என்றார்.

நானோ என் விசும்பலை நிறுத்தவே இல்லை. புல்லையா சிரித்துக்கொண்டே, “உன்னை அழவைக்க வேறு வழி தெரியவில்லை அம்மா. ஷாட் எவ்வளவு நன்றாக வந்திருக்கிறது தெரியுமா?” கோபிப்பதுபோல் நடித்து என்னை அழ வைத்துப் படம் எடுத்திருக்கிறார் என்று அப்புறம்தான் புரிந்தது.

‘மாலதி மாதவம்’, ‘தர்மபத்தினி’, ‘பக்திமாலா’, ‘கிருஷ்ண பிரேமா’ போன்ற படங்களில் நான் இயக்குநர் சொன்னபடிதான் நடித்தேன். ஆனால், இதில் எனக்கு உடன்பாடில்லை. டைரக்டரின் கார்பன் காப்பிபோல் நடிப்பதால் அந்தப் பாத்திரத்துக்கு எப்படி உயிர்வரும்?.

சுயமான நடிப்பு

‘சொர்க்க சீமா’வில் நடிக்கும்போதுதான் சுயமாக நடிப்பதைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தேன். படத்தில் எனது ரோல் என்ன, அதைச் சரியாய்ப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க முடியும்.

நடிப்பு அனுபவம் இல்லாத டைரக்டர்கள் தாங்கள் சொல்கிறபடிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது சரியல்ல. ஆனால், இதை எத்தனை இயக்குநர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவரவருக்கு என்று ஒரு பாணி இருக்கும் அல்லவா?

‘வரவிக்ரேயம்’ வெளிவந்தது. புதுமுகம் பானுமதி அருமையாக நடித்திருக்கிறார். காளிந்தி கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். ‘சபாஷ்’ என்று பத்திரிகைகள் எழுதின.

அவ்வளவுதான் வேலை முடிந்தது. வீடு திரும்பி பள்ளிக்கூடம் போக வேண்டியதுதான் என்று நினைத்தேன். அப்பாவிடம் கேட்டேன்.

“இனி, பள்ளிக்கூடம் போகலாமா அப்பா?”

அப்பா சிரித்தார்.

“புல்லையா ‘மாலதி மாதவம்’ என்று ஒரு படம் இப்ப உடனே எடுக்கப் போகிறாராம். பவபூபதி எழுதிய அருமையான காவியத்தைத்தான் படம் எடுக்கப் போகிறார். நீதான் கதாநாயகியாம்.

ஆனால், யோசிக்கணும் என்று சொல்லியிருக்கிறேன். உலகம் தெரியாத பெண்ணாகிய உனக்கு இந்த வேடம் சரிப்பட்டு வருமா? வேறு வேடம் ஒண்ணு இருக்கு. அதுதான் சரிப்பட்டுவரும்”

அப்பாவின் மனசு புரிந்தது. அவர் நான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனக்குத் தலையில் இடிவிழுந்த மாதிரி இருந்தது!

“அப்பா! வீட்டுக்குப் புறப்படுங்கள் புல்லையாவிடம் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்!”

இப்படிச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து தலையணையில் முகம் புதைத்தேன். எனக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது!

கவிராஜூவிடம் கற்ற பாடம்

“அப்புறம் என்ன ஆச்சு?”

“மறுநாள் கவிராஜூ என்ற கதாசிரியர் என்னைக் காண வந்தார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ரொம்ப நாளைக்கு அப்புறம் இவர் பேச்சைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரித்தேன்.

அவர் அப்பாவிடம் அம்முடுவுக்கு மாலதி வேடம்தான் சரியாக இருக்கும். அழகும் பாடும் திறமையும் மிக்க சின்னஞ்சிறு பெண் ருத்ராட்ச மாலை போட்டுக்கொண்டு சந்நியாசியாக வருவதை ஆடியன்ஸே விரும்ப மாட்டார்கள்!” என்றார்.

நான் பள்ளி செல்ல முடியாத குறையை கவிராஜூதான் தீர்த்துவைத்தார். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன்.

எப்படியோ ‘மாலதி மாதவம்’ படத்தில் நடிக்க கவிராஜூ என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டார்.

‘மாலதி மாதவம்’ படத்தில் நான் என்ன செய்தேன், என்ன பாடினேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்தப் படத்தில் மாதவனாக நடித்தவர் புல்லையாவின் உறவினர்.

 அவர் என்னைவிட அதிகக் கூச்சம் உடையவர் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்துகொண்டு அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் பவபூபதியையும் கொலைசெய்வதில் வெற்றிபெற்றோம்.

காதல் காட்சிகளில் நாங்கள் நளினமான உணர்வுகளையும் காதலையும் வெளிப்படுத்தவில்லை. அவர் என்னைக் கண்டு பயந்து நடுங்கினார். நானோ குனிந்த தலை நிமிரவில்லை.

நான் பயந்துபோய் அவரைப் பார்ப்பேன். அவர் சட்டென்று தலைகுனிவார். இரண்டு அச்சுப்பிச்சுகள் சேர்ந்துகொண்டு காதல் பண்ணினால் எப்படி இருக்கும்?

எங்கள் இரண்டு பேரையும் பார்த்துவிட்டு புல்லையா தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

“புல்லையா. நான் சொன்னேனா இல்லையா?” என்றார் அப்பா.

புல்லையா அழாத குறைதான். படத் தயாரிப்பாளரிடமிருந்து பண உதவி கிடைக்காதது படம் வெற்றி பெறாததற்கு மற்றொரு காரணம்.

கதை வசனகர்த்தா குழுவை விட்டு விலகிவிட்டார். அவருக்குப் படம் ஓடாது என்று தெரிந்துவிட்டது. கவிராஜூ விஜயநகரம் சென்றுவிட்டார்.

மேலும் சிலர் தங்கள் சொந்த ஊர் திரும்பிவிட்டனர். சிலர் அங்கேயே தயாரிப்பாளர் தர வேண்டிய பாக்கிக்காகச் சுற்றித் திரிந்தனர். நானும் அப்பாவும் கல்கத்தாவிலிருந்து ஊர் திரும்பிவிட்டோம்.

“இதுதான் நான் கல்கத்தாவுக்கு நடிக்கப்போன கதை” என்று புன்னகைத்தார் பானுமதி.

(தாரகை ஒளிரும்)

தொடர்புக்கு:-

thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x