Last Updated : 19 Apr, 2019 12:32 PM

 

Published : 19 Apr 2019 12:32 PM
Last Updated : 19 Apr 2019 12:32 PM

ஹாலிவுட் ஜன்னல்: விடைபெறுகிறது ‘ஸ்டார் வார்ஸ்’

உலகம் முழுதும் ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப் படங்களுக்குத் தலைமுறைகளைத் தாண்டிய ரசிகர்கள் உண்டு. அவர்களிடம் இருந்து ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசை விடைபெற இருக்கிறது. 2019 இறுதியில் வெளியாகும் ‘ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’ திரைப்படம், இந்த வரிசையின் கடைசி திரைப்படம் ஆகும்.

அதே அரதப்பழசான நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான யுத்தமே கதைக்களம். ஆனால் அதில் தொன்ம கதைகளின் மாய யதார்த்தவாதங்கள் கலந்துகட்டிய அதிநவீன அறிவியல் புனைவுத் திரை வடிவமாக ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்கள் வசீகரித்து வந்தன.

‘ஸ்டார் வார்ஸ்’ கதை நடக்கும் காலத்தினை கி.மு. கி.பி. பாணியில் ‘யாவின்’ என்ற கிரகத்தில் போர் நடப்பதற்கு முன்னர் மற்றும் பின்னர்’ என இரண்டாகப் பிரிப்பார்கள். பிரபஞ்சம் முழுவதையும் தங்கள் எதேச்சதிகாரத்தின் கீழ் அடக்கி ஆள்பவர்கள் டார்க் எம்பயர்ஸ்.

அவர்களின் அடக்குமுறையை எதிர்த்து அனைத்து கிரகங்களில் இருந்தும் புரட்சி கூட்டணி உருவாகிறது. இவர்களைச் சமாளிக்கவும் மீண்டும் தங்களது சர்வாதிகாரத்தை நிலை நாட்டவும் இருள் சக்தியினர் உருவாக்கிய படைப்பிரிவே ’ஃபர்ஸ்ட் ஆர்டர்’. இதற்கு எதிராக உருவான படைப்பிரிவே ‘ஜெடி கவுன்சில்’.

புரட்சியாளர்களான ரிபல்ஸ்க்கும் சர்வாதிகாரிகளின் ஃபர்ஸ்ட் ஆர்டர் பிரிவுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் போரின் துணுக்குகளே நாம் பார்த்து வரும் ‘ஸ்டார் வார்ஸ்’ கதைகள். தொடர் முழுக்க எந்திரன்கள் உட்பட ஏராளமான கதாபாத்திரங்கள் உலவினாலும் ஸ்கைவாக்கர் குடும்பமே அனைத்திலும் பிரதானமாக நீடிப்பார்கள். 

‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்பட வரிசையைத் தொடங்கிய ஜார்ஜ் லூகாஸ், தொடக்கத்தில் 12 அத்தியாயங்களுக்கு அதைத் திட்டமிட்டிருந்தார். பின்னர் அதனை ஒன்பதாகக் குறைத்தார். அந்த வகையில் ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களின் வரிசையை, ஒவ்வொரு முத்தொகுப்பிலும் தலா 3 படங்கள் என 3 முத்தொகுப்புகளில் அடக்கலாம்.

இந்த முத்தொகுப்பின் 3 படங்களையும் 3 ஆண்டு இடைவெளிக்கு இடையே வெளியிடுவது எனவும் திட்டமிடப்பட்டது. அந்த வகையில் முதலிரண்டு முத்தொகுப்புகள் வெளியானாலும், மூன்றாவது முத்தொகுப்பில் இந்த இடைவெளி 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

ஸ்டார் வார்ஸ் வரிசையின் 9 அத்தியாயங்களும் அவற்றின் காலவரிசைப்படி வெளியாகவில்லை. முதல் முத்தொகுப்பாக 4,5,6 ஆகிய அத்தியாயங்கள் வெளியாயின. ஜார்ஜ் லூகாஸ் எழுத்து மற்றும் இயக்கத்தில் 1977, மே 25 அன்று ‘எ நியூ ஹோப்’ வெளியானது. இதனைத் தொடர்ந்து

1980-ல் ’தி எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்’, 1983-ல் ‘ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடி’ ஆகியவையும் வெளியாயின. இதன் முன்கதையாக இரண்டாவது முத்தொகுப்பின் 3 படங்களான  ‘தி பேந்தம் மெனாஸ்’(1999), ‘அட்டாக் ஆஃப் தி க்ளோன்ஸ்’(2002),  ‘ரிவெஞ்ச் ஆஃப் தி சித் (2005)’ ஆகியவை வெளியாகின. இவை அத்தியாய வரிசையில் 1,2,3 என அமையும்.

10 ஆண்டுகள் கழித்து, முதலாவது முத்தொகுப்பினைப் பின்தொடரும் கதையாக, மூன்றாவது முத்தொகுப்பின் படங்கள் 2015 முதல் வெளியாகத் தொடங்கின. அந்த வகையில் ‘தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ (2015), ‘தி லாஸ்ட் ஜெடி’ (2017) என அத்தியாய வரிசையில் 7 மற்றும் 8 ஆகியவை வெளி வந்துள்ளன.

9-வது அத்தியாயமான ‘தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்’ 2019, டிசம்பர் 20 அன்று வெளியாக உள்ளது. ஸ்டார் வார்ஸ் வரிசை திரைப்படங்களின் கடைசிப் பாகம் என்பதால் இதற்கு உலகம் முழுக்க எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 

 ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசை திரைப்படங்களைப் புதிதாகப் பார்க்கும் ரசிகர்களும் ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்களின் நிறைவைக் கொண்டாடும் விதமாக மீண்டும் பார்க்க விரும்புவோரும், ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்கள் வெளியான கால வரிசைக்குப் பதில் அத்தியாய வரிசையைப் பின்பற்றலாம். அதாவது ‘தி பேந்தம் மெனாஸ்’ (1999) தொடங்கி, 1 முதல் 8 வரையிலான அத்தியாய வரிசையைப் பின்பற்றலாம்.

இந்த 3 முத்தொகுப்புகளிலும் அடங்காத தனிப் படங்களும் ஸ்டார் வார்ஸ் வரிசையில் உண்டு. அந்த வகையில் பிரதான கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட ‘ரோக் ஒன்’ (2016), ‘ஸோலோ’ (2018) என 2 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசையின் நேரடி படங்கள் நிறைவடைந்தாலும் அதன் ‘ஸ்பின்–ஆஃப்’ திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகுமெனத் தெரிய வருகிறது.     

திரைப்படங்களுக்கு அப்பால் தொலைக்காட்சி அனிமேஷன் தொடர்கள், நாவல், காமிக்ஸ், பொழுதுபோக்கு பூங்கா, பொம்மைகள், ஆடைகள், விளையாட்டு உபகரணங்கள் என ‘ஸ்டார் வார்ஸ்’ ரசிகர்களுக்காக உலகமெங்கும்  பிரத்யேகச் சந்தை இயங்குகிறது. ஆஸ்கர் தொடங்கி ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்கள் வாங்கிக் குவித்த விருதுகள் ஏராளம்.

நவீனத் தொழில் நுட்பமும், ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களில் கையாளப்படும் தொழில் நுட்ப உத்திகளும் ஹாலிவுட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பலவிதங்களில் உந்துதலாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்பட வரிசை நிறைவடைந்தாலும் நமது நடைமுறை வாழ்க்கையில் அதன் பங்களிப்பு தொடரவே செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x