

புனே திரைப்படக் கல்லூரியின் ஒளிப்பதிவுத் துறையில் என் மூன்று வருடப் படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். 1971 -முதல் 75 வரையான ஐந்து வருடங்களில் 21-படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976-ல் எனது முதல் படமான ‘கோகிலா’-வை இயக்கத் தொடங்குகிறேன். அது கன்னட மொழிப் படம்.
கமலஹாசன், ஷோபா, ரோஜாரமணி, மோகன் ஆகியோர் அதில் நடித்திருந்தனர். கோகிலா படத்தின் மூலம் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்நாடக அரசின் விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைத்தன. கோகிலா கன்னட மொழியிலேயே சென்னையில் 150-நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது.
‘கோகிலா’வைத் தொடர்ந்து எனது முதல் தமிழ்ப் படத்தை இயக்க விரும்பினேன். அதில் எனது பால்யத்தைப் பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ்ப்படத்துக்கு ‘அழியாத கோலங்கள்’ என்று பெயர் வைத்து படத்துக்கான தொடக்க வேலைகளிலும் இறங்குகிறேன்.
ஓர் அறிமுக இயக்குநர்
இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னைத் தேடி வந்தார். என்னை அணுகிய அவர், தான் இயக்க இருக்கும் முதல் படத்துக்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்டார். இந்தப் படத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று என்னை வலியுறுத்திக் கேட்கிறார்.
இந்தப் படத்தை நான் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பிப் பரிந்துரைத்தார். ‘கல்கி’ வாரப் பத்திரிகையில் வெளிவந்த உமா சந்திரனின் ‘முள்ளும் மலரும்’ என்ற நாவலைத் தான் படமாக்க விரும்புவதாக மகேந்திரன் என்னிடம் சொன்னார். ‘கல்கி’யில்
வெளியானபோதே நான் அதைப் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வுபூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.
‘கோகிலா’வைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ்ப் படத்திலும் ஷோபா இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ‘அழியாத கோலங்கள்’ படத்தில் ஷோபாவுக்குப் பள்ளி ஆசிரியையாக ஒரு சிறிய கதாபாத்திரம்தான் வைத்திருந்தேன்.
ஆனால் ‘முள்ளும் மலரும்’ படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினியின் தங்கையாக அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்று எனக்குப் பட்டது.
ஒரே அலைவரிசை
எனது ‘அழியாத கோலங்கள்’ படத்தைத் தள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான ‘முள்ளும் மலரும்’ படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். கதை, வசனகர்த்தாவான அவர், அதற்குமுன் உதவி இயக்குநராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல.
எனவே, அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு மிக அதிகமானது. லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கேமராக் கோணங்கள் தேர்வுசெய்வது போன்ற அனைத்துப் பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்கிறேன்.படப்பிடிப்புக்குப்பின் படத்தொகுப்பிலும் நான் கூடவே இருந்தேன்.
இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். நான் அவரை அப்படித்தான் அழைப்பேன். அவர் ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் ‘முள்ளும் மலரும்’ படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
‘முள்ளும் மலரும்’ படம் 1978, ஆகஸ்ட் 15-ல் வெளியாகியது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான ‘அழியாத கோலங்கள்’ 79-ல் தான் வெளியானது. ‘முள்ளும் மலரும்’ படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உணர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார்.
‘செந்தாழம் பூவில்’ என்ற அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துக் கொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்றுவரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று விட்டது.
அந்தப் பாடல் காட்சியில் சரத்பாபு பாடுவதுபோல் எடுப்பது என்றுதான் முடிவு பண்ணப்பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை
எனது ‘கோகிலா’ படத்தில் தொடங்கியிருந்த மாண்டேஜ் (Montage) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குப் பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குத் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக நினைவு.
மிக நுட்பமான இயக்குநர்
‘முள்ளும் மலரும்’ படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குநர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு.
எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு, கலை இயக்குநர் ராமசாமி என ‘முள்ளும் மலரும்’ படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. ஆனால் ஒன்று எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் ‘முள்ளும் மலரும்’ தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் எங்கள்
மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எங்கள் உடல்கள். நாங்களல்ல!
-பாலு மகேந்திரா
வெளிச்சத்துக்கு வந்த வின்ச் நீலகிரியைத் தங்கள் திரைப்படங்களில் கதாபாத்திரமாகவே உணரவைத்தவர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும். இவ்விரு திரை மேதைகளும் இணைந்து பணிபுரிந்த படம் ‘முள்ளும் மலரும்’. இப்படம் நீலகிரியின் மஞ்சூர், பென்ஸ்டாக், கெத்தை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. கெத்தையில்தான் கனடா நாட்டின் கூட்டுறவுடன் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மீன் உற்பத்தி மையம் இருக்கிறது. அதில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் கடினமான மலைப்பாதையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணம் செல்வதற்கு இங்குள்ள வின்ச் (Winch) பெட்டியைப் பயன்படுத்துகிறார்கள். ‘முள்ளும் மலரும்’ படத்தின் கதைக் களத்தில் முக்கிய இடம்பிடித்த இந்த வின்ச் மகேந்திரனால்தான் வெளியுலகத்தின் பார்வைக்கு வந்தது. ‘முள்ளும் மலரும்’ படத்தில் காளி கதாபாத்திரத்தில் வரும் ரஜினி இந்த வின்சின் ஓட்டுநராக நடித்திருப்பார். இந்த வின்ச்சை காண இன்னமும் சுற்றுலாப் பயணிகள் மஞ்சூர், கெத்தைக்கு வந்து செல்கிறார்கள். இதைக் காண வேண்டும் என்றால் மின்வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட மோட்டார்கள் 50 ஆண்டுகளைக் கடந்து இன்னும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மலையிலுள்ள மிகப் பெரிய தொட்டியிலிருந்து நீர் மதகுகள் வழியாகத் திறந்துவிடப்படும் தண்ணீர், ஐந்து பெரிய வார்ப்பு இரும்புக் குழாய்களில் அதிவேகமாக ஓடிக் கீழே கெத்தை என்ற மலையடிவாரத்திலிருக்கும், மின்னுற்பத்தி நிலையத்தை வந்தடைகிறது. நீரின் வேகத்தால் சுழலும் விசிறிகளின் இயங்கு ஆற்றலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு நீலகிரி வந்தபோது வின்ச் நிலையத்துக்கு வந்து பழைய நினைவுகளில் மூழ்கியிருக்கிறார் மகேந்திரன். -ஆர்.டி.சிவசங்கர் |