

சில படங்களின் தலைப்பே கதை எப்படியிருக்கும் என்பதைச் சொல்லிவிடும். ஆனால், அதர்வா முதல் முறையாகக் காவல் சீருடை அணிந்திருக்கும் ‘100’ படத்தின் டீஸர் வேறு கதை சொல்கிறது. அந்தப் படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன் திரையில் விரிக்கவிருக்கும் போலீஸ் கதைதான் என்ன? அவருடனான உரையாடலிலிருந்து…
இது எந்த வகை போலீஸ் படம்?
போலீஸ் படங்கள் என்றாலே 'சிங்கம்', 'சாமி' என நினைப்போம். இது காவல் கட்டுப்பாட்டு அறைக்குள் வந்து கொட்டிக்கொண்டே இருக்கும் ஆயிரக் கணக்கான குரல்களை எப்போதும் போனில் கேட்டுக்கொண்டும் அவர்களுக்கு உதவிக்கொண்டும் இருக்கும் மனச்சோர்வு மிகுந்த போலீஸ்காரர்களைப் பற்றிய படம். பல படங்களில் கையில் வாக்கி டாக்கி வைத்திருக்கும் போலீஸ் கதாநாயகனைப் பார்த்திருப்போம்.
இதில் வாக்கி டாக்கியில் வரும் குரலுக்காக போலீஸ் அதிகாரிகள் எப்படியெல்லாம் பணிபுரிகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தால் என்ன, எங்கு, ஏன் என்ற முழுமையான தகவல் திரட்டலும் வழிகாட்டலும் கொடுத்த பின்தான் அடுத்த அழைப்புகே போக முடியும். அவ்வளவு கடினமான வேலை இது. காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் ஒருவருடைய கதை என்பதால்தான் ‘100' எனத் தலைப்பு வைத்தேன்.
சமீபத்தில் வெளியான படத்தின் டீஸரில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எடுத்தாளப்பட்டிருப்பதுபோல் தெரிகிறதே?
இக்கதையை 2017- ல் எழுதினேன். நிர்பயா வழக்கிலிருந்து நம் நாட்டில் அதிகரித்துக்கொண்டுவரும் முக்கியப் பிரச்சினை இது. இப்போது தமிழகத்தில் பொள்ளாச்சி சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்பாராதவிதமாகப் படத்தின் பின்னணி பொருந்திவிட்டது அவ்வளவுதான்.
அதர்வாவை ஏன் இந்தப் படத்துக்குத் தேர்வு செய்தீர்கள்?
போலீஸாக நடிக்காதவர்கள் யாரையாவது நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் காரணம். இளமையும் துடிப்பும் மிக்க நாயகனும் தேவைப்பட்டார். அதர்வா பொருத்தமாக இருந்தார். கதையைக் கேட்டவுடன் சம்மதிக்கவும் செய்தார்.
‘ஈட்டி' படம் தொடங்கி உடலின் தோற்றத்தைக் கட்டுக்கோப்பாகவும் வலிமையாகவும் வைத்திருப்பவர் என எனக்குப் பட்டது. நான் எதிர்பார்த்தது போலவே காக்கிச் சீருடை அணிந்ததும் கம்பீரமாக இருந்தார்.
ஹன்சிகா – அதர்வா இணை, திரையில் எடுபட்டிருக்கிறதா?
நச்சென்று பொருந்தியிருக்கிறார்கள். கால் சென்டரில் வேலை செய்பவராக ஹன்சிகா நடித்திருக்கிறார். “இதெல்லாம் ஒரு வேலையா?” என்று ஹன்சிகாவைச் செமையாகக் கலாய்ப்பார் அதர்வா. ஒரு கட்டத்தில் அதர்வாவும் இதே வேலைக்கு வந்தவுடன் ஹன்சிகா கலாய்ப்பார். இப்படி இருவருக்கும் இடையே சில அழகான காட்சிகள் உண்டு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஹன்சிகாவைக் காணலாம்.
படத்தின் கிளைமாக்ஸில் அவரை வைத்துத்தான் கதையே முடியும். இவர்கள் இரண்டுபேர் மட்டுமே படமல்ல, யோகிபாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். இவரோடு எருமை சாணி விஜய், ஹரிஜா, ராதாரவி, மைம் கோபி எனப் பலர் திரைக்கதையின் முக்கியக் கண்ணிகளாக இருக்கிறார்கள்.
‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்துக்குப் பிறகு ஏன் இடைவெளி?
அந்தப் படம் வெளியான 2016- லேயே ‘100' படத்தைத் தொடங்கிவிட்டோம். திரையுலக வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் தாமதமாகிவிட்டது. முந்தைய இரண்டு படங்கள் நகைச்சுவை. ஆனால் , இந்தப் படத்தின் கதைக்காகக் கள ஆய்வு செய்தேன்.
நீங்கள் இயக்கி, தயாரித்து வரும் ‘கூர்கா'வில் யோகிபாபுதானே நாயகன்?
‘கேங் ஓவர்' என்ற ஹாலிவுட் படத்தில் ஹீரோ யார் என்று சொல்லவே முடியாது. அந்த மாதிரி ஒரு படம் தான் ‘கூர்கா'. யோகிபாபு, மனோபாலா, மயில்சாமி, ரவிமரியா, தேவதர்ஷினி, ஒரு நாய், ஒரு வெள்ளைக்கார நாயகி இப்படிப் பலர் இருக்கிறார்கள். ஆனால், படம் முழுக்க யோகிபாபு இருப்பார். முழுநீள நகைச்சுவைப் படம். நான், எடிட்டர் ரூபன், கேமராமேன் கிருஷ்ணா மூவரும் இணைந்தே படத்தைத் தயாரித்திருக்கிறோம்.