Published : 12 Apr 2019 01:15 PM
Last Updated : 12 Apr 2019 01:15 PM

விவேக் நேர்காணல்: விரைவில் இயக்குநர் அவதாரம்!

பல படங்களில் காமெடி போலீஸாக பார்த்துப் பழக்கப்பட்ட விவேக், ‘வெள்ளைப் பூக்கள்’ படத்தில் சீரியஸ் போலீஸாகப் புது அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் துப்பறியும் போலீஸ்! ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் புதிய தடத்தில் ஆச்சரியப்படுத்தும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

குணச்சித்திரக் கதாபாத்திரம் என்பது உங்களுக்குப் புதிதல்ல; ’வெள்ளைப் பூக்கள்’ படத்துக்கான உங்களது கதாபாத்திரத் தோற்றம் புதிதாக ஏதோ சொல்ல வருகிறதே..

இந்தப் படத்தின் இயக்குநருடைய பெயரும் விவேக்தான். அவர் முடிவு செய்த தோற்றம் இது. “ நீண்டகாலம் விஜய், அஜித்தின் ஃபிரெண்டாகவே வந்துவிட்டீர்கள். கல்லூரி மாணவராகவே உங்களைப் பல படங்களில் பார்த்துவிட்டோம். அதேபோல ’சின்னப் பையன்களுக்கு அப்பாவாக நடித்திருக்கிறீர்கள். இதுவரை வளர்ந்த இளைஞனுக்கு அப்பாவாக நடிக்கவில்லை.

இதில் அந்தத் தோற்ற மாற்றம் வேண்டும். காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு அதிகாரியின் நிம்மதியை வெளிப்படுத்துகிற தோற்றமாகவும் அது இருக்க வேண்டும்” என்று இயக்குநர் சொன்னார். அவர் கேட்டதைக் கொடுத்துவிட்டேன்.

உங்களுடைய கதாபாத்திரம் பற்றி...

காவல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு அதிகாரி நான். மனைவியை இழந்தவன். பணி ஓய்வுக்குப்பின் தனியாக வசிக்கிறேன். ஆனாலும், காவல் துறை அவ்வப்போது அழைத்து, தீர்க்க முடியாத சில வழக்குகளை ‘சால்வ்’ செய்து தரும்படி கேட்கிறது. அந்த அளவுக்கு ‘இண்டெலிஜென்ஸ்’ மிக்க ஒரு அதிகாரி.

தமிழகக் காவல்துறையில் பணியாற்றிய கண்ணப்பன் ஐ.பி.எஸை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கம் கூப்பிட்டுப் பயன்படுத்திக்கொள்வார்கள். அவர் ‘ஷேடோ’விலேயே இருப்பார். மக்களோடு மக்களாக உலவிக்கொண்டிருப்பார்.

கிட்டத்தட்ட எனது கதாபாத்திரம் அப்படிப்பட்டது தான். பணி ஓய்வுக்குப் பின் எனது மகனைப் பார்க்க அமெரிக்காவுக்குச் செல்கிறேன். அங்கே எனது ‘இண்டெலிஜென்ஸு'க்கு எப்படி வேலை வருகிறது என்பதுதான் கதை.

உங்களுக்கே உரிய நகைச்சுவை இந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவைப்பட்டதா?

தேவைப்படவில்லை. எனது கதாபாத்திரத்தின் கணம் அப்படிப் பட்டது. அதனால் கதையோடு இணைந்து வரும் இயல்பான நகைச்சுவை முழுவதையும் சார்லியின் தோளுக்கு நகர்த்திவிட்டோம். படத்தில் சார்லிதான் மெயின் காமெடி செய்கிறார். நான் அதைக் கொடுத்து வாங்கும் கதாபாத்திரமாக இருக்கிறேன்.

புலன்விசாரணை என்று வரும்போது ஏற்கெனவே பரிச்சயமான கதாபாத்திரங்களின் பிரதிபலிப்பு இருக்குமா?

ஷெர்லாக்- ஹோம்ஸ் போலவோ, கணேஷ்-வசந்த் போலவோ இதில் எந்த முன்மாதிரியின் சாயலையும் நீங்கள் பார்க்க முடியாது. இது முழுவதும் இயக்குநரின் படம். குற்றத்தை ஒட்டி எனது கதாபாத்திரம் எழுப்பும் கேள்விகளும் அதற்குக் கிடைக்கும் பதில்களும்தான் எனது கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கின்றன.

இதில் எனது கதாபாத்திரம், தேடித் திரிவதில் உள்ள ‘ஃபைண்டிங் அவுட்’ என்ற அம்சம் ஆக்ஷனாக இருக்கிறது. அது வழக்கமான, வறட்டு ஹீரோயிசம் அல்ல.

அப்படியானால் உங்களது வழக்கமான பாதையிலிருந்து இந்தப் படம் உங்களை வேறு வழிக்கு நகர்த்துமா?

எனது வழியை மாற்றுகிறதோ இல்லையோ, இதுபோன்ற கதைகளுக்கு இனித் தமிழ் சினிமாவில் அதிக இடம் உண்டு என்ற நிலையை உருவாக்கும் என்று நம்புகிறேன்.

மலையாள சினிமா இதுபோன்ற பாதைக்கு எப்போதோ நகர்ந்துவிட்டது. என்னைப் போன்ற குணச்சித்திர நடிகர்களும் இந்த வழியைத் தேர்ந்தெடுக்க இந்தப் படம் உந்துதல் தரும்.

வெளிநாட்டு வாழ் இந்தியத் தமிழ் இளைஞர்கள் குழு உருவாக்கியிருக்கும் இந்தப் படத்துக்குள் எப்படி வந்தீர்கள்?

கதையைக் கேட்டு முதலில் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், இயக்குநர் விவேக்கும் அவரது குழுவும் என்னை விடவில்லை. சர்வதேச அளவில் விருதுபெற்ற குறும்படங்களை எடுத்திருப்பது மட்டுமே ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுக்கத் தகுதியாக இருக்க முடியாது என்று நினைத்தேன்.

ஆனால், இயக்குநர் விவேக்கும் அவரது குழுவினரின் திட்டமிடலும் படமாக்கமும் என்னை வியக்க வைத்துவிட்டன. இனித் தமிழ் சினிமாவின் மையம் கோடம்பாக்கம் மட்டுமே அல்ல.

நீங்கள் ஒரு திரைக்கதை எழுத்தாளர், இந்தத் திரைக்கதையில் உங்களது பங்களிப்பும் ஆலோசனைகளும் உண்டா?

இதுவொரு கூட்டு முயற்சிதான். இயக்குநரும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இருந்ததால், எனது கதாபாத்திரம் குறித்த பல ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு அதைத் திரைக்கதையில் பிரதிபலித்தார்.

வணிக சினிமாவில் பல வருடங்களாக இருப்பவன் என்ற முறையில் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் திரைக்கதையில் எப்படி இயல்பான, நம்பகமான பதற்றங்களை உருவாக்குவது சார்ந்து பல ஆலோசனைகளை வழங்கினேன்.

இயக்குநர் விவேக்கை எப்போதுதான் பார்ப்பது?

எழுத்தாளர் சுஜாதா திரைக்கதையைத் தாண்டியும் உன்னால் எழுத முடியும், எழுது என்று கூறியிருக்கிறார். 'அலைபாயுதே' படப்பிடிப்பின்போது மணிரத்னம் சார் ‘நீ ஏன் படம் இயக்கக் கூடாது?’ என்று கேட்டார்.

அதேபோல் மம்மூட்டி சார் ‘மறுமலர்ச்சி’ படத்தின் படப்பிடிப்பின்போதே கூறினார். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களுக்கு நடுவே ஒரு திரைக்கதையையும் எழுதிக்கொண்டி ருக்கிறேன். அது முடியும்போது கண்டிப்பாக இயக்குநர் விவேக் குறித்த அறிவிப்பு இருக்கும்.

‘வெள்ளைப் பூக்கள்’ படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றபோது, அங்கே ஒரு மரக்கன்றையாவது நட்டீர்களா?

அதற்கான அவசியமே இல்லாமல் போய்விட்டது. படப்பிடிப்பு நடந்த சியாட்டில் முழுவதும் காடுகளுக்கு நடுவே வீடுகள் அமைந்த ஒரு மாகாணம். அங்கே மரங்கள் அத்தனையும் அரசின் சொத்து. ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு எண் உண்டு.

மரங்களை வெட்டினால் அங்கே சிறை தண்டனை. மரங்களை அங்கே அப்படிக் காப்பதால்தான் ஆண்டில் ஒன்பது மாதங்களும் அங்கே மிதமான மழைப்பொழிவு அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழக மக்களுக்கு உண்மையிலேயே இதுவொரு மாறுபட்ட தேர்தல்தான். அந்தப் பக்கம் அம்மா இல்லை, இந்தப் பக்கம் கலைஞர் அய்யா இல்லை. அவர்களது இடத்தை இட்டு நிரப்பத் துடிக்கும் புதுமுகங்களின் அறிமுகமும் அதிகமாகியிருப்பதால், இந்தத் தேர்தல் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

கூட்டணிகள் கலங்கலாக நம் கண்ணுக்குத் தெரிந்தாலும் இந்தத் தேர்தலை உண்மையில் யாராலும் கணிக்க முடியவில்லை. பொதுமக்கள் இப்போது இன்னும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x