

இப்படியும் ஒரு நட்சத்திரம்!
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் மூச்சுவிடாத நட்சத்திரங்களில் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸும் ஒருவர். சமூக வலைதளங்களில் இவருக்கான பக்கங்கள் இருந்தபோதும் அவற்றில் பெரிதாக எதையும் இவர் பதிவிடுவது இல்லை.
பாகுபலி படங்களின் வெளியீட்டுக்குப்பின் உலக அளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் பிரபாஸ், தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். இதை அறிந்ததும் இதுவரை 7.5 லட்சம் பேர் அவரைப் பின்தொடரத் தொடங்கிவிட்டார்கள். இத்தனைக்கும் அவர் அதில் தனது முதல் பதிவையோ முகப்பு படத்தையோ கூடப் போடவில்லை.
தெலுங்குப் பாடம்!
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ஆந்திராவைச் சேர்ந்த கோமரம் பீம், அல்லூரி சீதராம ராஜு ஆகிய இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையைப் பேசவிருக்கும் இந்தப் படத்துக்காக, சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தை செட்கள் மற்றும் கிராஃபிக்ஸ் மூலம் கொண்டுவர இருக்கிறார் இயக்குநர்.
ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க கோடம்பாக்கத்திலிருந்து சமுத்திரக்கனி தமிழ்க் கதாபாத்திரம் ஒன்றில் தமிழ்பேசி நடிக்கிறார். பாலிவுட்டிலிருந்து அஜய் தேவ்கனும் அலியா பட்டும் பங்கேற்கிறார்கள்.
அலியா பட், இந்தப் படத்துக்காக தற்போது முழுவீச்சில் தெலுங்கு மொழியைக் கற்று வருவதை தனது சமூக வலைதளம் வழியே உறுதிப்படுத்தியிருக்கிறார். “தெலுங்கு மொழி கற்றுக்கொள்ளக் கடினமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் உணர்வுபூர்வமான மொழி எனத் தோன்றுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் அலியா.