Last Updated : 19 Apr, 2019 11:29 AM

 

Published : 19 Apr 2019 11:29 AM
Last Updated : 19 Apr 2019 11:29 AM

டிஜிட்டல் மேடை 23: காதலுக்கும் சுதந்திரம்!

மாதுரி தீட்ஷித் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் மற்றுமொரு மராத்திய இணைய சினிமா  '15 ஆகஸ்ட்’.

மத்திய வர்க்க மராத்தியர்கள் வசிக்கும் மும்பை குடியிருப்பு வளாகம் ஒன்று சுதந்திர தின கொண்டாட்டத்துக்குத் தயாராகிறது. வளாக முகப்பில் கொடியேற்றி இனிப்பு வழங்குவதாக திட்டம்.

எதிர்பாராதவிதமாய் கொடிக் கம்பத்தினை நிறுத்தும் குழியில் ஒரு சிறுவனது கரம் மாட்டிக்கொள்ள, குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி அவனை மீட்க போராடுகிறார்கள். அதன்பொருட்டு ஆளுக்கொன்றாய் யோசனைகளை முன்வைப்பதும் அவை சொதப்பலாவதுமாய் கதையின் ஓர் இழை ஓடுகிறது.

இன்னொரு இழை, அதே குடியிருப்பில் பெற்றோரின் அங்கீகாரம் கிடைக்காததால் பிரிவின் விளிம்பில் தவிக்கும் காதல் ஜோடியை மையமிடுகிறது. அன்றைய தினம் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்துடன் வேலையில்லாக் காதலன் தனது காதலிக்காகக் காத்திருக்கிறான். அவளோ தன்னை பெண் பார்க்க வந்த என்.ஆர்.ஐ மாப்பிள்ளையிடம் கிறங்கிப் போய் மன ஊசலாட்டத்தில் அல்லாடுகிறாள்.

சுதந்திர தினத்தன்று காலையில் தொடங்கும் கதை அடுத்த சில மணி நேரங்களில் முடிந்து விடுகிறது. அதனை 2 மணி நேர சினிமாவாக இழுத்திருப்பதும், நகைச் சுவை என்ற பெயரில் சிறுவனின் கரத்தை மீட்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் பார்வையாளர்களைப் படுத்தக்கூடியவை.

இந்தக் குறைகளை இன்னொரு பாதியாக இணைந்து பயணிக்கும் இளஞ்ஜோடியின் காதல் கதை போக்க முயல்கிறது. மற்றபடி எந்தவொரு பரபரப்போ பெரிய திருப்பங்களோ இல்லாது நேர்கோட்டில் பயணிக்கும் எளிமையான கதை ஈர்க்கிறது. அதிலும் இணைய மேடை படைப்பு களின் துருத்தல்களான பாலியல் மற்றும் போதைப்பொருள் உபயோக காட்சிகள் அறவே இல்லாதது ஆறுதல் தருகிறது. 

சுதந்திர தினத்துக்குத் தயாராகும் குடியிருப்புவாசிகளின் வாயிலாக நாட்டின் நடைமுறைப் பிரச்சினைகளைக் கிண்டலுடன் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள்.  கலைத் தாகம் கொண்ட காதலனின் பிடிவாதத்துடன், பிராக்டிகலாக யோசிக்கும் காதலியின் வாதங்கள் உரசுகின்றன. கடைசியில் நாட்டின் நலனுக்கும், காதலின் உன்னதத்துக்குமான விடைதேடலுடன் கதை நிறைவடைகிறது.

நடைமுறைக்கு இறங்கி வராத காதலனுக்கும், அமையவிருக்கும் செழிப்பான வரனுக்கும் இடையே தத்தளிக்கும் பெண்ணின் கதாபாத்திரப் படைப்பை வெகு இயல் பாக அணுகி இருக்கிறார்கள். காதல் கதையில் முடிவு எளிதில் ஊகிக்க முடிந்ததாக இருப்பினும் கடைசி அரை மணி நேரம் சுவாரசியம் கூட்டுகிறது. 

மிருண்மயி தேஷ்பாண்டே, ரகுல் பீத், வைபவ், ஆர்யன் உள்ளிட்டோர் நடிக்க, யோகேஷ் வினாயக் கதையை ஸ்வப்னநீல் ஜயகர் இயக்கியுள்ளார். வழக்கம்போல தமிழ் டப்பிங்கை நெட்ஃபிளிக்ஸ் புறக்கணித்திருப்பதால், இந்தி டப்பிங் மற்றும் ஆங்கில சப்டைட்டில் உதவியுடன் ரசிக நோக்கத்தை ஒப்பேற்ற வேண்டியிருக்கிறது.

பிரியங்கா சோப்ராவின் ‘ஃபயர்பிராண்ட்’டை தொடர்ந்து, மாதுரி தீட்ஷித்தின் ’15 ஆகஸ்ட்’ வாயிலாக நெட்ஃபிளிக்ஸில் இரண்டாவது மராத்திய சினிமா வெளியாகி இருக்கிறது. பிரமாண்டமான இந்தி திரைப்படங்கள் மத்தியில் கவனிக்கப்படாத மராட்டியப் படைப்புகளை சர்வதேச அளவில் சென்று சேர பாலிவுட் பிரபலங்கள் அடியெடுத்திருப்பது ஆரோக்கியமான மாற்றம். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் திரையுலக பிரபலங்கள் இவற்றை வழியொற்றினால், காத்திர மான படைப்புகளும் படைப்பாளிகளும் தப்பிப் பிழைக்க வாய்ப்பாகும்.

முன்னோட்டத்தைக் காண:

August 15 We 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x