

“இந்த ஆண்டு புதிய முயற்சிக்கான வருடம் என்று சொல்லலாம். ‘ஜெயில்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘4 ஜி’, ‘குப்பத்து ராஜா’, ‘வாட்ச்மேன்’, ‘100% காதல்’, ‘ஐங்கரன்’ எனத் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்களாக வெளிவரவுள்ளன. இசையிலும் அப்படித்தான்” எப்போதும்போல் மனம்விட்டுப் பேசத் தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ்குமார். அவருடனான உரையாடலிலிருந்து ஒரு சிறு பகுதி....
ஒரு வார இடைவெளியில் உங்களது இரண்டு படங்கள் வெளியாக இருப்பது பற்றி?
ஒரு படத்தின் வெளியீடு என்பது நடிகர்கள் கையில் இல்லை. தயாரிப்பாளர்தான் முடிவு எடுக்கிறார். இரண்டு படங்களுமே வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டவை. ஆதனால், நான் பயப்படாமல் இருக்கிறேன்.
‘குப்பத்து ராஜா’ படம் குறித்து…
நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராகியுள்ளார். படம் உள்ளூர் தன்மையுடன் இருக்கும். ராக்கெட் என்ற கதாபாத்திரத்தில் வட்டார வழக்கு பேசி நடித்திருக்கிறேன். வட்டார வழக்கு பேச கொஞ்சம் கஷ்டப்பட்டேன், பாபா பாஸ்கர் “இப்படிப் பேசு ஜி.வி” என்று சொல்லிக்கொடுத்து வேலை வாங்கினார். பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கியதை மறக்க முடியாது. முதல் நாள் அந்த செட்டுக்குப் போய் மிரண்டுவிட்டேன். காதல், மோதல், பழிவாங்குதல் என்று செல்லும் கதை.
‘வாட்ச்மேன்’ படம் குறித்து…
என் நண்பர் விஜய் இயக்கத்தில் நடித்திருக்கும் படம். அவருடைய பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால், படப்பிடிப்பில் எப்படி வேலை வாங்குவார் என்று எனக்குத் தெரியாது. ’வாட்ச்மேன்’ படத்தில் என்னுடைய சின்ன சின்ன மேனரிசங்களைக்கூட அவ்வளவு அழகாகக் கொண்டுவந்திருக்கிறார்.
அது ரொம்பப் பிடித்திருந்தது. தண்ணீர் கேன் போடுகிற பையனுக்கு, திடீரென்று பெரிய பணத்தேவை. அதற்காக அவன் செய்யும் விஷயத்தால் ஓரிடத்தில் மாட்டிக்கொள்கிறான். அவன் மாட்டிக்கொள்ளும் அந்த ஓர் இரவில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் ‘வாட்ச்மேன்’. மும்பையிலிருந்து வந்த ஒரு நாயுடன் நடித்திருக்கிறேன்.
விஜய், வசந்தபாலன், சசி என நீங்கள் நடித்துவரும் ஒவ்வோர் இயக்குநருமே பாணி, பணிரீதியாக மாறுபட்டவர்கள். எப்படி இருந்தது அனுபவம்?
வெவ்வேறு இயக்குநர்களுடன் பணிபுரிவதால் மட்டுமே நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. பாலா எனக்கு வேறொரு சினிமாவைக் கற்றுக்கொடுத்தார். இப்போது ‘ஜெயில்’ படத்தில் வசந்தபாலன் வேறொரு சினிமாவைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். எனது முயற்சிகள் வெற்றியா, தோல்வியா என்பதற்குள் நான் செல்வதில்லை. ரிசல்ட் என்னவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் வந்திருப்பதாகக் கருதுகிறேன்.
நீங்கள் கதாநாயகனாக நடிக்கும் படங்களின் லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. ஆனால், இசையமைக்கும் படங்கள் அப்படியில்லையே?
நடிப்பில் எனக்கு எப்படி வித்தியாசமான கதைகள் வருகிறதோ, அதேபோல் இசையமைக்க வருகிறதா என்று கேட்டால் இல்லை. இப்போது ‘அசுரன்’, சுதா கொங்கரா இயக்கும் சூர்யாவின் படம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது மறுபடியும் திரையிட்டுக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு கஷ்டப்பட்டு நான் இசையமைத்த படம். அது வெளியானபோது, ஒரு சின்ன விஷயமாகக்கூடப் பார்க்காமல் விட்டுவிட்டார்கள். ‘ஹிட் காம்போ’ என்று திரையுலகில் சொல்லுவார்கள். அது வரும்போது கண்டிப்பாக நான் சற்று அதிகமாகவே ஸ்கோர் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.
மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. தமிழக அரசு, மத்திய அரசு குறித்து...
முதலில் தேர்தல் வந்தவுடன், திரையுலகினரிடம் அரசாங்கம் குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்பதே தவறு என்று நினைக்கிறேன். அனைத்து விஷயங்களும் திரையுலகினர் கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஏழு பேர் விடுதலை, பொள்ளாச்சி சம்பவம் போன்ற பெரிய விஷயங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன நடக்கிறது, யாருக்கு வாக்களித்தால் நல்லது என்று மக்களுக்குத் தெரியும். அது அவர்களுடைய விருப்பம். அந்த விருப்பத்தில் நான் தலையிடுவதில்லை.
இந்த ஆண்டு அதிக படங்கள் தரப்போகும் நடிகர்களில் நீங்கள் தான் முதலிடத்தில் இருக்கிறீர்கள் தெரியுமா?
என் வேலையை நான் செய்துகொண்டேயிருக்கிறேன். குட்டைத் தண்ணீராக அல்லாமல், ஆற்றுத் தண்ணீராக இருக்கவே ஆசை. எப்போதுமே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி, தோல்வி எதுவுமே நம்மைப் பாதிக்காது. ஒரு இடத்தில் நின்று ‘வெற்றி கிடைத்துவிட்டது’ என்று காலரைத் தூக்கிவிட்டுக் கத்தத் தொடங்கினேன் என்றால், அந்தக் கணத்திலிருந்து எனது வீழ்ச்சி தொடங்குவதாகவே நினைக்கிறேன்.