Published : 15 Mar 2019 11:25 am

Updated : 15 Mar 2019 11:25 am

 

Published : 15 Mar 2019 11:25 AM
Last Updated : 15 Mar 2019 11:25 AM

புதிய தலைமுறை இயக்குநர்கள்: வாங்கி வந்த உப்பு எவ்வளவு?

2016-ல் வெளிவந்த ‘கிடாரி’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாத் முருகேசன். இந்தப் படம் புறத்தோற்றத்துக்கு வழக்கமான தென் தமிழகக் கதைதான். இரு சாதியினருக்கு இடையிலான மோதல் எனச் சுருக்கிப் பார்க்கலாம். ஆனால், படம் மனித மனத்தின் குரூரமான பகுதிகளின் வழியே சஞ்சரிக்கிறது.

ஒருபகுதி மக்களின் வாழ்க்கைமுறையையும் காலங்காலமாகக் கைமாற்றப்படும் நம்பிக்கைகளையும் பதிவுசெய்கிறது படம். இவற்றின் வழியே சினிமாவும் சமூகமும் நம்பும் அறத்தைப் படம் கேலிசெய்கிறது.


அப்பா ஸ்தானத்தில் இருக்கும் தன் விசுவாசமான முதலாளி கொம்பையா பாண்டியனின் மகன் உடைய நம்பியுடனான பிணக்கத்தால் வெளியேறிய கிடாரி ஒரு காட்சியில் வீடு திரும்புகிறான். மனச் சலனத்தில் இருக்கும் கொம்பையா பாண்டியன், மச்சு வீட்டிலிருந்து இதைப் பார்த்துச் சமாதானம் அடைகிறார். தாழ்வார அடுக்களைக்கு வெளியே திரும்பிவந்த கிடாரிக்கு வாழையிலையில் உணவு பரிமாறப்படுகிறது.

பிணக்கத்துக்குக் காரணமான உடையநம்பியின் மனைவியைத்தான் கிடாரி பரிமாறச் சொல்கிறான். உப்பு வைக்க மறந்தவளிடம், “முதல்ல உப்பு வைங்க மய்னி” என்கிறான். பிறகு உப்புத் தின்னும் வீட்டுக்குக் காட்ட வேண்டிய விசுவாசத்தை, மரித்துப் போன அவன் அப்பா கோட்டூர் துரை புகட்டிச் சென்றதைச் சொல்லிவிட்டுச் சாப்பிடுகிறான் அவன்.

இதுதான் இந்தப் படத்தின் மையம். இதிலிருந்து படம் முன்னேயும் பின்னேயுமாகப் பறந்து இந்தக் காட்சிக்கே திரும்புகிறது. விசுவாசம் என்னும் கற்பிதத்தைச் சந்தேகித்து விசாரிப்பதே, இந்தப் படத்தின் முதல் நோக்கம். அதன் சாட்சியாக பொய்யாழி டெய்லர் கதாபாத்திரத்தை பிரசாத் உருவாக்கியுள்ளார்.

கதையும் அவரது குரலில்தான் சிறகை விரிக்கிறது. ‘ராசராசன் சிந்துன ரெத்தம் வரலாறா ஆச்சு…’ என எளிமையும் கவித்துவமும் பிணைந்த மொழியில் அந்தக் கதை விவரிப்பு தொடங்குகிறது.

எல்லா ஊர்களிலும் சரித்திரக் கொலைச் சம்பவங்கள் நடந்த காலகட்டம் அது. நுட்பமான கொலைக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட இந்தக் காலகட்டத்தில் காவல் தெய்வங்களின் கைகளிலுள்ள ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட அந்தச் சம்பவங்களுக்கு ஒரு காவியத் தன்மை கிடைக்கிறது. அப்படியான ஒரு கொலைச் சம்பவத்தின் வழி கொம்பையா பாண்டியனின் வாழ்க்கையைச் சொல்கிறது படத்தின் விவரிப்பு. பொய்யாழி டெய்லரின் குரலில் தொடரும் இந்தக் கதை சட்டெனக் கை மாறுகிறது. மார்க்கெட் சிங்கராஜ், புலிக்குத்திப் பாண்டியன், லோக நாயகி, கடக்கரை, உடையநம்பி எனப் பலரின் கதையாக ஒரு பொது மொழிக்கு மாறுகிறது.

காவிய விவரிப்பு

காவியக் கொலைச் சம்பவங்கள் உள்ள இந்தப் படத்தை, இருபது முப்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட கதையாகவே பிரசாத் உருவாக்கியிருக்கிறார். அதைச் சொல்வதற்கான விவரிப்பாகக் காவியத்தன்மையுள்ள படங்களின் விவரிப்புமொழியைப் பின்பற்றியிருக்கிறார்.

காட்சிகளுக்கான நிறமும் காவியத்தன்மையுடன் உள்ளது. எஸ்.கே.பி. (எஸ்.கொம்பையா பாண்டியன்) என இனிஷியல் பதித்த மச்சு வீடு, சுண்ணாம்புச் சுவர் தெருக்கள், பழமையான விடுதி, திரையரங்கம், குச்சி மில் என அந்தக் காலகட்டத்தைக் காட்சிகள் மூலம் பார்வையாளர்களின் மனச் சித்திரத்தில் பிரசாத் எழுப்பிவிடுகிறார்.

கதை நிகழும் நிலத்தையும் கரிசல் விருவுகளுக்கு அடியிலிருக்கும் பிசுபிசுப்புடன் சொல்லியிருக்கிறார். கிடாரியும் கொம்பையா பாண்டியனும் தலைமறைவாக இருக்கும் காட்சிகளில் கரிசல் பகுதியின் முள்ளுக்காடுகள், வெட்டுப் பாறைகள் திருத்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சாத்தூரின் அடையாளங்களில் ஒன்றான கருப்பட்டி மிட்டாய்க்கும் படத்தில் இடமிருக்கிறது.

இழைக்கப்பட்ட சித்தரிப்பு

கதாபாத்திரச் சித்தரிப்பிலும் இயக்குநர் பாலாவுக்கு நிகரான தனித்துவத்தை பிரசாத் வெளிப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக, கொம்பையா பாண்டியன் கதாபாத்திரத்தின் மூர்க்கம் எந்தக் காட்சியிலும் தளராது கட்டப்பட்டிருக்கும். இந்த அம்சம் சினிமாவைக் கூர்மையாக்குகிறது.

புலிக்குத்திப் பாண்டியன், மார்க்கெட் சிங்கராஜ், எஸ்.என்.காளை, அவரது மருமகன், உடையநம்பி, லோகநாயகி என எல்லாக் கதாபாத்திரங்களும் யதார்த்தமாகத் துலங்கியுள்ளன. ஒரே ஒரு ஃப்ரேமில் மறைந்துபோகும் கதாபத்திரங்களையும் அந்தக் காலகட்டத்தின், அந்த மண்ணின் வண்ணத்துடன் உருவாக்கியிருக்கிறார்.

pudhiya-2jpgright

விசுவாசமும் மனசாட்சியும்

களை பிடுங்குவதைப் போலக் கதாபாத்திரங்கள், கொலைகளைப் புரிகிறார்கள். ஆனால், அதற்கான நியாயங்கள் திடமாகப் படத்தில் சொல்லப்பட்டுள்ளன. ஆர்வமூட்டும் கொலைகள் என்பதைத் தாண்டி, அதற்குள் மனித மனத்தின் இடம் என்ன என்பதை பிரசாத் காட்சிகள் மூலம் விசாரிக்கிறார்.

ஒரு துரோகத்தின் விதையில் கொம்பையா பாண்டியன் கிளை விடுகிறார். அவர் செய்த பெரிய கொலை, அவர்பால் ஊராருக்குப் பயத்தைப் பெற்றுத் தருகிறது. அந்தப் பயம், மரியாதையாகிறது. மரியாதை, வியாபாரமாகப் பெருகுகிறது. இது படத்தின் விவரிப்பில் சொல்லப்படுகிறது. இதைத்தான் மையமாகக் கொண்டதாக பிரசாத் சொல்கிறார்.

வியாபாரம் பெருகப் பெருக, புதுப் புது எதிரிகள் உருவாகிறார்கள். கொம்பையா பாண்டியனும் குத்துப்பட்டு வீழ்கிறார். இதற்குக் காரணமானவர்கள் யார் என எதிரிகளைப் பட்டியலிடும் படம், அத்தியாயம் அத்தியாயமாக ஒரு நவீன நாவல்போல் விரிகிறது. இந்த விசாரணைக்கு இடையில் குத்துப்பட்ட கொம்பையா பாண்டியனையும் கதை விசாரணைக்கு உட்படுத்துகிறது.

வியாபாரமான அவனது வீரதீரத்தையும் அது விசாரிக்கிறது. கிடாரியின் விசுவாசமும் கேள்விக்கு உள்ளாகிறது. ஒருவகையில் இது விசுவாசத்தின் தோல்வி எனலாம். விசுவாசத்தின் திட வடிவமாக உப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உடையநம்பி இறந்ததற்கு, “வாங்கி வந்த உப்பு அவ்ளோதான்” எனச் சொல்கிறது கொம்பையா பாண்டியனின் கதாபாத்திரம். அதே கதாபாத்திரம் தன் மனசாட்சியால் குத்துப்பட்டு வீழ்கிறது. கொம்பையா பாண்டியன் வாங்கிவந்த உப்பின் அளவு, அவரை வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையில் கிடத்துகிறது.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in


புதிய தலைமுறை இயக்குநர்கள்பிரசாத் முருகேசன்கிடாரி இயக்குநர்கொம்பையா பாண்டியன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x