

ஆமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அறிமுகமாகி, கவனம் ஈர்த்தவர் பாத்திமா சனா ஷேக். ஆனால், ‘தனது திரைப்பயணம் ‘தங்கல்’ படத்துக்கு முன் அவ்வளவு எளிதாக அமையவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். ‘சாச்சி 420’ படத்தில் கமல் ஹாசனின் மகளாக நடித்திருந்த அவர், தொடர்ந்து பாலிவுட்டில் புறக்கணிப்புகளை எதிர்கொண்டதாகச் சொல்கிறார். “நான் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானேன்.
ஆனால், மீண்டும் திரைத்துறைக்கு வருவது அவ்வளவு எளிதாக இல்லை. தீபிகா, கத்ரினா போல் கதாநாயகியின் தோற்றத்துடன் நான் இல்லை என்பதால் எந்தக் கதாபாத்திரம் வழங்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். புறக்கணிப்புகளைச் சகித்துக்கொண்ட என் மனத்தில் நடிப்பு மட்டும்தான் இருந்தது. அதுதான் தொடர்ந்து என்னை ஆடிஷன்களுக்குச் செல்ல வைத்தது.
ஆனால், ‘தங்கல்’ படத்துக்கு முன் எனக்கான இந்தச் சூழல் மாறியிருக்கிறது. தற்போது, ‘நெட்ஃப்ளிக்ஸ்’, ‘அமேசான்’ போன்ற தளங்களும் நடிகர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன” என்று நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார் பாத்திமா.
கங்கனாவுக்கு 24 கோடி!
‘மணிகர்ணிகா’ படத்தில் ஜான்சி ராணியாக நடித்திருந்த கங்கனா ரணாவத், அடுத்ததாகத் ‘தலைவி’ படத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படத்தை இயக்குகிறார் ஏ.எல்.விஜய். இந்திப் பதிப்புக்கு ‘ஜெயா’ எனத் தலைப்பு சூட்டப்பட்டிருக்கிறது.
“ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணத்துடன் என் வாழ்க்கைப் பயணத்தையும் இயல்பாக என்னால் இணைத்துக்கொள்ள முடிந்தது. நான் நடிக்க ஒப்புக்கொள்ளவும் இதுதான் காரணம். படத்தின் காட்சிகள் தமிழில் எடுக்கப்படுவதாலும் ஜெயலலிதாவின் கதாபாத்தி ரத்தைச் சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்காகவும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளவிருக்கிறேன்.
‘பங்கா’, ‘மென்டல் ஹை க்யா?’ படங்களின் பணிகள் முடிவடைந்தவுடன் தமிழ் கற்கத் தொடங்குவேன்” எனும் கங்கனாவுக்கு மூன்று மொழிகளுக்குமாக ரூபாய் 24 கோடி ஊதியமாக வழங்கப்பட இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிர வைத்த தீபிகா!
அமில வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து, ஒரு செயல்பாட்டாளராகத் தன்னை நிலைநிறுத்திகொண்டவர் லக்ஷ்மி அகர்வால். அவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுவரும் படம் ‘சபாக்’. அதன் முதன்மைக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார். மாலதி எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கைச் சமீபத்தில் தீபிகா படுகோன் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள், தீபிகாவைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள். இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில், 2020 ஜனவரியில் வெளியாகவிருக்கும் இதில் நடிகர் விக்ராந்த் மேசி மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.