யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது!

யூடியூப் உலா: குடும்பத்துக்கே தெரியாது!
Updated on
2 min read

சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்ற வழக்கமான பட்டியலே பெரும் பாலான விருது விழாக்களின் சட்டகமாக இருக்கும். தொலைக் காட்சிகள் நடத்தும் நடத்தும் இதுபோன்ற விழாக்கள் ஒரே தோற்றம் தருவதற்கும் இதுதான் காரணம். ஆனால், சற்று புதுமையாக, 'ஓபன் பண்ணா' என்ற யூடியூப் சேனல் முற்றிலும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களைக் கௌரவம் செய்யும் விருது விழா ஒன்றைச் சென்னையில் நடத்துகிறது. ஏப்ரல் 6-ம் தேதி மாலை 4 மணி முதல் சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

இப்படியொரு வித்தியாச விருது விழா நடத்த வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது? இது பற்றி 'ஓபன் பண்ணா' யூடியூப் சேனலின் அபிஷேக்கிடம் கேட்டபோது ஆர்வமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

“முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் சார்ந்தே நம்ம சினிமா இயங்குகிறது. ‘நான் ஒரு சண்டை இயக்குநராக வேண்டும், சவுண்ட் மிக்ஸிங் பண்ண வேண்டும், ஸ்பெஷல் மேக்-அப் துறையில் நுழையவேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை. ஆனால் சவால் நிறைந்த பல்வேறு தொழில்நுட்பத் துறைகள் திரையுலகை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன. உலகம் வியக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திறமைசாலிகளை அங்கீகரித்து விருதுகள் வழங்கி, அவர்களது படைப்புப் பங்களிப்பை வெளியுலகுக்கு அடையாளம் காட்டி கௌரவப்படுத்த விரும்பினோம். அப்படி உருவானதுதான் இந்த விருது விழா. இது உண்மையான திறமைகளின் வியர்வையை நுகர்ந்து கொண்டாடும் விழா” என்றவரிடம் எத்தனை பிரிவுகளில் விருது என்றதும் 26 என்றார்.

“உதாரணமாக, ஒரு பாடலுடைய மிக்ஸிங் பொறியாளருக்கு கிராமி விருது பட்டியலில் இடமுண்டு. அதை இங்கு வழங்கவுள்ளோம். தமிழில் ஒரு பாடல் நன்றாக இருக்கிறது என்றால், இசையமைப்பாளர் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால், அப்பாடலைச் சரியான கலவையாகத் தொகுத்து வழங்கிய பொறியாளரை நாம் கண்டுகொள்வதில்லை.

ஒரு படப்பிடிப்பில் இயக்குநருடைய அணி தான் பம்பரமாகச் சுழன்று அனைத்து சரியாக இருக்கிறதா என்பது வரை பார்ப்பார்கள். அவை எந்தப் படத்தில் சரியாக இருந்தது என்று பார்த்து விருது கொடுக்கவுள்ளோம். அந்த அணியை ஒட்டுமொத்தமாக மேடையேற்றவுள்ளோம்.” என்று கூறி ஆச்சரியப்படுத்திய அவர், விருதுக்கு தேர்ந்தெடுத்த ஒருவரைப் பற்றிக் கூறுங்கள் என்றதும் சந்துரு என்பவரைப் பற்றிக் கூறினார்.

“ஒரு படத்தின் பெயரை அழகாக வடிவமைத்ததற்காக சந்துரு என்பவருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து, ‘உங்களுக்கு விருது கொடுக்கவுள்ளோம்’ என்றவுடன், யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று கட் பண்ணிவிட்டார். அப்படித்தான் உள்ளது இன்றைய நிலைமை. விருது வென்றவர்களை தொலைபேசியில் அழைத்த போது, ‘குடும்பத்துடன் வரலாமா?’ என்று தான் கேட்டார்கள். ஏனென்றால், இவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தெரியாமல் இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் ‘ரஜினிகாந்த்’ என்று ஒவ்வொரு எழுத்தாக வரும் கிராஃபிக்ஸ் எழுத்துகளை வடிவமைத்தவர் பெயர் யாரென்று இங்கு பலருக்கும் தெரியாது. அவர் பெயர் மைக்கேல் வி.சேகர். அவரை கௌரவித்து விருது வழங்கவுள்ளோம். உலக புகழ் வாய்ந்த இயக்குநர்கள் பலருடைய படங்களுக்கு அவர் பணிபுரிந்துள்ளார். இவர்களைப்போல் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கலைஞர்களைத் தேடித் தேடி உலகத்துக்கு ‘ஓபன் பண்ணா’ என்று காட்டுவோம், அவர்களைக் கொண்டாடுவோம்” என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in