

கனவுகளுக்கு அர்த்தம் கற்பிப்பதை நம்மில் பலரும் தேவையற்ற ஒரு செயலாகத்தான் நினைப்போம். ஆனால், சில தருணங்களில் கனவுகள் அர்த்தத்துடன்தான் வருகின்றன என்பதை அடிப்படையாக வைத்துப் பயணம்செய்கிறது ‘நான்காம் விதி’ என்ற குறும்படம். சமீபத்தில் வெளியான இந்தக் குறும்படத்தை அனு சத்யா இயக்கியிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு தளங்களில் விருதுகளைப் பெற்றுவரும் இந்தக் குறும்படம், சமூக ஊடகங்களிலும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஒரு கனவு, ஒரே நேரத்தில் மூன்று நாட்களாகத் தொடர்ந்து ஐந்து பேருக்கு வருகிறது. அந்தக் கனவு ஏன் வருகிறது, அதற்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தைத் தெரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் குழம்புகிறார்கள். கனவில் வரும் நிகழ்வு உண்மையாக நடக்கப்போகிறதா, அப்படி நடக்கப்போகிறது என்றால் அதைத் தடுக்க முடியுமா, ஒரு கனவை நம்பிச் செயல்பட முடியுமா என்பன போன்ற கேள்விகள் அவர்களுக்கு எழுகின்றன.
அவர்களுக்கு வரும் கனவை விளக்குவதற்கு உதவுகிறார் மனநல ஆலோசகர் விக்ரம் (ராம்ஜி). அந்தக் கனவைப் பின்தொடர்ந்து செல்பவர்கள், தங்கள் நோக்கத்தில் வெற்றியடைந்தார்களா, இல்லையா என்பதை விளக்குகிறது ‘நான்காம் விதி’ குறும்படம்.
33 நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படம், இறுதிவரை ஓர் அறிவியல் திகில் படத்துக்கான தன்மையுடன் நகர்கிறது. ஒரு திகில் படத்துக்கான திரைக்கதையை நேர்த்தியாக எழுதியிருக்கிறார் இயக்குநர்.
புறக்கணிப்புகளை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், தங்களைப் பற்றிய சுயபரிசோதனையும் இல்லாமல் ‘ஒரு தலைக் காதல்’ என்ற பெயரில் இளம்பெண்களைத் துன்புறுத்துதல்; பலவேளைகளில் கொலை செய்யும் அளவுக்கும் சில இளைஞர்கள் சென்றுவிடும் அவலம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சமூகம் எதிர்கொள்ளும் இந்த முக்கியமான பிரச்சினைத் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தன் குறும்படத்தின் மூலம் முயன்றிருக்கிறார் அனு சத்யா.
உண்மையாக நேசித்த ஒருவரை, எந்தக் காரணத்தாலும் கொலைசெய்ய முடியாது, காதல் ஒருபோதும் கொல்லாது என்ற கருத்தைப் படம் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது. படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராம்ஜி, அர்ஜுன், மோனிஷா உள்ளிட்ட அனைத்து நடிகர்களின் நடிப்பும் குமரேஷின் படத்தொகுப்பும் கவனம் ஈர்க்கிறது.
ஓர் அறிவியல் திகில் படத்துடன் சமூக அக்கறையை இணைத்திருக்கும் இயக்குநர் அனுசத்யாவின் முயற்சி பாராட்டுக்குரியது.