

பெருநகரங்களில் வசிக்கும் மனிதர்களைப் பற்றிச் சொல்வதற்கு எப்போதும் கதைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. அதிலும், பாலிவுட் இயக்குநர்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி, மும்பை நகர்வாழ் மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் அலுப்பை ஏற்படுத்துவதேயில்லை. மும்பையின் டப்பாவாலாக்களைப் பின்னணியாக வைத்து ‘தி லஞ்ச் பாக்ஸ்’ (2013) திரைப்படத்தை எடுத்திருந்த இயக்குநர் ரித்தேஷ் பத்ரா, தற்போது வெளியாகியிருக்கும் ‘போட்டோகிராஃப்’ படத்தில் ஒரு ‘ஸ்ட்ரீட் போட்டோகிராஃப’ரின் வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறார்.
ரஃபிக் (நவாஸுத்தீன் சித்திக்கி), ‘கேட்வே ஆஃப் இந்தியா’வுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் படமெடுக்கும் ஒளிப்படக்கலைஞர். உத்திரப்பிரதேசத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இவர், பிழைப்புதேடி மும்பைக்கு வந்தவர். மிலோனி (சான்யா மல்ஹோத்ரா), உயர்நடுத்தர வகுப்பு குஜராத்திக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மும்பையின் ஒரு சி.ஏ. இன்ஸ்டிடியூட்டில் முதலிடம் பிடித்து, இறுதித் தேர்வுக்குத் தயராகிக்கொண்டிருக்கும் மாணவி. ஒரு நாள், ‘கேட்வே ஆஃப் இந்தியா’வுக்கு வரும் மிலோனியைப் படமெடுக்கிறார் ரஃபிக். அந்த ஒளிப்படம் இருவரின் பாதையையும் இணைக்கிறது. நீண்டகாலமாகத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திக்கொண்டிருக்கும் தன் பாட்டியை (ஃபருக் ஜஃப்பர்) சமாளிப்பதற்காக மிலோனியைத் தன் கேர்ள்ஃப்ரெண்டாக நடிக்கும்படி கேட்கிறார் ரஃபிக்.
எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல், இயல்பாக ரஃபிக்கின் கேர்ள்ஃப்ரெண்டாக நடிப்பதற்குச் சம்மதிக்கிறார் மிலோனி. வர்க்கம், மதம், வயது, மனநிலை என எந்த வகையிலும் ஒற்றுமை இல்லாத முற்றிலும் இரண்டு வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த இவர்கள் இருவரின் பயணம்தான் போட்டோகிராஃப்.
‘தி லஞ்ச் பாக்ஸ்’ திரைப்படத்தில், ரயில் பயணங்களைப் மையப்படுத்தி காட்சிப்படுத்தியிருந்த ரித்தேஷ் பத்ரா, இந்தப் படத்தில் மும்பையின் தெருக்களுக்கு முக்கியத்துவம்கொடுக்கும்படி பேருந்து, டாக்ஸி பயணங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். எந்தவித நாடகத்தன்மையும் மிகைப்படுத்தலும் இல்லாமல் திரைக்கதை நின்று நிதானமாக நகர்கிறது.
வசனங்கள் குறைவுதான் என்றாலும், சாதாரண, நகைச்சுவையான உரையாடலில் தொடங்கி, குழப்பமான அமைதி வழியே இந்தப் படம் பயணம் செல்கிறது. ரஃபிக், மிலோனி இருவரும் தங்களின் தனிமை உலகத்தைவிட்டு வெளியேறி, ஒருவர் மற்றொருவரின் உலகத்தைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர் என்பதைப் பல காட்சிகளில் அழகான தருணங்களாக்கியிருக்கிறார் இயக்குநர்.
‘ரஃபிக்கை ஏன் உனக்குப் பிடித்தது என்று கேட்கும் பாட்டியிடம், “அவர் என்னை எடுத்திருந்த படத்தில் இருந்த பெண், என்னைவிட அதிகமான மகிழ்ச்சியுடன், அழகுடன் தெரிந்தாள். அதனால், அவரைப் பிடித்தது” என்று மிலோனி சொல்லும் ஒரு காட்சி, ஓர் ஒளிப்படத்தின் வலிமையை பார்வையாளர்களுக்கு விளக்கிவிடுகிறது. அவர்கள் இருவருமே தனிப்பட்ட விருப்பங்களின்றி மற்றவர்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
“அந்த ‘சிஏ’ இன்ஸ்டிடியூட்டின் ‘டாப்பராக’ பில்போர்ட்டில் இடம்பெற்றிருப்பவர் நீங்கள்தானே?” என்று பேருந்தில் சகபயணி மிலோனியிடம் கேட்கும்போது, “இல்லை அது நான் இல்லை” என்று அவர் மறுக்கும் காட்சி பல விடைகளைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
படத்தின் பின்னணியில் அவ்வப்போது பழைய இந்திப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. மிலோனியின் பெயர் தெரியாதபோது, ஒரு பழைய பாடலைக் கேட்டே, கற்பனையாக அவருக்கு நூரி என்று பெயர்வைக்கிறார் ரஃபிக். தாத்தா சிறுவயதில் வாங்கித்தந்த கேம்ப கோலா வருவது நின்றுபோனவுடன், கோலா குடிப்பதையே நிறுத்திவிட்டதாகச் சொல்கிறார் மிலோனி. இப்படிப் படம் முழுக்க பழைய நினைவுகளை அசைபோடும் அம்சங்கள் பயன்படுத்தபட்டிருக்கின்றன.
நவாஸுத்தீன் சித்திக்கி, பிழைப்புதேடி மும்பைக்குப் புலம் பெயர்ந்துவரும் ஒரு தொழிலாளியை தன் நடிப்பின் மூலம் அப்படியே திரைக்குக்கொண்டுவந்திருக்கிறார். சன்யா மல்ஹோத்ராவின் கதாபாத்திரம், நடிப்பு இரண்டுமே நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன.
குறிப்பாக, அவருக்கும் அவர் வீட்டில் பணிப்பெண்ணாக வரும் கீதாஞ்சலி குல்கர்ணிக்கும் இடையிலான உரையாடல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். பாட்டியாக நடித்திருக்கும் ஃபருக் ஜஃப்பரின் கதாபாத்திரம், நகைச்சுவையுடன் வாழ்க்கைக்கான நம்பிக்கையையும் அளிக்கிறது.
ஓர் ஒளிப்படத்தின் நினைவுகளை எப்போதும் பொறுமையுடன்தான் அசைபோடுவோம். அப்படித்தான் இருக்கிறது இந்த ‘போட்டோகிராஃப்’ திரைப்படம். ஏனென்றால், வாழ்க்கையைப் போல, நினைவுகளிடம் அவசரம்காட்ட வேண்டிய தேவையில்லை.
தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in